Published:Updated:

`இந்த மாசம் மட்டும் ஒன்பது மான்கள் இறந்துடுச்சு!' - இது சிவரக்கோட்டை சோகம்

அபிநய சௌந்தர்யா

காயம்பட்ட மானைக் கண்ட ஊர்மக்கள் அதைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் மக்களைப் பார்த்து இன்னும் மிரண்டுபோன மான், அஞ்சி ஓடியுள்ளது.

Deer
Deer

மலைப்பகுதிகளில் ரிசார்ட்கள், உணவகங்கள், சாலைகள் அமைக்க வனங்களையும் கானுயிர்களின் வழித்தடங்களையும் அழிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் காடுகளில் வாழும் விலங்குகள் வீடற்றுப்போய், குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து, மீண்டும் காட்டுக்குள் செல்லும் வழி அறியாமல், சாலைகளில் விரையும் வாகனங்களில் அடிபட்டு மடியும் நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது இந்த அவலம் காடுகளுக்கு வெளியேயும் தொடர்கிறது.

Deer
Deer

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள சிவரக்கோட்டையில், கமண்டல ஆறு உள்ளது. காட்டுக்குள் நீர்நிலைகள் வறண்டு போனதால், அந்த ஆற்றில் தாகத்திற்குத் தண்ணீர் அருந்த பெண் மான் ஒன்று வந்துள்ளது. அங்குள்ள நாய்கள் இந்த மானைத் துரத்திக் கடித்துள்ளது. கழுத்தில் காயத்துடன் மான் அங்கிருந்து தப்பி ஓடி குடியிருப்புக்குள் செல்லவே, அங்குள்ள வேலிகளின் இடுக்கில் சிக்கிக்கொண்டது.

காயம்பட்ட மானைக் கண்ட ஊர்மக்கள் அதைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் மக்களைப் பார்த்து இன்னும் மிரண்டுபோன மான், அஞ்சி ஓடியுள்ளது. அதே கமண்டல ஆற்றுப் பாதையில் ஓடிய மானை மீண்டும் நாய்கள் துரத்த ஆரம்பித்துள்ளன. ஊர்மக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டு ஆட்டுக் கொட்டகையில் கட்டி வைத்துள்ளனர்.

Deer
Deer

அருகில் சென்றாலே மான் மிரண்டதால் அதன் காயத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மக்கள், பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இறுதியாக, வனத்துறையைச் சேர்ந்தவர்கள் சிவரக்கோட்டைக்கு வந்து மானை மீட்டுச்சென்றுள்ளனர்.

சிவரக்கோட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் பேசினோம். "காட்டுக்குள்ளிருந்து தண்ணீருக்காகவும் உணவு தேடியும் வரும் மான்கள், வேட்டை நாய்கள் துரத்துவதால் நான்கு வழிச்சாலைக்கும், ரயில்வே ட்ராக்கிற்கும் வந்துவிடுகின்றன. அதனால் விபத்துகளில் சிக்குவதும் நேர்கிறது. இம்மாதம் மட்டும் மொத்தம் ஒன்பது மான்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளன" என்றார் வருத்தத்துடன்.

Deer
Deer

அமேசான் காட்டுத் தீ முதல் அடிபட்ட இந்த மான் வரை பூமி நமக்கு செய்தியையும் எச்சரிக்கையையும் அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறது.