Published:Updated:

நீங்களே கொடுத்தால் பத்தாயிரம்; நாங்க எடுத்தால் ஒரு லட்சம்! - பிளாஸ்டிக்கிற்கு அதிகாரிகள் அதிரடி

நீங்களே கொடுத்தால் பத்தாயிரம்; நாங்க எடுத்தால் ஒரு லட்சம்! - பிளாஸ்டிக்கிற்கு அதிகாரிகள் அதிரடி
நீங்களே கொடுத்தால் பத்தாயிரம்; நாங்க எடுத்தால் ஒரு லட்சம்! - பிளாஸ்டிக்கிற்கு அதிகாரிகள் அதிரடி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கவோ, விற்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது என தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. மாவட்ட நிர்வாகங்களும் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக அடிக்கடி அறிவிப்புகள் வெளியிட்டன. ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தடை என்றாலும், அதை முன்பே செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, 15.08.2018 அன்றிலிருந்தே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தார். இதை விரைவாகச் செயல்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, பள்ளிகள் என அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக மாற்று பொருள்காட்சி, விழிப்புஉணர்வு பிரசாரம் எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தார், மாவட்ட ஆட்சியர். ஆனாலும் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சவாலாகவே இருந்துவந்தது. தமிழக அரசின் காலக்கெடு, கடந்த டிசம்பர் 31-ம் தேதி முடிவடைந்ததையடுத்து, காஞ்சிபுரத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் தொடர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

நேற்று, காஞ்சிபுரம் நகர் நல அலுவலர் முத்து தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில், துணிக்கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பாத்ரூமில் மறைத்துவைத்திருந்தனர். அந்தக் கடைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்று, செங்கழுநீர்  ஓடை வீதியில் அமைந்துள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. அந்தக் கடைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல், செருப்புக்கடை ஒன்றிலும் பிளாஸ்டிக் பைகளைக் கைப்பற்றி 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த இரண்டு கடைகளில் மட்டுமே ஒரு டன் அளவிற்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் பைகளை அவர்களே கொடுத்துவிட்டால், பத்தாயிரம் ரூபாயும் அதிகாரிகளாகத் தேடி எடுத்தால், ஒரு லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 2.6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.