Published:Updated:

27 லட்சம் சூழலியல் அகதிகள் - கழிவுக்கூடங்களாகும் கழிமுகப் பகுதிகள்

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

2050 -ம் ஆண்டு. உலக வரைபடத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இந்தியாவின் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியும் மணலுக்குள் புதைந்தும்விட்டன. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களை நோக்கி நகரும் மக்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதீத மக்கள் தொகையால், அதீத நுகர்வால் கழிவுகளில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன பெருநகரங்கள். உள்நாட்டுச் சூழலியல் அகதிகளின் எண்ணிக்கை கோடிகளில் உயர்ந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் எனில் மத்திய இந்தியா வெப்பத்தில் தகிக்கிறது. மழைக்காடுகள் நிலச்சரிவுகளில் புதைந்துகொண்டிருக்கின்றன. உலர் காடுகள் வறட்சியில் தவித்துக் கொண் டிருக்கின்றன. பதற வேண்டாம்... இது புனைவுதான். ஆனாலும் இப்போதைக்கே இதை நோக்கிய இந்தியாவின் பயணம் மிகவேகமாகத் தான் இருக்கிறது. அழிவுகள், தினம் தினம் நம் கண்முன்னே காட்சிகளாக விரிந்துகொண்டுதான் இருக்கின்றன.

2019-ம் ஆண்டு, இரண்டு ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஒன்று, இரும்புக்காலத்தின்போது வாழ்ந்த மக்கள் மேற்கொண்ட இடப் பெயர்வுகள் பற்றியது. இரண்டாவது, 2019-ம் ஆண்டில் மக்கள் மேற்கொண்ட இடப் பெயர்வுகள் பற்றியது. இயற்கைப் பேரிடர்கள், தற்காலிக இடப்பெயர்வு களைக்கொண்டு வருவது இயல்பு. ஆனால், இந்த இடப்பெயர்வுகள் அப்படியானவை அல்ல. இரும்புக்கால இடப்பெயர்வு, மக்களை 7000 ஆண்டுகளாக வாழ்ந்த நிலப்பகுதியி லிருந்து பசுமையான நிலங்களை நோக்கி நகரவைத்தது. ஆனால், 2019-ம் ஆண்டின் மக்கள் இடப்பெயர்வு மிக மோசமானது.

உலகளவில் நடைபெறும் இடப் பெயர்வு குறித்து ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, இந்தியாவில் இந்த ஆண்டு மட்டுமே 27 லட்சம் பேர் உள்நாட்டுச் சூழலியல் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடலோரப் பகுதிகள், தீவுகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெப்பமயமாதல், கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். இந்த ஆண்டில் ஏற்பட்ட பேரிடர்களால், தங்களுடைய வீடுகளை இழந்த 16 லட்சம் மக்கள் இன்னும் முகாம்களில்தான் வாழ்வ தாகக் குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.

காலநிலை மாற்றம் என்பது வெறும் வதந்தி என்று அரசுகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அது உண்மை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இயற்கை. கடந்த சில பத்து ஆண்டுகளாகவே சிறிது சிறிதாக நிகழ்ந்து இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது காலநிலை மாற்றம். தினமும் அதற்கான விளைவுகளை, இழப்புகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் விளிம்புநிலை மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். 2019-ல் அதன் தீவிரம் அதிகம்.

கழிமுகப் பகுதிகள்
கழிமுகப் பகுதிகள்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, மற்ற மக்கள் அமைப்புகளுடன் இணைந்து நிர்வாகச் சிக்கல்கள் குறித்த கணக்கெடுப்பை 354 தொகுதிகளில் நடத்தியது. அதில், குடிநீர்ப் பிரச்னை குறித்த விழிப்புணர்வு முந்தைய ஆண்டில் 12 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டில் அது 30 சதவிகிதமாக அது உயர்ந்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை, நாடு முழுக்கவே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துப் பல்வேறு மக்களைச் சூழலியல்குறித்துச் சிந்திக்க வைத்துள்ளது.

காலநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவுகளைப் புறந்தள்ளியதால், தமிழகமும் கேரளமும் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கித் தவித்தன. பேரிடர்களால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கையில் இந்த ஆண்டில் புதிதாக 50 பகுதிகள் இணைந்துள்ளன. இனி, அங்கு வாழும் மக்கள் அஞ்சியபடியே வாழ்வைக் கழிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த நவம்பர் மாதம் ஒரு யானை மந்தை, கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடக்க முடியாமல் போராடிய காணொலி சமூக வலை தளங்களில் வைரலானது. தன்னுடைய கூட்டத்தைப் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கவைக்க, தலைமைப் பெண் யானை சாலைக்கு நடுவேயிருந்த இரும்புத் தடுப்புகளை உடைத்தது முதல் அனைத்து யானைகளும் பாதுகாப்பாகச் செல்லும் வரை நின்று காவல் காத்தது வரை அந்த மந்தையின் செயல்பாடுகள் மக்களின் மனங்களை ரணமாக்கியது. இத்தகைய காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதை யாகத்தான் இருக்கின்றன.

