Published:Updated:

`சிங்கம், புலியைவிடவும் பாம்புகள்தான் செல்லக்குட்டிகள்!' -ஆச்சர்யப்படுத்தும் கன்னியாகுமரி ரத்தினம்

ரத்தினக்குமார்
ரத்தினக்குமார்

``பாம்புகளோட பேசிட்டு இருப்பேன். வழியில வந்தாகூட.. `எதுக்கு இங்க வந்த அப்படிப் போ' எனச் சொல்லுவேன். எனக்கு அப்போதெல்லாம் விவரம் தெரியாது".

காற்று இல்லாத இடங்களில்கூட கதைகள் இருக்கும். மனிதர்களிடம் இல்லாமல் இருக்குமா? அன்றாடம் நாம் கடந்து செல்லும் முன்பின் தெரியாத எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் கதைகள், நம்மை பல்வேறு உலகங்களுக்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கதைகளில் விரியும் உலகம் எல்லா உயிர்களுக்குமானதாக இருக்கும். இப்படியான உலகங்களைத் தேடி அலையும் பயணத்தில் நம்மைப் பாம்புகளின் உலகத்துக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்தான், ரத்தினக்குமார். பாம்பைப் பற்றியும் ரத்தினத்தைப் பற்றியும் இருவருக்கும் இடையேயான உறவை பற்றியும் கொஞ்சம் உணர்வோடு உரையாடிய தருணங்களின் கதைகள் இதோ...!

ரத்தினக்குமார்
ரத்தினக்குமார்

மனிதர்களின் கொண்டாட்டங்களுக்கு நடுவே, வண்டலூர் உயிரியல் பூங்கா நம்மை வரவேற்றது. மரங்களின் கிளைகளைப்போல விரியும் பாதைகளில் நிழலைத்தேடி ஓடிக்கொண்டிருந்த மான்களையும் மண்ணை வாரி உடம்பில் பூசி விளையாடிக்கொண்டிருந்த யானைகளையும் பாறைகளைப்போல கிடந்த முதலைகளையும் கடந்து பாம்புகள் இருக்கும் பண்ணைக்குச் சென்றோம்.

மாலை வேளை என்பதால் அன்றைய பணிகளை முடித்து பாம்புகளுக்கு உணவையும் கொடுத்துவிட்டு சக ஊழியர்களுடன் கதை பேசியபடி மூங்கில் கம்புகளில் சாய்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார், ரத்தினம். `பூங்காவில் இருக்கும் எல்லா விலங்குகளும் எங்கள் பிள்ளைகள்தான்' என்றபடி புன்னகைத்து பேசத்தொடங்கினார்.

``கன்னியாகுமரில பாறையடினு ஒரு ஊரு. எங்கப்பா அங்க விவசாயம் பாத்துட்டு இருந்தாரு. விவசாயம் பார்க்கும்போது பாம்பெல்லாம் அடிக்கடி பார்ப்போம். பேச்சிப்பாறை அணைய திறந்துவிட்டா, ஆத்துல குளிக்கும்போது பாம்பும் கூட சேர்ந்து வரும். வீட்டுல ஆடு, மாடு எல்லாம் வளர்த்தோம். அதுங்க கூடவே தான் வளர்ந்தேன். முயல், உடும்பு எல்லாம் புடிச்சு விளையாடுவோம். எங்கப்பா தைரியமான ஆளு. வேட்டைக்கெல்லாம் போவாரு. அதனால, எனக்கும் விலங்குகளை நினைச்சு பயம் இருந்ததில்ல. அதனாலயே, விலங்குகள் எல்லாத்தையும் ரொம்பப் புடிக்கும். மலைக்கு பக்கத்துல எங்களுக்கு கொஞ்சம் இடம் இருந்துச்சு. அங்க பெரிய பாறைல கிழங்க உடைச்சு காயப்போடுவோம். குரங்கு, மாடு எதாவது வராம இருக்க, ராத்திரி அங்கதான் அப்பா கூட தங்கி இருப்பேன். நிறைய விலங்கு வரும். எல்லாத்தையும் விரட்டி பயமெல்லாம் போச்சு" என்று சேட்டைகளை நினைவுகூர்ந்து முதுமையான சிரிப்பை கொஞ்சம் இளமையாக்குகிறார்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

