Published:Updated:

`தேனி அருகே பாறைகளை உடைத்து பாதை அமைப்பு' - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை!

`தேனி அருகே பாறைகளை உடைத்து பாதை அமைப்பு' - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை!
`தேனி அருகே பாறைகளை உடைத்து பாதை அமைப்பு' - சூழலியல் ஆர்வலர்கள் வேதனை!

வனப்பகுதிக்குள் இருக்கும் மலையை உடைத்து பாதை அமைக்கும் வேலை மும்முரமாக நடந்துவரும் சூழலில் அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மாவட்ட வனத்துறை இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது, வடக்குமலை. இப்பகுதியில், காபி, ஏலம், மிளகு, எலுமிச்சை, மா, சப்போட்டா, இலவம் ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விரிந்துள்ள விவசாயப் பகுதிகளுக்கு அருகே உள்ள வனப்பகுதியில், ஆங்காங்கே விவசாய நிலங்கள் உள்ளன. அந்த விவசாயப் பகுதிகளுக்குள் வனப்பகுதிக்குள் செல்லும் பாதை நடைபாதையாகவே உள்ளது. அதைப் பாரம்பர்யமாகப் பயன்படுத்திவருகிறார்கள் அப்பகுதி விவசாயிகள். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சில அரசியல் செல்வாக்குப்பெற்ற முக்கியப் புள்ளிகள், வனத்துக்குள் செல்லும் நடைபாதையை சாலையாக மாற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். அதற்கான பணிகளும் வேகமாக நடந்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சாலைப் பணியில் குறுக்கிடும் பாறைகளை வெடிவைத்து உடைத்துவருகின்றனர். வனத்துக்குள் இருக்கும் நடைபாதையைச் சாலையாக மாற்ற, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட வனக்குழுவிடம் கோரிக்கைவைத்து, அதை மாநில அளவில் பரிசீலனைக்கு அனுப்பி, அங்கிருந்து மத்திய வன அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, நடைபாதையைச் சாலையாக மாற்ற முடியும். இவை எதுவும் நடக்காமல், சட்ட விரோதமாக வடக்குமலை வனத்துக்குள் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து போடி வனச்சரக ரேஞ்சர் அன்பு கூறும்போது, ``இப்போதுதான் இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட வன அலுவலருக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாவட்ட வன அலுவலர் கௌதமன் கூறும்போது, ``வடக்குமலையில் சாலை அமைக்க எந்த அனுமதியும் யாரும் பெறவில்லை. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார். ``விசாரணை ஒருபக்கம் நடத்துங்கள். அதற்குள் நாங்கள் சாலை போட்டு முடித்துவிடுவோம்” என்று சொல்லாமல் சொல்கிறார்களாம் அந்த முக்கியப் புள்ளிகள். இவர்களுக்கும் வனத்துறைக்கும் தொடர்பு இருக்குமோ எனக் கவலைதெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வடக்குமலை வனப்பகுதியில் மது குடித்துவிட்டு நடக்கும் சட்டவிரோதச் சம்பவங்கள் ஏராளம். இந்த நிலையில், சாலை அமைக்கப்பட்டுவிட்டால் குற்றச்சம்பவங்களின் கூடாரமாக வடக்குமலை மாறிவிடும் எனவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.