Published:Updated:

``தங்கள் பிரச்னைக்குத் தீர்வைத் தேடும் புரிதல் அவர்களுக்கு இல்லை" - நடிகர் ஆரி!

``தங்கள் பிரச்னைக்குத் தீர்வைத் தேடும் புரிதல் அவர்களுக்கு இல்லை" - நடிகர் ஆரி!
``தங்கள் பிரச்னைக்குத் தீர்வைத் தேடும் புரிதல் அவர்களுக்கு இல்லை" - நடிகர் ஆரி!

``2011 ம் ஆண்டு இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் எழுபதாயிரம் பூர்வகுடி மக்கள் இருந்தனர், தற்போது அது கணிசமாக குறைந்து ஐம்பதாயிரம் மக்களுக்குக் குறைவாகவே அங்கு வசிக்கிறார்கள், அம்மக்களைக் காக்கும் பணியில் அந்த மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா மற்றும், நாவா NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் கைகோத்து உள்ளேன்" எனப் பேசத் தொடங்குகிறார் சமூகச் செயற்பாட்டாளரும் நடிகருமான ஆரி. 

ஒரு வாரம் தன் குடும்பத்தினருடன், நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றி, அங்குள்ள எட்டுப் பிரிவு ஆதிவாசியின மக்களோடு தங்கி, அவர்களோடு உரையாடி, அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு நிர்வாகம், தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்த நடிகர் ஆரி, அந்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

நீலகிரி மாவட்ட ஆதிவாசியின மக்களின் பிரச்னைகள் குறித்துப் பேசியவர், ``பன்னெடுங்காலமாக அம்மக்கள் செய்து வந்த விவசாயத்தையும், விலங்குகள் வளர்ப்பு, அது சார்ந்த தொழில்கள் ஆகியவற்றையும் தொடர முடியாமல் தவிக்கும் பல்வேறு மக்கள் தொடர்ந்து அம்மண்ணிலிருந்து, கூலித் தொழிலாளர்களாக வெளியூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், போனவர்கள் பெரும்பாலும் திரும்புவதே இல்லை, இயற்கையோடு இணைந்த வாழ்வியலைப் பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்தவர்களால், நவீன உலகோடு பொருந்திப்போக முடியாமல் மரணித்துவிடுகிறார்கள், இந்த நிலையை மாற்றி அந்த மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகத் தொடர் முயற்சிகளை பலவருடங்களாக நாவா அமைப்பும், அதனுடன் சேர்ந்து அரசும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தேவை நிவர்த்திக்காகவும், பல்வேறு சிறு தொழில் வாய்ப்புகள் இவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் விவசாய விளைச்சலில் சரியான வருமானம் வருவதற்காகப் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருள்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்தப் பழங்குடி இனத் தலைவர்களோடு பேசி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது" என்றார். 

தொடர்ந்து, அந்த மக்களின் வளர்ச்சியில் அவரது மாறுவோம், மாற்றுவோம் அறக்கட்டளையின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய ஆரி, ``இன்றைய சூழ்நிலையில், அவர்களின் பிரச்னைகளை வெளியே சொல்லி அதற்கான தீர்வைத் தேடிக் கொள்வதற்கான அடிப்படை புரிதல் என்பது அவர்களுக்குக் குறைவாக உள்ளது, கல்வியின்மை மட்டுமே இதற்கான காரணம் இல்லை, மாறாக அவர்களின் உளவியலே சிக்கலாக இருக்கிறது, இவர்களின் கலாசாரம் சிதையாமல் அதே சமயம், தன்னம்பிக்கையோடு இவர்கள் தொடர்ந்து உயர்வதற்கான நடைமுறை கல்வியை அவர்களின் உளவியல் மேம்பாட்டோடு சேர்த்து கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். " என்றார்.

ஓரறிவு மரங்கள், ஐந்தறிவு யானைகள் மட்டுமல்ல, ஆறறிவு மனிதர்களுக்குக் கூட இன்று நவீனத்தில் பரிணமித்த மனிதர்களால் ஆபத்து இருக்கின்றது. ஆதிக்குடிகள் அவர்களின் நிலங்களிலேயே அவர்கள் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணிலேயே அவர்களை அகதியாக்கித் துரத்திக்கொண்டிருப்பதை இனியேனும் குறைத்துக்கொள்ளுமா சமூகம் ?