Published:Updated:

ஆட்டோ கூரையில் தென்னங்கீற்று... திருச்சியில் ஓர் இயற்கை ஏ.சி ஆட்டோ!

ஆட்டோ கூரையில் தென்னங்கீற்று... திருச்சியில் ஓர் இயற்கை ஏ.சி ஆட்டோ!
ஆட்டோ கூரையில் தென்னங்கீற்று... திருச்சியில் ஓர் இயற்கை ஏ.சி ஆட்டோ!

“வழக்கமாக சவாரி புக் ஆனதும், நான் ஆட்டோவில் வைத்திருக்கும், ஸ்ப்ரே பாட்டில் மூலம் தண்ணீரைத் தென்னங்கீற்றில் ஸ்ப்ரே செய்துவிடுவேன். பயணிகள் ஆட்டோவில் ஏறும்போது வழக்கத்தைவிடக் குளிர்ச்சியாக இருக்கும். இதை உணரும் பயணிகளும் வெளியில் இருப்பதைவிட ஆட்டோவில் குளுமையாக இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு பாராட்டிச் செல்கிறார்கள்."

ச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. பைக்கோ, காரோ, ஆட்டோவோ எதுவாக இருந்தாலும் வெயிலின் அனல் உள்ளே தகிக்கிறது. ஆனால், திருச்சியில் ஒரு ஆட்டோக்காரர் மிக கூலாகப் பறக்கிறார். காரணம், அவரின் ஆட்டோ வழக்கமான ஒன்றல்ல. உச்சிவெயில் உள்ளே இறங்காதபடிக்கு ஆட்டோவின் கூரையைத் தென்னங்கீற்றால் வடிவமைத்திருக்கிறார். அந்த ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் மட்டுமல்லாமல், சக ஆட்டோ ஓட்டுநர்களும் கொஞ்ச நேரம் ஆட்டோவில் உட்கார்ந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆட்டோவில் இருந்து இறங்கும்போது அவர்கள் அனைவரும், கைகுலுக்குவதுடன், ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். நாமும் திருச்சி கே.சாத்தனூரைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் சைமன் ராஜை சந்தித்தோம்.

“அப்பா சின்ன வயசுல இறந்துட்டாங்க. அம்மா மரியபுஷ்பம் ரயில்வேயில் வேலை செய்தாங்க. நான் வீட்டுக்கு ஒரே பையன். அதனால் அம்மா என்னை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், எனக்குத்தான் படிப்பு வரல. எட்டாவதுக்கு மேல படிக்க விருப்பம் இல்லாமல், பாதியிலேயே நிறுத்திட்டு எலக்ட்ரிக்கல் வேலையைக் கற்றுக்கொண்டேன். கடந்த 20 வருஷமா அந்த வேலையைச் செய்துவந்தேன். எலக்ட்ரிக் கல் வேலை பொதுவாக ஏணி, முக்காலியில் ஏறி வேலை செய்வதுதான் அதிகம் இருக்கும். ஆனால், கொஞ்ச நாளாக என்னால் அப்படி ஏணியில் ஏறி வேலை செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் அந்த வேலையை விட முடிவுசெய்தேன்.

ஆட்டோ கூரையில் தென்னங்கீற்று... திருச்சியில் ஓர் இயற்கை ஏ.சி ஆட்டோ!

அதை என் குடும்பத்தாரிடம் சொல்லும்போது, ஆட்டோ வாங்கி ஓட்டுவது என முடிவெடுத்தோம். ஒரு வருடத்துக்கு முன்பு, லோன் போட்டு ஆட்டோ வாங்கி ஓட்டிவருகிறேன். ஆட்டோவை ஓலா நிறுவனத்தில் இணைத்திருப்பதால், கணிசமாக  ஓரளவு சவாரி அடுத்தடுத்து கிடைக்கிறது. மாதத்தவணை போகக் கையைக் கடிக்காமல் சம்பாதிக்க முடிகிறது.

இப்படியிருக்க, இந்த வருஷம் கோடை வெயில் ஆரம்பமாவதற்கு முன்பாகவே, திருச்சியில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. வெயில் தாக்கத்தை சமாளித்து ஆட்டோ ஓட்டுவது சிரமமாக இருந்தது. அதுகுறித்து என் மனைவி குமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், ஏதாவது மாற்றுவழி யோசிப்போம் எனச்சொல்லி, ஆட்டோவுக்குள் தெர்மாகோல் மேற்கூரை அமைக்க யோசனை சொன்னார். அதன்படி தெர்மாகோல் சீட் வாங்கிப் பொருத்தி ஆட்டோ ஓட்டினேன். ஆனாலும், அதன் பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாள் ஆக ஆக ஆட்டோவுக்குள் மெல்ல ஒரு நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. அதனால் அதைத் தூக்கி எறிந்தேன்.

ஆட்டோ கூரையில் தென்னங்கீற்று... திருச்சியில் ஓர் இயற்கை ஏ.சி ஆட்டோ!

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, திருச்சியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சைமன்ராஜின் முயற்சி!
வீடியோவை காண...

அதையடுத்துதான், தென்னங்கீற்று மேற்கூரை போடலாம் என முடிவெடுத்து, தென்னங்கீற்று வாங்கி ஆட்டோவில் கூரை வேய்வதைப் போல் அமைத்து, மேலே வழக்கமான ஆட்டோவில் உள்ளதுபோல் சீட் பொருத்திவிட்டோம். அந்த ஐடியா கைகொடுத்தது. வழக்கத்தைவிட ஆட்டோவுக்குள் குளுகுளுவென உள்ளது. ஏற்கெனவே எனக்குக் கீற்று பின்னத்தெரியும் என்பதால் கீற்றுக்கு மட்டும் 200 ரூபாய் செலவானது. இல்லையென்றால் அதைவிட ஒரு 200 ரூபாய் கூடியிருக்கும். இப்போது வெயில் தாக்கம் போயே போச்சு!” என்றவர் தொடர்ந்தார்.

“வழக்கமாக சவாரி புக் ஆனதும், நான் ஆட்டோவில் வைத்திருக்கும், ஸ்ப்ரே பாட்டில் மூலம் தண்ணீரைத் தென்னங்கீற்றில் ஸ்ப்ரே செய்துவிடுவேன். பயணிகள் ஆட்டோவில் ஏறும்போது வழக்கத்தைவிடக் குளிர்ச்சியாக இருக்கும். இதை உணரும் பயணிகளும் வெளியில் இருப்பதைவிட ஆட்டோவில் குளுமையாக இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு பாராட்டிச் செல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நான் சவாரிக்காகக் காத்திருக்கும் நேரத்தில் சக ஆட்டோ ஓட்டுநர்கள், அதிகமாக அவர்கள் என்னுடைய ஆட்டோவில் உட்கார்ந்துகொள்ள விருப்பப்படுகிறார்கள். அவர்களில் பலரும் வாடகை ஆட்டோ ஓட்டுவதால், இதைப்போல அவங்க ஆட்டோவை மாற்ற விருப்பம் இருந்தாலும், மாற்றமுடியவில்லை. முதலாளி என்ன சொல்வாரோ என வருத்தப்படுகிறார்கள். என் ஆட்டோவில் ஏறியவர்களைச் சந்தோஷமாக சவாரி அழைத்துச் சென்று விடுகிறேன். அதைவிட ஒரு ஓட்டுநருக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க!" எனச் சிரிக்கிறார் சைமன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு