Published:Updated:

ஈஷா தொடர்ந்த அவதூறு வழக்கு - கோவை நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் ஆஜர்!

ஈஷா தொடர்ந்த அவதூறு வழக்கு - கோவை நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் ஆஜர்!
ஈஷா தொடர்ந்த அவதூறு வழக்கு - கோவை நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் ஆஜர்!

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கோவை ஈஷா யோக மையத்தின் மீது நில அபகரிப்பு, வனப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டுதல், சமூக ஆர்வலர் ராஜேஷ்குமாரின் மர்ம மரணத்தில் தொடர்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஃபேஸ்புக் மூலமாகப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பியூஷ் மீது ஈஷா யோக மையம் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில், பியூஷ் மானுஷ் கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதையடுத்து. வழக்கை வருகிற பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் மானுஷ், “ஈஷா யோக மையம், என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்திடம் கேட்டிருந்தேன். இதையடுத்து, ஈஷா சமர்ப்பித்திருந்த ஆவண நகல்கள் எனக்கு வழங்கப்பட்டன. அதில், ஈஷா யோக மையம், யானை வழித்தடங்களில் (Elephant Corridor) அமையவில்லை என்று வனத்துறை மற்றும் உலக வனவிலங்குகள் நிதியம் (WWF) குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே ஆவணங்களில், இது யானைகள் வாழ்விடம் (Elephant Habitat) என்பது தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், யானைகள் வாழ்விடத்தில்  கட்டடம் கட்டியதை ஈஷாவே ஒப்புக்கொண்டுள்ளது” என்றார்.

ஈஷா தரப்பு வழக்கறிஞர் மகேஷ்குமார், “ஈஷா யோக மைய கட்டடம் யானைகள் வழித்தடத்தில் இருப்பதாக, பியூஷ் மானுஷ் தவறான தகவலை பரப்பி வருகிறார். ஆனால், ஈஷா மையம், யானை வழித்தடங்களில்  (Elephant Corridor)  அமையவில்லை என்று வனத்துறை மற்றும் உலக வனவிலங்குகள் நிதியம் ஆகியவை கூறியுள்ளன. யானைகள் வாழ்விடத்தில் ஈஷா மையத்தினர் கட்டடங்கள் கட்டியுள்ளனர் என்று வனத்துறை சொல்லவே இல்லை. 'ஈஷா மையமானது வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. அந்த வனப்பகுதியானது யானைகளின் வாழ்விடம் என்று அறியப்படுகிறது' என்றுதான் வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களைப் படித்துப் பார்த்தாலே இந்த உண்மை தெரிந்துவிடும். எனவே, 'யானைகள் வாழ்விடம் என்பதை ஈஷா மையம் ஏற்றுக்கொண்டுவிட்டது' என்று கூறப்படுவது தவறு. ஆனால், பியூஸ் மானுஷ் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறார். அதனால்தான் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பியூஷுக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. 

சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளன. ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்த 'ரேலி ஃபார் ரிவ்ர்ஸ்' பேரணி மூலம் ஆறுகளின் கரைகள் ஆக்கிரமிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை” என்றார்.