Published:Updated:

``கஸ்டமர்கள் சாப்பாடு வாங்கிப்போக சில்வர் டிபன் கேரியர்கள்!"- பிளாஸ்டிக் ஒழிப்பில் அசத்தும் ஹோட்டல்

``கஸ்டமர்கள் சாப்பாடு வாங்கிப்போக சில்வர் டிபன் கேரியர்கள்!"- பிளாஸ்டிக் ஒழிப்பில் அசத்தும் ஹோட்டல்
``கஸ்டமர்கள் சாப்பாடு வாங்கிப்போக சில்வர் டிபன் கேரியர்கள்!"- பிளாஸ்டிக் ஒழிப்பில் அசத்தும் ஹோட்டல்

கரூரைச் சேர்ந்த ஹோட்டல் நிர்வாகம் ஒன்று வாடிக்கையாளர்கள் வீட்டுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ சாப்பாடு வாங்கிப்போக ஏதுவாக டிபன் கேரியர்களை கொடுத்து அசத்தி வருகிறது. `சாப்பாட்டை சம்பந்தப்பட்ட இடத்துக்குக் கொண்டு போய் சாப்பிட்ட பிறகு, டிபன் கேரியர்களைக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும்' என்ற நிபந்தனையோடு இந்த அசத்தல் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

கரூர் நகரத்தில் பேருந்துநிலையத்திலிருந்து மிக அருகில் பழைய பைபாஸ் சாலையில் அமைந்திருக்கிறது நளன் என்கிற ஹோட்டல். சித்தர்கள் வகுத்த 'உணவே மருந்து' என்கிற முறையில் இங்கே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், அரிசியைக் கொண்டு இங்கே உணவு தயாரிக்கப்படுகிறது. குருஜி என்பவருக்குச் சொந்தமான இந்த ஹோட்டலில் தான், பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுமுயற்சியை எடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து, நம்மிடம் பேசிய இந்த ஹோட்டல் நிர்வாகியான தனபால்,

``பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து எங்கள் குருஜி அடிக்கடி அறிவுரை வழங்குவார். அதனால், பெரும்பாலும் நாங்கள் இந்த ஹோட்டலை ஆரம்பித்த காலத்திலிருந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாமல்தான் இருந்தோம். பார்சல் சாப்பாடு, பார்சல் டிபன் வாங்க வரும் வாடிக்கையாளர்களைப் பாத்திரங்கள் கொண்டு வரும்படி அறிவுறுத்துவோம். அதனால், எங்க ஹோட்டலுக்குப் பெரும்பாலும் ரெகுலராக பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களையே கொண்டு வருவார்கள். ஆனால், சிலர் கைவீசியபடி வருவாங்க. அவங்களுக்கு வேற வழியில்லாம பிளாஸ்டிக் கவர்களில் சாப்பாடு, குழம்புகள், காய்கறிகளைக் கட்டிக் கொடுக்கும் சூழல் ஏற்படும். இப்போ, அரசாங்கமே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை போட்டுள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சியாயிட்டு.

அதனால், இனி எல்லோரும் பாத்திரங்கள் கொண்டு வருவாங்கன்னு நினைச்சோம். ஆனாலும் 1-ம் தேதி சிலர் வெறுங்கையை வீசியபடியே வந்தாங்க. அதனால்தான், அப்படி வருபவர்களுக்கு நாங்களே டிபன் கேரியரில் சாப்பாட்டைக் கட்டிக் கொடுக்க நினைத்தோம். அதற்காக, ஒரு டிபன் கேரியர் 900 ரூபாய்ன்னு பத்து கேரியர்களை வாங்கி இருக்கோம். டிபன் கேரியர்களில் குழம்பு, கூட்டு வகைகளையும், வாழை இலையில் சாப்பாட்டையும் கட்டி தருகிறோம். கஸ்டமர்கள் 500 ரூபாய் பணம் கொடுத்துட்டு, நாங்க தர்ற டிபன் கேரியர்களில் சாப்பாட்டை வாங்கிட்டு போகணும். சாப்பாட்டை சம்பந்தப்பட்ட இடங்களில் சாப்பிட்டதும், டிபன் கேரியரைக் கொண்டு வந்து கொடுத்துட்டு, எங்களிடம் கொடுத்த 500 ரூபாயை வாங்கிட்டுப் போகலாம். 500 வாங்குறது ஒரு எச்சரிக்கைக்காகதான்.

அரசு உண்மையில் நல்ல முயற்சியை எடுத்துள்ளது. ஆனால்,100 சதவிகிதம் பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியப்படணும்ன்னா, மக்களாகிய நாம் அதற்கு முழுஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முடியும். இதைப் பத்தி வாடிக்கையாளர்களுக்கு உணர்த்திதான் அனுப்பி வைக்கிறோம். பிளாஸ்டிக் எமனை ஒழிக்க களத்தில் இறங்கி இருக்கும் அரசாங்கத்தோட முயற்சிக்கு எங்களாலான சின்ன ஒத்துழைப்பு இந்த முயற்சி" என்றார் மகிழ்ச்சியாக!