Published:Updated:

சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் - மக்களை நசுக்கவா... இயற்கையை பாதுகாக்கவா?

இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய 17 வருவாய் கிராமங்கள், சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளன.

சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் - மக்களை நசுக்கவா... இயற்கையை பாதுகாக்கவா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய 17 வருவாய் கிராமங்கள், சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளன.

Published:Updated:
இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை

“ஏற்கெனவே வன உயிரினப் பாதுகாப்புச் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதி, தனியார் காடுகள் சட்டம் போன்றவற்றால் நாங்கள் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்துவருகிறோம். இதுபோதாதென, சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலத்தையும் கொண்டுவந்து எங்களை மேலும் நசுக்கப்பார்க்கின்றனர்” என்று அலறுகின்றனர் சம்பந்தப்பட்ட கிராம மக்கள்.

களியல் எல்லையிலிருந்து சிற்றாறு அணைப் பகுதியின் கடையாலுமூடு ஜங்ஷன் வரை, 19,605 ஹெக்டேர் அளவுக்கு இந்தச் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமையப்போகிறது. மங்களம் கிராமப் பகுதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், சுங்கான்கடைப் பகுதியில் மூன்று கிலோமீட்டர் தூரமும் மற்ற இடங்களில் 200 முதல் 300 மீட்டர் தூரமும்தான் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டத்துக்குள் வரப்போகின்றன. `இதனால் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று வனத்துறை தரப்பில் சொல்லப் பட்டாலும், இதற்கான எதிர்ப்புக்குரல் ஒருபுறம் ஓங்கி ஒலிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் - மக்களை நசுக்கவா... இயற்கையை பாதுகாக்கவா?

இதுகுறித்து குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கச் செயலாளர் பாலச்சந்திரன் நாயரிடம் பேசினோம். “குமரி மாவட்டத்தின் வனப் பகுதியையொட்டி சுமார் 19,000 ஹெக்டேரில் தனியார் ரப்பர் விவசாயம் இருக்கிறது. முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு மறுநடவு செய்யவேண்டுமென்றால் கூட, வனக்குழுவிடம் அனுமதி பெற்றாக வேண்டும். காரணம், தனியார் காடுகள் சட்டம். அனுமதி வாங்கி மறுநடவு செய்துகொள்ள வேண்டியதுதானே என்று கேட்பீர்கள்... அனுமதி கிடைப்பது சாதாரண காரியமல்ல. பத்து வருடங்களுக்குமேலாகப் போராடியும் அனுமதி கிடைக்காத பலர் இருக்கின்றனர். மறுநடவு செய்ய முடியாததால் பெரும்பாலான ரப்பர் தோட்டங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. இப்படி வனத்துக்காகவும் வன விலங்குகளுக்காகவும் கொண்டுவரப்படும் சட்டங்கள், பொதுமக்களையும் விவசாயிகளையும் வெகுவாகவே பாதிக்கின்றன. இந்த நிலையில்தான், சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் என்கிற அடுத்த சிக்கல் வந்திருக்கிறது.

பாலச்சந்திரன் நாயர், டேவிட்சன், ஆனந்த்
பாலச்சந்திரன் நாயர், டேவிட்சன், ஆனந்த்

அது அமைந்துவிட்டால், அந்த எல்லைக்குட்பட்ட சாலைகளில் மாலை 6 மணிக்குமேல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். புதிய சாலைகள் அமைக்கவும் ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தவும் தடை விதிப்பார்கள். இப்படி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை அடுத்தடுத்துக் கொண்டு வருவார்கள். விவசாயிகள் ஒருபோதும் சூழலியலுக்கு எதிரானவர்கள் கிடையாது. சொல்லப்போனால், அவர்கள்தான் சூழலியலைப் பாதுகாக்கின்றனர். இதுபோன்ற சட்டங்களுக்கு அவசியமே இல்லை. ஆகையால், இந்த முயற்சியை கைவிட வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக வனத்துறை யினரிடம் பேசினோம். “ஒவ்வொரு வனச் சரணாலய எல்லையிலிருந்தும் 10 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக அறிவிக்கலாம். நிலம், நீர், காற்று போன்றவை மாசுபடாமல் தடுப்பதற்காகவே இதை முன்னெடுக் கிறோம். கல்குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சூழலியலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகள், பெரிய நீர்மின் திட்டங்கள், ஆபத்து விளைவிக்கும் பொருள்களைப் பயன்படுத்தவும், அதுசார்ந்த உற்பத்திகளைச் மேற்கொள்ளவும் தான் அனுமதி மறுக்கப்படும். மற்றபடி, உள்ளூர் மக்கள் தேவைக்காக வீடு கட்டுவதையோ, சாலை விரிவாக்கம் செய்வதற்கோ எந்தப் பிரச்னையும் வராது. மக்கள் புரிந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்கின்றனர்.

அடுத்ததாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வியாளர் எஸ்.எஸ்.டேவிட்சனிடம் பேசினோம்.

“இது புதிய சட்டமல்ல... ஏற்கெனவே உள்ளதைத்தான் அமல்படுத்துகின்றனர். காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளை உருவாகி வரும் நிலையில் சூழலியலைப் பாதுகாக்க இதுபோன்ற சட்டங்கள் அவசியம். உலக அளவில் சூழலியல் வளமிக்க 15 இடங்களில் இமயமலையின் கிழக்குப் பகுதியும், மேற்குத் தொடர்ச்சி மலையும் மிக முக்கிய மானவை. மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் மாறாமல் பாதுகாக்க வேண்டுமென்றால், இதுபோன்ற விஷயங்களை நாம் வரவேற்க வேண்டுமே தவிர, எதிர்க்கக் கூடாது. காடுகளை அழித்து, மலையை உடைத்து பணத்தில் கொழிக்கும் சிலர்தான் திட்டமிட்டு இதை எதிர்க்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஆனந்த் கூறுகையில், “இதைப் பற்றிய தெளிவு இல்லாததால்தான் தேவையில்லாத அச்சம் ஏற்படுகிறது. மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில், இதுகுறித்த சட்டவரைவின் தமிழாக்கம் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தமிழாக்கம் செய்து அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளோம். அனுமதி வந்ததும் கிராம சபை உறுப்பினர்களிடம் வழங்குவோம். அதைப் படித்த பிறகு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையில்லாத அச்சம் நீங்கிவிடும்”என்றார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற் சாலைகள் அவசியம்தான். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவனும் உயிர்வாழ சூழலியல்தான் அதைவிட முக்கியம்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ஆர்.ராஜேஷ் என்கிற வாசகர், `கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தாலுகாவுக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மக்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டு புலிகள் சரணாலயம் அமையவிருக்கிறது என்று கூறுகிறார்கள். உண்மையில் எங்கள் பகுதியில் என்னதான் நடக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.

உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால், http://bit.ly/DoubtOfCommonMan என்ற இணையப் பக்கத்தில் பதிவுசெய்யலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு உரிய பதில்கள் பிரசுரமாகும்.