அலசல்
Published:Updated:

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!
பிரீமியம் ஸ்டோரி
News
மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

‘மே 31 நள்ளிரவு 12 மணிக்கு மேல், அதிகாலைக்குள் தென்மேற்குப் பருவமழையின் முதல் மழை, நீலமலையை நனைத்துவிடும்’ - இப்படி அத்தனைத் துல்லியமாக, இயற்கையுடன் பிணைந்துகிடந்ததாக நீலகிரியைப் பற்றிய தனது ஆவணத்தில் பதிவுசெய்திருக்கிறார், நீலகிரி கெஜட்டைத் தயாரித்த ஆங்கிலேய ஆய்வாளர் டபிள்யு.பிரான்சிஸ். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். உதகையில் இருந்த பர்ன் ஃபுட் ஏரி இன்று இல்லை. ஏரி இருந்ததற்கான ஆவணம்கூட உதகை நகராட்சியில் இல்லை. ஆனால், பிரபலப் புகைப்படக் கலைஞரான ஏ.டி.டபுள்யூ.பென்

1900-களின் தொடக்கத்தில் இந்த ஏரியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இன்று ஏரி இருந்த இடத்தில் போர்வெல் போட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீரை எடுத்துச்செல்கிறார்கள்! 

இவையெல்லாம் உதாரணங்கள்தான். ஒருகாலத்தில் சோலைக்காடாக இருந்த நீலகிரி, இப்போது கான்கிரீட் காடாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில், விதிகளை மீறிய கட்டடங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நீலகிரியின் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

இதுகுறித்துப் பேசிய சூழல் செயற்பாட்டாளர்கள், “ஊட்டி நகராட்சியில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அரசுக் கட்டடங்களும் அடங்கும். யானை வழித்தடங்களில் உள்ள சொகுசு விடுதிகளை அகற்றியபோது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வேலை நடந்தது. குன்னூரில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் விதிகளை மீறிக் கட்டிய கட்டடத்துக்கு, நகராட்சி கமிஷனர் சரஸ்வதி சீல் வைத்தார். கடுப்பான ஆளுங்கட்சியினர், அமைச்சரிடம் சொல்லி அவரை இடமாற்றம் செய்துவிட்டனர். இங்கிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் அலுவலகமே விதிகளை மீறிக் கட்டப்பட்டதுதான்’’ என்று அடுக்கினார்கள்.

சமூக ஆர்வலரான ஜனார்த்தனன், “ ‘1,338 கட்டடங்கள், விதிகளை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன’ என்று அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அப்போது சிலர்மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிவிட்டு, பெரிய கட்டடங்களை இடிக்காமல் விட்டுவிட்டனர். இப்போது ஆக்கிரமிப்பு, விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. மலைகளைக் காப்பதற்காக, ஜெயலலிதா கொண்டுவந்த மாஸ்டர் பிளான், இப்போது அரசால் அமல்படுத்தப்படவில்லை. விதிமீறல் கட்டடங்கள் குறித்து, முறையாக ஆய்வுசெய்யாமல், விதிகளை மீறுபவர்களுக்குத் துணைபோவதே அதிகாரிகள்தான். விதிகளை மீறிக் கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஓர் அதிகாரியையாவது, சட்டத்தின் கீழ் தண்டித்தால்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும்’’ என்றார் கோபமாக.

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

சூழலியல் ஆர்வலரான வசந்த், “தரைதளம், முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு, ஐந்தாறு மாடிகள் கட்டுகின்றனர். இயற்கையை ரசிக்கிறோம் என மலை விளிம்புகளில் கட்டடங்களைக் கட்டியுள்ளனர். தண்ணீர் வழித்தடங்களையெல்லாம் கட்டடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. கர்நாடகா மாநிலம் கூர்க்கில் ஒருமுறை நடந்ததுபோல, பெருமழை வந்தால், நீலகிரியில் பெரும் நிலச்சரிவு ஏற்படும். இந்த அபாயத்தை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. நீலகிரியின் பருவநிலையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருகாலத்தில் மின்விசிறியே தேவைப்படாத இந்த ஊரில், பல கட்டங்களில் ஏ.சி வைத்துள்ளனர். சமவெளிக் காய்கறிகள் விளைகின்றன; அங்குள்ள பறவைகள், இங்கே வருவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இவையெல்லாம் சூழல் கேட்டின் குறியீடுகள்” என்றார் வேதனையுடன்.

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம். “ஆக்கிரமிப்புகள், விதிமீறல்கள் தொடர்பாக  தொடர் ஆய்வுகள் நடத்திவருகிறோம். விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம். ஆக்கிரமிப்பு வீடுகளில் இருப்போருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறோம். கட்டடங்கள் கட்டுவதற்குக் கடுமையான விதிமுறைகளைச் செயல்படுத்தவும் திட்டமிட்டுவருகிறோம். விரைவில் நீலகிரியில் ஆரோக்கியமான மாற்றங்களைப் பார்ப்பீர்கள்” என்றார் உறுதியாக.

நீலகிரியில் மேற்கொள்ளப்படும் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!

- இரா.குருபிரசாத்
படங்கள்: கே.அருண்

கொடைக்கானல் அதிரடி!

கொ
டைக்கானலிலும் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அது தொடர்பான ஒரு வழக்கில், அந்த கட்டடங்களுக்கான மின் இணைப்புகளைத் துண்டிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதையடுத்து, ஜனவரி 24-ம் தேதி கொடைக்கானலில் 42 விடுதிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதேபோன்ற நடவடிக்கையை நீலகிரியிலும் மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.