நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவிலுள்ள கோடியக்கரையில் சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் அமைந்துள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்த வனத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான்கள், குதிரைகள், நரிகள், குரங்குகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கு150-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் அடங்கிய மூலிகை வனமும் உள்ளது. மேலும், கோடியக்கரைச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் சன்னாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இருபுறங்களிலும் தில்லை மரங்கள் அமைந்துள்ளன. இந்த மரத்தின் இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படும். குறிப்பிட்ட சில பருவத்திலும், சில நாள்களிலும் மட்டுமே கலர்கள் மாறி மீண்டும் பசுமைக்கு மாறிவிடுகிறது. சுற்றுலா பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் இந்த இயற்கை அழகை ரசித்துச் செல்கின்றனர்.
இது குறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கானிடம் பேசினோம். ``கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் முனியப்பன் ஏரி, பழைய லைட் ஹவுஸ் பகுதியில் தில்லை மரங்கள் காணப்படுகின்றன.
இந்த மரத்தின் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும், தொடர்ந்து மஞ்சள், சிவப்பு எனப் பல்வேறு நிறங்களாக மாறி உதிர்ந்து, மீண்டும் பசுமை இலைகளாக உருவாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் நடந்து முடிந்துவிடும்.

இந்த மாதம் (ஆகஸ்ட்) முழுவதும் மட்டுமே இந்த நிறம் மாறும் காட்சிகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இந்த மரத்திலிருந்து வெளிப்படும் பால் விஷத்தன்மை உடையது. இந்தப் பாலானது உடலில் பட்டால் அரிப்புகள் உண்டாகிப் புண்கள் ஏற்படும். எனவே, சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தின் அழகைப் பார்த்து ரசித்தால் மட்டும் போதும். இலைகளை பறித்தோ அதிலுள்ள காய்களைப் பறித்தோ ஆபத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது. மேலும், இந்தத் தில்லை மரங்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாகவும் உள்ளது" என்றார்.