Published:Updated:

`காடாக மாற்றியதால் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியது' 300 ஏக்கர் காட்டை உருவாக்கிய மணிப்பூர் மனிதர்!

லோய்யா ( photo: east mojo )

கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்த மலைத்தொடர் தரிசு நிலமாக இருந்தது. லோய்யா மூலம் தரிசுநிலங்கள் அடர்வனமாக மாறியுள்ளது. இது வனமாக மாறவில்லையென்றால் நிலமானது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இந்த 300 ஏக்கர் காடுகளில் சுமார் 25 வகையான மூங்கில்கள், 100-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன.

`காடாக மாற்றியதால் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியது' 300 ஏக்கர் காட்டை உருவாக்கிய மணிப்பூர் மனிதர்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்த மலைத்தொடர் தரிசு நிலமாக இருந்தது. லோய்யா மூலம் தரிசுநிலங்கள் அடர்வனமாக மாறியுள்ளது. இது வனமாக மாறவில்லையென்றால் நிலமானது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இந்த 300 ஏக்கர் காடுகளில் சுமார் 25 வகையான மூங்கில்கள், 100-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன.

Published:Updated:
லோய்யா ( photo: east mojo )

மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு மாவட்டமான இம்பாலைச் சேர்ந்த 47 வயது நபர், 20 ஆண்டுகால உழைப்பினால்  தரிசு நிலத்தை பலவகையான தாவர இனங்கள் கொண்ட 300 ஏக்கர் காடாக மாற்றியுள்ளார்.

இம்பாலின் உரிபோக் கைடெம் லைகாய் பகுதியைச் சேர்ந்தவர் மொய்ராங்தெம் லோய்யா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக இம்பாலின் புறநகரில் உள்ள லாங்கோல் என்னும் மலைத்தொடரில் பலவகையான தாவரங்களை நட்டு வருகிறார்.

மொய்ராங்தெம் லோய்யா
மொய்ராங்தெம் லோய்யா

சிறுவயது முதலே இயற்கை மீது அதீத நேசம் வைத்திருக்கிறார் லோய்யா. இது குறித்து அவர் PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், ``2000-ம் ஆண்டின் காலகட்டத்தில் நான் சென்னையில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்றேன். பின்னர், கோப்ரு மலைக்குச் சென்றேன். அடர்ந்த மரங்களைக் கொண்ட கோப்ரு மலைத்தொடரில் மரங்கள் வெட்டப்பட்டு காடு அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தேன். இயற்கை அன்னைக்கு இவற்றைத் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் ஏற்பட்டது.

இந்தத் தேடுதல்தான் இம்பாலின் புறநகரில் உள்ள லாங்கோல் என்னும் மலைத்தொடருக்கு என்னை அழைத்துச் சென்றது.  லாங்கோல் மலைத்தொடரை, `புன்ஷிலோக் மாரு' அல்லது `வாழ்க்கையின் வசந்தம்' (Spring of Life) என்றும் அழைப்பர். இந்த மலைத்தொடரை நான் தற்செயலாகத்தான் பார்த்தேன்.

மொய்ராங்தெம் லோய்யா
மொய்ராங்தெம் லோய்யா

பயிரிடுவதற்காக மற்ற தாவரங்களை வெட்டி அழிக்கும் ஜும்  முறை காரணமாகத் தரிசாக இருந்த பகுதியை அடர்ந்த, பசுமையான வனமாக மாற்ற நேரம் எடுத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயம் முடியும் என்று தோன்றியது.

 நான் அந்த மலைத்தொடரிலேயே ஒரு குடிசையை அமைத்து ஆறு வருடங்கள் தங்கினேன். மனிதர்களின் நடவடிக்கையால் அழிக்கப்பட்ட அந்தப் பகுதியில் மூங்கில், கருவேலம், பலா மரங்கள் மற்றும் தேக்குகளை நட்டேன். நான் முடிந்தவரை மரக்கன்றுகளை வாங்கி நடுவேன். பெரும்பாலும் மழைக் காலங்களுக்கு முன் நடுவேன். அப்போதுதான் கன்றுகள் விரைவாக வளரும். காடுகளை உருவாக்குவதே என் வாழ்நாள் பணி என்று நினைத்து மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் லோய்யா வனவிலங்கு மற்றும் வாழ்விடம் பாதுகாப்பு சங்கத்தை (WAHPS) நிறுவியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ``சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடுவது நாம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை ஆகும். சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதும்தான் இந்த சங்கத்தின் நோக்கம்" என்கிறார்.

மொய்ராங்தெம் லோய்யா
மொய்ராங்தெம் லோய்யா

லோங்கோல் மலைத்தொடரில் மரங்களை நடும் லோய்யாவின் இந்த முயற்சிக்கு மணிப்பூர் மாநில வனத்துறை அதிகாரிகள் உறுதுணையாக இருந்து வருகின்றனர். சுமார் 25 வகையான மூங்கில்கள், 100-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் கொண்ட இந்த 300 ஏக்கர் காட்டில், மான்களும், முள்ளம்பன்றிகளும், ஏராளமான பாம்புகளும் வாழ்வதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அதிகாரிகள் கூறுகையில், ``கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மலைத்தொடர் தரிசு நிலமாக இருந்தது. லோய்யா மூலம் தரிசு நிலங்கள் அடர்வனமாக மாறியுள்ளது. இது வனமாக மாறவில்லையென்றால் நிலமானது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்கள்.