இந்த ஆண்டு தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க முடியாமல், திணறியது தமிழக அரசு. அண்டை மாவட்டங்களிலிருந்து ரயில்களிலும் லாரிகளிலும் நீரைச் சென்னைக்குக் கொண்டுவந்தது. ஆனால், எங்கிருந்து நீரைக் கொண்டுவந்தார்களோ, அந்தப் பகுதி மக்களும் நீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்தனர். நகர்ப்புறக் கழிவுகளால், கழிமுகப் பகுதிகள் கழிவுக் கூடங் களாகக் காட்சியளித்த நாள்கள் இந்த ஆண்டில் அதிகம்.

இந்த ஆண்டில் பெய்த மழையளவு, சென்னையின் நீர்த் தட்டுப்பாடு ஆகியவை குறித்துப் பேசுகிற நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ, “தமிழகத்தைப் பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு மழைப் பொழிவு நன்றாகவே இருந்தது. சென்னையைப் பொறுத்த வரை, மற்றப் பகுதிகளைவிடக் குறைவான மழைதான். இந்த ஆண்டில், நாம் புதிதாக எந்தப் பிரச்னைகளையும் சந்திக்கவில்லை. ஏற்கெனவே இருந்த பிரச்னைகளின் நீட்சியைத்தான் அனுபவிக்கிறோம். மிக முக்கியமாக, சுற்றுச்சூழல் மாறுபடுவதால் நீரின் அளவு மற்றும் தரம் மேலும் குறைந்துகொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் மட்டுமன்றி நிலப்பரப்பு நீரின் அளவும் குறைந்துகொண்டிருக்கிறது. மாசுபாடு, கடல் நீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளின் தீவிரம் இந்த ஆண்டில் அதிகமாகியுள்ளது” என்கிறார்.

இந்தியாவின் பூர்வகுடி மக்களும் இந்த ஆண்டு சந்தித்த இன்னல்கள் ஏராளம். 11 லட்சம் பூர்வகுடிக் குடும்பங்களை, காடுகளைவிட்டு வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடத் தொடங்கினார்கள். விளைவு... அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டது உச்சநீதிமன்றம். இருந்தாலும் வழக்கு இன்னும் முடியவில்லை. வனமக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை இன்னமும் அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

27 லட்சம் சூழலியல் அகதிகள் - கழிவுக்கூடங்களாகும் கழிமுகப் பகுதிகள்

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காத அரசுகளுக்கு எதிராக இளைய சமுதாயம் மொத்தமும் வீதியிலிறங்கிய வரலாற்று நிகழ்வும் இந்த ஆண்டில்தான் அரங்கேறியது. காலநிலை மாற்றத்தால் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் குழந்தைகள்வரை பாதித்திருப்பதை உலகம் உணர்ந்தது.

வனமக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை இன்னமும் அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

உலகளவில் என்று எடுத்துக் கொண்டால் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சம் மக்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அதில், குழந்தைகள் மரணம் மட்டும் 23 சதவிகிதம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏற்பட்ட அத்தகைய உயிரிழப்புகளில் ஒரு லட்சம் குழந்தை களின் மரணத்துக்குக் காரணம் காற்று மாசுபாடு.

அத்தகைய காற்று மாசுபாட்டுப் பிரச்னை சென்னையில் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது, ‘நகரம் பாதுகாப் பாக இருக்கிறது’ என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தது தமிழக அரசு. 2019-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வாழ்வியல் பாதுகாப்புக்கு முக்கியம் என்பதை மக்களுக்குப் புரிய வைத் துள்ளது. சூழலியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக 2019 இடம்பெறும் அளவுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சூழலியல் சிக்கல்கள் தொடர்பான மக்கள் எழுச்சிகளும் இந்த ஆண்டில் அதிகமாக நடந் துள்ளன. மக்கள் புரிந்து கொண்டதை அரசுகளும் விரைவில் புரிந்துகொண்டு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காதவரை, 2050-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் அந்தப் புனைவில் உள்ள நிலை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு