Published:Updated:

10 பறவைகளுக்கு 20 ஏக்கர் நிலம்! பாதுகாப்பு முயற்சியில் அசத்திய தாய்லாந்து அமைப்புகள்!

கரண்டி மூக்கு உள்ளான்
கரண்டி மூக்கு உள்ளான் ( Wouter van der Ham )

நாங்கள் வாங்கியுள்ள இந்தப் பகுதி, கரண்டிமூக்கு உள்ளானின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகப்படுத்தும். உவர் நிலங்களும் உவர் குளங்களுமே அந்தப் பறவைகளின் சிறந்த புகலிடம்.

கரண்டிமூக்கு உள்ளான் (spoon-billed sandpiper) என்ற அரிய வகையைச் சார்ந்த 10 பறவைகளுக்காக, சுமார் 20 ஏக்கர் நிலத்தைத் தாய்லாந்து நாட்டிலுள்ள இரண்டு அமைப்புகள் வாங்கியுள்ளன. தாய்லாந்து வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்த இடம், இனி கரண்டிமூக்கு உள்ளானின் தனி புகலிடமாக அமையும் என இந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் உள்ள ஒரு வகைதான் கரண்டிமூக்கு உள்ளான். பெயருக்கு ஏற்ப இதன் மூக்கு, கரண்டிபோல நீண்டிருக்கும். கரை ஓரங்களில் வசிக்கும் இந்தச் சிறிய பறவை, வருடத்துக்கு சுமார் 8,000 கி.மீ தூரம் சர்வ சாதாரணமாகப் பயணிக்கிறது. சில பத்தாண்டுகளாகவே இவற்றின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

Palk Thale, Inner Gulf of Thailand
Palk Thale, Inner Gulf of Thailand
BCST

சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், `உலகெங்கிலும் சுமார் 200 ஜோடிகளே வாழ்கின்றன. அதோடு, வயது முதிர்ந்த தனித்து வாழும் பறவைகள் 240-லிருந்து 456 வரை இருக்கும்' என்று கணக்கீடு செய்துள்ளது. அத்துடன் அதிவேகமாக அழிந்து வரும் பறவைகளின் பட்டியலிலும் கரண்டிமூக்கு உள்ளானைச் சேர்த்துள்ளது.

ரஷ்யாவில் தன்னுடைய இனப்பெருக்கக் காலத்தை முடித்துவிட்டு, குளிர்காலம் தொடங்கும்போது தென்கிழக்கு ஆசியா நோக்கிப் பயணப்படுகிறது. அதற்கு இது சாதாரண பயணம் அல்ல. கிழக்கு ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய ஆசிய பயணத்தில் அவை பல லட்சக்கணக்கான எதிரிகளை எதிர்கொள்கின்றன.

நா.முத்துக்குமார் சொன்னது போல் `கடல்தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது'. அப்போ கரண்டிமூக்கு உள்ளான் எங்கு ஓய்வு எடுக்கும்?

அப்படி ஓய்வெடுக்கும் இடங்களில் ஒன்றுதான், தாய்லாந்து நாட்டில் உள்ள பாக் தாலே (Pak Thale) ஈரநிலப் பகுதி. தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்தக் கடலோர மண் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தது. கரண்டி மூக்கு உள்ளானுக்கு மட்டுமல்ல, `ஊரு விட்டு ஊரு; நாடு விட்டு நாடு; கண்டம் விட்டு கண்டம்' பறந்து வரும் பல்வகைப் பறவைகளுக்கும் தாய்லாந்தின் இந்தப் பகுதிதான் தற்காலிக தாயகம்.

Sandpipers
Sandpipers
Elis Simpson

இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட மழைக்காடு அறக்கட்டளையும் (Rainforest Trust) தாய்லாந்து பறவைகள் பாதுகாப்பு சங்கமும் (BCST) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாக் தாலே பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கியது. அதை `முக்கியமான பறவைகள் வசிக்கும் பல்லுயிர் பகுதி' என்று அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதுகுறித்து மழைக்காடு அறக்கட்டளையின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஏஞ்சலா யாங் (Angela Yang) பத்திரிகையாளர்களிடம், ``நாங்கள் வாங்கியுள்ள இந்தப் பகுதி, கரண்டிமூக்கு உள்ளானின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகப்படுத்தும். உவர் நிலங்களும் உவர் குளங்களுமே பறவைகளின் சிறந்த புகலிடம். இவற்றை விட்டால் குறைந்த அலைகள் உடைய ஈரநிலப்பகுதியில் அவற்றால் உணவு தேட மட்டுமே முடியும். தங்குவதற்கு உயர் அலைப் பகுதிகளைத் தேட வேண்டிவரும். நாங்கள் வாங்கியுள்ள இந்த உவர் நிலத்தில், தாழ்ந்த அலை - உயர்ந்த அலை இரண்டுமே இருப்பதால், அவற்றுக்கு உணவு தேடுவது, தங்குவது என்று இரண்டுமே சாத்தியப்படும்" என்றார்.

பாக் தாலேவில் ஓய்வு எடுக்கும் கரண்டி மூக்கு உள்ளான் பறவைகள்
பாக் தாலேவில் ஓய்வு எடுக்கும் கரண்டி மூக்கு உள்ளான் பறவைகள்
BCST

பறவை பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள், இந்த இடத்தைப் பிரத்யேகமாகக் கரையோரப் பறவைகளுக்கே விட்டுவிட முடிவு செய்துள்ளனர். சர்வதேச கரண்டி மூக்கு உள்ளான் பாதுகாப்பு அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் சாயம் சௌத்ரி (Sayam Chowdhury), ``தாய்லாந்தில் இந்த நிலப்பரப்பை விட்டால், வேறு எந்தப் பகுதியும் கரண்டிமூக்கு உள்ளானுக்குச் சாத்தியப்படப் போவதில்லை" என்றார். இந்த நிலப்பகுதியில் தற்போது 10 கரண்டிமூக்கு உள்ளான்கள் குளிர்காலம் தோறும் வருகின்றன. வெறும் 10 பறவைக்காகவா 20 ஏக்கர் நிலம்? ஆம்! அவை பத்துதான். ஆனால், உலகில் உள்ள மொத்தத் தொகையில் இவை 2% என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இடத்தை வாங்குவதற்கு மழைக்காடு அறக்கட்டளை, இந்திய மதிப்பில் சுமார் 1.60 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. மீதிப் பணத்தைக் கூட்டு நிதியின் (Crowd funding) மூலம் மக்கள் மத்தியில் வசூலித்துள்ளனர். இந்தப் பகுதியில் தற்போது உப்பளத் தொழிலாளர்களைத் தவிர வேறு யாரும் வசிப்பதில்லை. வேறு திட்டங்கள் வருவதற்கு முன்னமே இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டுவிட்டதால், இந்த நிலத்தின் சூழலியலைப் பாதுகாக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்நாட்டுச் சூழலியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பறவைகள் பாதுகாப்பு
பறவைகள் பாதுகாப்பு
Sayam.U.Chowdhury

பறவைகளின் தற்காலிகத் தங்குமிடங்கள், ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்படுவதும், அவற்றின் அழிவுக்கு ஒரு முக்கியக் காரணம். தாய்லாந்தின் இந்த முயற்சியை இந்தியாவிலும் பின்பற்றினால், இங்கு வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளால் கிடைக்கும் சூழலியல் நன்மைகளும் தக்க வைக்கப்படும். பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி வரும் பறவைகளுக்கு அடைக்கலம் தராது போனாலும், அழிவு தராமல் இருக்கலாமே!

அடுத்த கட்டுரைக்கு