நீலகிரி மருத்துவக் கல்லூரிக்காக வெட்டப்படும் மரங்கள்! - சோலை மரக் கன்றுகளை நட கோரிக்கை
புதிதாக மருத்துவக் கல்லூரி அமைய உள்ள 25 ஏக்கர் நிலத்தில், சுமார் 2 ஆயிரம் கற்பூர மரங்கள் உள்ளன. கல்லூரி அமைப்பதற்காக மரங்களை அகற்றும் வகையில், வனத்துறை சார்பில் இந்த மரங்களில் குறியீடுகள் இடப்பட்டுள்ளன.

மருத்துவ வசதிகள் குறைந்த நீலகிரி மாவட்ட மக்கள், உயர்தர மருத்துவ மேல்சிகிச்சை வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூர், கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நேரம் அதிகம் என்பதால், சில சமயங்களில் குறித்த நேரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நீலகிரியில் உயர்தர மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், ஊட்டியில் அனைத்து வசதிகளுடன்கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்திவந்தனர்.

மேலும், ஊட்டியில் உள்ள ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அந்தக் கட்டடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில், நீலகிரியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ஹெச்.பி.எஃப் கட்டடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக புதிதாகக் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்காக, ஊட்டி ஹெச்.பி.எஃப் அருகே கோல்ஃப் மைதான சாலைக்கும் கூடலூர் சாலைக்கும் இடையே வனத்துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, கூடலூரில் வனத்துறைக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றிவந்த ரவீந்திரன், பதவி உயர்வு பெற்று ஊட்டியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஊட்டியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் கட்ட ரூ.447 கோடியே 32 லட்சம் நிதியும், நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடுசெய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிதாக மருத்துவக் கல்லூரி அமைய உள்ள 25 ஏக்கர் நிலத்தில் சுமார் 2 ஆயிரம் கற்பூர மரங்கள் உள்ளன. கல்லூரி அமைப்பதற்காக மரங்களை அகற்றும் வகையில், வனத்துறை சார்பில் இந்த மரங்களில் குறியீடுகள் இடப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக ஹெச்.பி.எஃப் பகுதியில் இடம் தேர்வுசெய்யப்பட்டு, புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. மற்ற பகுதிகளைக் காட்டிலும் நீலகிரிக்கு கட்டுமானப் பொருள்களைக் கொண்டுவருவதில் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காகத் தனி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கும்" என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "புதிய மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தில், சுமார் 2 ஆயிரம் கற்பூர மரங்கள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்காகக் குறியீடுகள் இடப்பட்டுள்ளன. விரைவில் டெண்டர் விடப்பட்டு அவை வெட்டி அகற்றப்படும்" என்றனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில் ," இந்த இடத்தில் 2 ஆயிரம் கற்பூர மரங்கள் அகற்றப்பட உள்ளன. இதற்கு மாற்றாக, இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமான சோலை மரக்கன்றுகளை நட வேண்டும் எனக் கோரிக்கை" வைக்கப்பட்டுள்ளது என்றனர்.