Published:Updated:

கரூர்: `எங்க அப்பா ஆத்மா சாந்தியடைஞ்சுருக்கும்!' - தந்தைகளின் கனவை நிறைவேற்றிய மகன்கள்

மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா ( நா.ராஜமுருகன் )

அவர்கள் பணிபுரிந்த காலத்தில் இந்தப் பள்ளியை முன்னேற்ற பல வழிகளில் முயன்றிருக்கிறார்கள். ஆனால், போதிய ஃபைனான்ஸ் சப்போர்ட் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பொதுவாக தாங்கள் படித்த பள்ளிகளைதான், முன்னாள் மாணவர்கள் முன்னேற்ற முயற்சிகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில், தங்கள் தந்தைகள் பணியாற்றிய அரசுப் பள்ளியை பசுமையாக்குவது, கல்வி உதவிகளைச் செய்வது, மாணவர்கள் கல்வி கற்கும் முறையை நவீனமாக்குவது என்று மூன்று மகன்கள் முன்னேற்றப் புறப்பட்டிருப்பது, கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா
நா.ராஜமுருகன்
கரூர்: `விலை 40 ரூபாய்; வாங்கலேன்னா மண்ணுக்கு உரம்!' - அரசுப் பள்ளி ஆசிரியரின் காய்கறி சபதம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, தென்னிலை சக்கரக்கோட்டை. மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கு, அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 95 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இங்கு எந்தவித வசதிகளும் இல்லை. பள்ளி வளாகத்தில் ஒரு மரம்கூட இல்லாமல், பாலைவனம் போல் வறண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில், இங்கு வெவ்வேறு காலங்களில் தலைமை ஆசிரியர்களாக இதே ஒன்றியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன், கந்தசாமி மற்றும் காளியப்பன் ஆகியோர் பணியாற்றினர். இவர்களில், செபாஸ்டியன் மட்டும் இயற்கை எய்திவிட்டார். மூன்று பேரும், 'நாங்கள் பணியாற்றியபோது சக்கரக்கோட்டை அரசுப் பள்ளியின் கட்டமைப்பை உயர்த்த முடியவில்லை. காரணம், அப்போது அதற்குரிய வசதிவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா
நா.ராஜமுருகன்

அந்த வருத்தம் எங்கள் மனதில் வடுவா பதிஞ்சிருக்கு' என்று தங்கள் மகன்களிடம் குறைப்பட்டிருக்கிறார்கள். அதனால், தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற, மூன்று ஆசிரியர்களின் மகன்களும் இப்போது களத்தில் குதித்திருக்கிறார்கள். அந்த முன்னெடுப்பின் முதல் முயற்சியாக, ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள், அந்தப் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் முருகானந்தம், கிராம மக்கள், மாணவர்கள் என 20 பேரை அழைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். அங்கே வந்திருந்த மக்களுக்கு 9 வகையான பாரம்பர்ய காய்கறி விதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரான ஜெரால்டு ஆரோக்கியராஜிடம் பேசினோம்.

"எங்க அப்பா செபாஸ்டியன் இந்த உயர்நிலைப் பள்ளியில் 1981 முதல் 1985 வரை தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அதேபோல், வ.வேப்பங்குடியைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமியின் தந்தையான கந்தசாமி, 1987 - 90 வரை இங்கே தலைமை ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். விராலிப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜின் தந்தையான காளியப்பன், 1992 - 95 வரை இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அவர்கள் பணிபுரிந்த காலத்தில் இந்தப் பள்ளியை முன்னேற்ற பலவழிகளில் முயன்றிருக்கிறார்கள்.

ஜெரால்டு ஆரோக்கியராஜ்
ஜெரால்டு ஆரோக்கியராஜ்
நா.ராஜமுருகன்

ஆனால், போதிய ஃபைனான்ஸ் சப்போர்ட் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் மூன்றுபேரும், அவர்களின் மகன்களான எங்களிடம், தங்களின் நிறைவேறாத ஆசையைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எங்க அப்பாதான் இறக்கும் தருவாய் வரையில் இதை நிறைவேறாத ஆசையாக சொல்லிக்கிட்டு இருந்தார். காளியப்பனும், நரேந்திரன் கந்தசாமியின் தந்தை கந்தசாமியும், எங்க மூணுபேர்கிட்டயும் போனவாரம் வரை இதைச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

அதனால், மூன்றுபேரும் சேர்ந்து, தந்தைகளின் நிறைவேறாத கனவை நிஜமாக்குவதுனு சபதம் எடுத்துக்கொண்டோம். அதன் முதல்கட்டமாகதான், பள்ளியை இயற்கை சூழல் நிறைந்த பகுதியாக மாற்ற ஏதுவாக, பள்ளி வளாகத்தைச் சுற்றி புங்கன், வேம்பு, இலுப்பை, மா, கொய்யானு பலவகை மரங்களை நடும் விழாவை நடத்தினோம். அதோடு, மக்களுக்கு பாரம்பர்ய காய்கறி விதைகளை வழங்கினோம். அடுத்து, இங்கு படித்து முடித்து, உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி பண்ணப்போறோம். அதோடு, பள்ளியில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்று கல்வி கற்பிக்க வசதியாக போதிய வசதிகளை செய்துதர இருக்கிறோம்.

மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா
நா.ராஜமுருகன்

இந்த நிகழ்ச்சிக்கு வயோதிகம் காரணமாக, காளியப்பனால் வர முடியவில்லை. ஆனால், கந்தசாமி சார் மரக்கன்றுகளை நட்டுவிட்டு, 'எங்க கனவை நிறைவேத்திட்டீங்க. உங்களை பெற்றதற்கு நாங்க மூணு பேரும் பெருமைப்படணும். ஆனால், இதைப் பார்க்க செபாஸ்டியன் இப்போது உயிரோடு இல்லையே' என்று வருத்தப்பட்டார். இருந்தாலும், எங்க அப்பாவோட ஆத்மா இப்போது சாந்தியடைஞ்சுருக்கும்" என்றார் ஆனந்தக் கண்ணீரோடு!.

அடுத்த கட்டுரைக்கு