Published:Updated:

'ஆமா... இது அந்த ராட்சத பனிமனிதன்தான்!'- இந்திய ராணுவத்தின் திகில் ட்வீட்

ம.காசி விஸ்வநாதன்
கலிலுல்லா.ச
'ஆமா... இது அந்த ராட்சத பனிமனிதன்தான்!'- இந்திய ராணுவத்தின் திகில் ட்வீட்
'ஆமா... இது அந்த ராட்சத பனிமனிதன்தான்!'- இந்திய ராணுவத்தின் திகில் ட்வீட்

இமயமலைப் பகுதியில் பனி மனிதனின் காலடித் தடத்தைக் கண்டதாக இந்திய ராணுவம் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

`எட்டி’ என்று அழைக்கப்படும் மனிதனைப்போல உருவம் கொண்ட பனிமனிதன், பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இமயமலைக் காடுகளில் இவ்வகை மனிதர்கள் வாழ்ந்துவருகிறார்கள் எனப் பலரும் நம்பிவருகின்றனர். ஆனால், இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் இல்லை. நேபாள மக்கள் பனிமனிதர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் அந்த மனிதர்களைக் கண்டுள்ளதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர். சாதாரண மனிதனைக்காட்டிலும் பெரிய உருவத்தில் பனிமனிதன் இருப்பான் என்றும் பேசிவந்தனர்.

இப்படியான சூழலில் பல்வேறு நிரூபிக்கப்படாத தகவல்கள் பனிமனிதனைச் சுற்றியே வலம் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் அப்படியிருக்கிறார்களா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் விடைதெரியாமலே இருக்கிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள தகவல், இது தொடர்பாக மேலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ``மாகலு -பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருந்தபோது, பனிமனிதன் எட்டியின் 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் கிடைத்துள்ளது” என்று புகைப்படத்துடன் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாகலு - பரூண் தேசியப் பூங்கா அருகே இதேபோன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட்டைப் பலரும் நம்ப மறுத்து, இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

பல வருடங்களாக மக்களின் கதைகளில் இருக்கும் இதற்கான தேடுதல் வேட்டை, எரிக் ஷிப்டன் என்னும் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் எவரெஸ்ட் உச்சிக்குச் செல்ல மாற்றுப்பாதை தேடிக்கொண்டிருக்கும்போது இதே போன்ற தடங்களைப் பார்த்ததில் இருந்து சூடுபிடித்தது. பலரும்  இப்படி தடங்களை பார்த்ததாகத் தெரிந்தாலும் தெளிவான ஆதாரம் என்று ஒன்று கிடைக்கவில்லை. ரோமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது ஐஸ் ஏஜ் காலத்தில் இருந்த கரடியின் மரபணுக்களுடன் ஒத்துப்போவதாகத் தெரியவந்தது. ராணுவம் இப்போது கூறும் ஆதாரங்கள் ஏதேனும் முடிவுகளைத் தருமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.