வெப்பநிலை அதிகரிப்பால் ஸ்பெயினில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 679 பேர் மரணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், "இந்தக் கோடையில் ஸ்பெயின் நாட்டைத் தாக்கிய இரண்டாவது வெப்ப அலையின்போது கடந்த ஜூலை 10 - 17 தேதிவரை மட்டும் 679 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஜூலை 17 அன்று மட்டும் 169 இறப்புகள் நிகழ்ந்ததாகப் பதிவாகியிருக்கிறது. இவர்களில் 430 பேர் 85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 159 பேர் 75 முதல் 84 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 58 பேர் 65 முதல் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
மேலும், அதிக வெப்பம் காரணமாக இந்தக் கோடையில் நாட்டில் மொத்தம் 1,508 பேர் உயிரிழந்துள்ளனர்" என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த வார இறுதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை மீண்டும் 40 டிகிரி செல்ஸியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார இயக்குநர் மரியா நீரா, "வெப்ப அலை பாதகமான உடல்நல விளைவுகளுடன், காற்றின் தரத்தைச் சீரழிக்கிறது. ஐரோப்பாவில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெப்ப அலையில், சுமார் 70,000 பேர் இறந்ததாக ஐ.நா செய்திகள் தெரிவித்திருக்கின்றன. நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் வெப்ப அலைகளால் மட்டுமல்லாமல், காலநிலை மாற்றமும் நமது ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கிறது, அதனால் நோய்களின் அதிகரிப்பு போன்ற சுகாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன. உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதம் பேர் சுகாதாரத் தரமற்ற காற்றை சுவாசிக்கிறார்கள்" என எச்சரித்துள்ளார்.