`எனக்கு ரொம்ப தைரியம், தம்பி...' என்று இளமையிலிருந்து உணர்வுகளை மீட்டு கதையை விட்ட இடத்தில் தொடர்கிறார். ``பாம்பு பக்கத்துல போனா அதுக கூட பேசிட்டு இருப்பேன். வழியில வந்தா.. `எதுக்கு இங்க வந்த அப்படிப்போனு' சொல்லுவேன். விவரம் தெரியாது அப்ப எல்லாம். படிப்பு சுத்தமா நமக்கு வராது. தேங்காவத் திருடி வித்துட்டு சினிமாவுக்கு போவேன். சினிமானா உயிரு" என்றவரிடம் `சினிமால நடிக்கணும்னு ஆசை இருந்துச்சா?' என்றேன். வெட்கம் கலந்த சிரிப்புடன், `அதெல்லாம் இல்ல தம்பி. எம்.ஜி.ஆர் அப்போ உச்சத்துல இருந்தார். வேலை செய்யணுமேனு படத்துக்குப் போறது. சும்மாவே இருக்கோமேன்னு எதாவது வேலைக்குப் போணுமேனு தோணிச்சு. என் அக்கா வீட்டுக்காரருக்கு லெட்டர் எழுதினேன்" என்றவர், `லெட்டர்னா என்னனு தெரியும்லா?' என்றவரிடம் புன்னகைத்தபடி `தெரியும்! ஆனால், எழுதினதில்ல' என்றேன்.

`சரி கதைக்கு வா' என்றவர்.. ``அவரு என்னை, 1982-ல் இந்த வண்டலூர் உயிரியல் பூங்கால சேர்த்துவிட்டாரு. அப்போ, நிறைய மரம் இருக்கும். இப்போ இருக்குற மாதிரிலாம் இருக்காது. பாம்பு பராமரிப்புலதான் எனக்கு முதல் வேலை. பாம்பு பாத்து பயம் இல்ல. ஆனால், பாம்பு கூடவே வேலை செய்யணுமானு சங்கடம். எனக்கு அலெக்சாண்டர்னு ஒரு குரு இருந்தாரு. சின்ன கண்ணாடி பெட்டிலதான் பாம்பு எல்லாம் இருக்கும். அதுல தலைய விட்டு பாம்ப புடிச்சு கிளீன் பண்ணணும். தண்ணி வைக்கணும். இதான் வேலை. குரு பண்றத பார்க்கும்போது தயக்கமும் காலப்போக்குல போச்சு. முதல்ல சாரைப் பாம்பதான் தொட்டேன். கை நடுங்கிச்சு. உடனே, அதைப் புடிச்சு என் கழுத்துல போட்டு உட்கார வச்சிட்டாரு. ரொம்ப நல்ல ஆளு" என குருவைக் குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

``நீர் யானை, சிங்கம், புலிதான் முதல்ல இருந்துச்சு... நான் வந்தப்புறம் ஒவ்வொரு விலங்கா கொண்டு வந்தாங்க. இயற்கையா ரொம்ப அழகா இருக்கும் வண்டலூர். கொஞ்சம் தகராறு பண்றேனு சர்க்கஸ்ல இருந்து கொண்டுவந்த சிங்கம், புலி பாத்துக்க அனுப்பிட்டாங்க. 50 சிங்கம், 30 புலி எல்லாம் பாத்துட்டு இருந்தேன். அப்புறம் மான், மாடு எல்லாம் பாத்துட்டு இருந்தேன். நிறைய இனப்பெருக்கம் ஆச்சு. விலங்குக எல்லாம் குட்டிப்போட்டு அதுவே வளர்ந்துரும்னு சொல்றதுலாம் சும்மா. காட்டுல அப்படி நடக்கும். அதுலயும் நிறைய செத்துப் போகும். ஏன்னா, ஆண் விலங்கு மிதிச்சு கொன்றுடும். பத்திரமா நாம பாதுகாக்கணும். பிரசவ காலத்துல ஆண், பெண்ணை ரொம்ப தொந்தரவு பண்ணும். குட்டி வெளிய வர்றதுக்கு முன்னாடி பெண்ணை பிரிச்சு தனியா வைக்கணும். அப்போதான் உயிருக்கு உத்தரவாதம்" என்று நுட்பமான சிலவற்றை விளக்கினார்.

``புலிய பராமரிக்க ஆள் இல்லை, போக முடியுமானு கேட்டாங்க. புலிக்கூட இருக்கும்போது நிறைய நெகிழ்வான சம்பவங்கள் நடந்துச்சு. அதெல்லாம், வெளிய சொல்ல முடியாது. காடுகளுக்கு உள்ளலாம் சுத்திருக்கேன். டீப் ஃபாரஸ்ட்னு சொல்லுவாங்க. காட்டுல ராஜா மாதிரி எல்லாம் இருக்குனு நமக்கு தோணும். பயந்து பயந்து வாழணும். அதுதான் இயல்பு. புலி, மானை சாப்பிடும். புலியை, ஹைனா சாப்பிடும். சங்கிலி தொடர்தான எல்லாம். இங்க கொஞ்சம் அன்பும் தேவையான அளவு சாப்பாடும் குடுத்தா பிள்ள மாதிரி நம்ம கூடவே இருக்கும். இந்தமாதிரி விலங்குகளை வளர்ப்பதோட காரணமே, அழிந்து வரும் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து காட்டுக்குள்ள விடணும்கிறதுக்காகத்தான். நாம நல்லா வளர்த்துட்டு காட்டுல விட்டா அதுக்கு வாழத் தெரியாது. இப்படி ஒரு பிரச்னையும் இருக்கு" என்று ஆதங்கப்பட்டார்.

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

`புலிய வளர்க்கும்போதாவது பயமா இருந்துச்சா?' என்றதற்கு,``வீட்டுல ஆடு மாட வளர்த்தேன். இங்க சிங்கம், புலிய வளர்க்குறேன். அவ்வளவுதான்! காடுனா எனக்கு ரொம்பப் புடிக்கும். அதுல வாழ்ற விலங்குனாலும் ரொம்பப் புடிக்கும். இப்படியே 40 வருஷம் போச்சு... பாம்பு பாக்க ஆள் இல்லனு திரும்பவும் என்ன இங்க கொண்டு வந்துட்டாங்க. என்னமோ பாம்புக்கும் நமக்கும் உறவு ஒட்டிகிச்சு!" என்றவரிடம்

`புலி, சிங்கம், மான், ஆடு, மாடு, பாம்பு எல்லாம் வளர்த்துருக்கீங்க. உங்க செல்லக்குட்டினா எது?' என்று கேட்டதற்கு, ``ஒரு வருஷத்துக்கு முன்னாடி பெங்களூர் போய் கிங் கோப்ரா எடுத்துட்டு வந்தோம். அதுங்கதான் என்னோட செல்ல குட்டிங்க" என்றவர். ``உலகத்துலயே பாம்பு பத்திதான் அதிகமான புரளிகள் இருக்கு. அதைப் பத்தியெல்லாம் சொல்றேன் வா" என்றபடியே பாம்புகள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் எனக்கான திகில் அனுபவங்கள் காத்துக்கொண்டிருந்தன.

அடுத்த கட்டுரைக்கு