பட்டுப்போகவிருந்த 85 வயது மரம் - மீண்டும் துளிர்க்க உதவிய ஃபேஸ்புக் பதிவு!
பட்டுப்போகவிருந்த இச்சிமரம் ஒன்றை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு துளிர்க்கச் செய்திருக்கிறார் ஒருவர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது கொப்பம்பட்டி என்ற கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 85 வருட பழைமையான இச்சிமரம் ஒன்று இருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்த மரத்தின் இலைகள் அனைத்தும் திடீரென உதிர ஆரம்பித்தன. இதைக் கண்ட அந்த ஊரின் சமூக ஆர்வலர் மதிவாணன், விஷயத்தை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால், அதிகாரிகளோ இந்த மரம் இனி உபயோகமற்றது, சிறிது நாளில் பட்டுவிடும் என்று அலட்சியப்படுத்தினர். ஊர்மக்களும் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒதுங்கினர்.

இந்த நிலையில், மரத்தின் உதிர்ந்த இலைகளுடன் கூடிய புகைப்படத்தையும், இதுகுறித்த செய்தியையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் மதிவாணன். இதைப் பார்த்த முசிறி எம்.ஐ.டி வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர், தன் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மாணவர்களை அந்த மரத்தை ஆய்வுசெய்ய அனுப்பினார். அவர்களும் அந்த மரம் எதனால் பட்டுப்போகிறது என்பதை உடனே கண்டறிந்தனர்.
பின்னர் முனைவர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் முதலில் மரத்தைச் சுற்றி ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டச் செய்தார்கள். அதில் மரம் தழைப்பதற்கான மருந்துகள் இடப்பட்டன. பின்னர் புதிய மண் கொட்டப்பட்டது. அதற்குப்பிறகு வேப்பம்புண்ணாக்கு இடப்பட்டு பின் மீண்டும் மண் கொட்டப்பட்டது.

மேலும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் தண்ணீர் வாகனம் மூலம் தண்ணீரும் தொடர்ந்து ஊற்றப்பட்டது. மரத்தைச் சுற்றி குழி பறிக்கப்பட்டு புது வண்டல் மண் கொட்டப்பட்டது. இந்த தொடர் முயற்சிகளுக்குப் பிறகு காய்ந்த கிளைகள் அறுக்கப்பட்டு பட்டுப்போகவிருந்த இச்சிமரமானது புத்துயிர் பெற்றது. தற்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது.