Published:Updated:

தமிழக புகைப்பட கலைஞருக்கு நேஷனல் ஜியோகிராபியின் கவுரவமிக்க விருது!

தமிழக புகைப்பட கலைஞருக்கு நேஷனல் ஜியோகிராபியின் கவுரவமிக்க விருது!
தமிழக புகைப்பட கலைஞருக்கு நேஷனல் ஜியோகிராபியின் கவுரவமிக்க விருது!

தமிழக புகைப்பட கலைஞருக்கு நேஷனல் ஜியோகிராபியின் கவுரவமிக்க விருது!

இந்த ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராபி இதழின் சிறந்த புகைப்படமாக தமிழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யாவின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஜியோகிராபி  இதழ் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல், வன விலங்குகள், ஆக் ஷன், இயற்கை அழகு போன்ற பிரிவுகளில் சிறந்த புகைப்படங்களுக்கான விருதினை வழங்கி வருகிறது. கோவையை சேர்ந்த வருண் ஆதித்யா என்ற 25 வயது இளைஞர் தான் எடுத்த  'கிரீன்வைன்' பாம்பு படத்தை  தேர்வுக்கு அனுப்பியிருந்தார். அந்த புகைப்படம் இந்த ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராபி சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உலகம் முழுக்க இருந்து 20 ஆயிரம் புகைப்படங்கள் போட்டியில் பங்கேற்றன. இந்தியாவில் இருந்தும் இந்த ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராபி  விருதை பெறும் ஒரே புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யாதான். விருதுடன் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். 

வருண் ஆதித்யாவின் பெற்றோர் வங்கியில் பணிபுரிகின்றனர். கோவை ஜிஆர்டி கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். லண்டனில் எம்பிஏ படித்த போது சாதாரணமாக செல்போனில் போட்டோ எடுக்கத் தொடங்கியுள்ளார். பின்னர் அதுவே ஹாபியாகி போனது. உலகம் சுற்றுவதில் அலாதி ஆர்வம் கொண்டவர்.  யதார்த்தமாக நாட்ஜியோ போட்டி ஒன்றில் வருண் ஆதித்யா பங்கேற்று கோஸ்டாரிகா, பனமா நாடுகளுக்கு சுற்றுப்பயணம்  செல்லும் வாய்ப்பை வருண் பெற்றார். அந்த சுற்றுப்பயணத்தின் போது நாட்ஜியோவின் புகழ்பெற்ற போட்டோகிராபரான மிக்கேல் மில்ஃபோர்டுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வருண் ஆதித்யாவுக்கு கிடைத்தது.  வருண் தனது திறமையை  பட்டைத் தீட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாக அந்த சுற்றுப்பயணம் அமைந்தது. 

படிப்லபு முடிந்து லண்டனில் இருந்து தாயகம் திரும்பியதும் வைல்டு லைஃப் போட்டோகிரபராகேவே மாறிப் போனார் வருண். முதுமலை, பண்டிப்பூர் போன் காடுகளில்தான் பெரும்பாலான நாட்களை கழிப்பார். தற்போது நாட்ஜியோ அவரது உழைப்புக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது. 

இது குறித்து வருண் கூறுகையில், 'லண்டனில் படிக்கும் போது தொடக்கத்தில் செல்போனில் படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். ஃபேஸ்புக் தந்த உற்சாகத்தால்தான் எனது புகைப்பட ஆர்வமும் அதிகரித்தது. லண்டன் நகரம் மிகுந்த அழகாக இருக்கும். ஒவ்வொரு பூங்காவுக்கும் செல்வேன். பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படும். அவற்றை படம் பிடிப்பதே அலாதியானது. பறவைகளின் நட வடிக்கைகளை படம் எடுப்பது சவால் நிறைந்தது. ஆனால், மக்களால் ரசிக்கப்படக் கூடியது. இந்த கிரீன்வைன் பாம்பு படம் எடுத்த விதம் சற்று வித்தியாசமானது.

மலபார் காட்டில் அந்த பகுதிக்கே உரிய மலபார் பறக்கும் தவளையை படம் எடுக்க காத்திருந்தேன். அதற்காக கேமராவில் 16-35 வைடு லென்ஸ் பொருத்தியிருந்தேன். திடீரென்று பின்னால் பார்த்தால், ஒரு மரத்தின் மீது இந்த கிரீன்வைன் பாம்பு நின்று ஆடிக்கொண்டிருந்தது. எனக்கு ஜும் லென்ஸ் மாட்ட வேண்டுமென்று எல்லாம்  அந்த சமயத்தில் தோன்றவில்லை. பாம்பு குட்டியாகத் தெரிந்தது. இந்த பாம்புக்கு கொடிய விஷமும் கிடையாது. அதனால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதன் அருகிலேயே சென்று படத்தை எடுத்தேன். அந்த புகைப்படங்களை எடுத்த பின்னரே என்னால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது. தற்போது அந்த உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது '' என்கிறார். 

-எம்.குமரேசன்

புகைப்பட உதவி :வருண் ஆதித்யா

அடுத்த கட்டுரைக்கு