Published:Updated:

`5ஜி மொபைல் சோதனைக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை!' - மத்திய அரசு கொடுத்த விளக்கம்

மொபைல் டவர்
மொபைல் டவர்

மொபைல் போன்களுக்கான 5ஜி சோதனையால்தான் கொரோனா இரண்டாவது அலை பரவுவதாக சமூக வலைதளங்களில் நாடு முழுவதும் செய்தி பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் இன்னும் அதிகரித்தபடி இருக்கிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு கொரோனா இரண்டாவது அலையை சரியாகக் கையாளவில்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

corona virus
corona virus
Pixabay

தற்போது கொரோனா பரவல் தொடர்பாகப் புதிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. அதாவது, `நாட்டில் மொபைல் போன்களுக்கான 5ஜி தொழில்நுட்பத்தை மொபைல் கம்பெனிகள் சோதனை செய்துபார்க்க ஆரம்பித்துள்ளன. இதனால் மொபைல் போன் டவர்களில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சு காரணமாகவே கொரோனா இரண்டாவது அலை பரவுகிறது' எனச் சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவியது. இச்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

`5ஜி சோதனையால்தான் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. இச்செய்தி தவறானது. முற்றிலும் உண்மைக்கு மாறானது. 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா பரவலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. தவறான தகவல் மற்றும் வதந்திகளால் மக்களுக்குத் தவறாக வழிகாட்ட வேண்டாம்.

5ஜி சோதனையே தொடங்கவில்லை!

5ஜி தொழில்நுட்பத்துக்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல்பூர்வமாக எந்தவித செய்தியும் இல்லை. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இன்னும் 5ஜி மொபைல் போன் சேவைக்கான சோதனைகள் தொடங்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது 5ஜி சோதனையால்தான் கொரோனா பரவுகிறது என்று கூறுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. மொபைல் போன் டவர்கள் மிகவும் குறைவான சக்திகொண்ட, ஆபத்தை விளைவிக்காத கதிர்வீச்சையே வெளிப்படுத்துகின்றன. எனவே மொபைல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

5ஜி - சித்திரிப்பு காட்சி
5ஜி - சித்திரிப்பு காட்சி

இந்தியாவில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளபடி மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கிறது. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு