Published:Updated:

இரவில் யாரும் வெளியில் வராதீங்க! - வீடுவீடாக எச்சரிக்கும்  வனத்துறை

எம்.புண்ணியமூர்த்தி
இரவில் யாரும் வெளியில் வராதீங்க! - வீடுவீடாக எச்சரிக்கும்  வனத்துறை
இரவில் யாரும் வெளியில் வராதீங்க! - வீடுவீடாக எச்சரிக்கும்  வனத்துறை

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அந்தப் பகுதியை ஒட்டியுள்ள கிராமமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரவேண்டாம் என வீடுவீடாகச் சென்று எச்சரித்து வருகிறார்கள் வனத்துறையினர்.

யானைக்கும் மனிதர்களுக்குமான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானைகளும், மனிதர்களும் இந்தப் போராட்டத்தில் பலியாவதும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சிலநாள்களுக்கு முன்புகூட, கோவை வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் நான்குபேர் பலியானார்கள். நேற்று முன்தினம் பெரியநாயக்கன் பாளையத்தில் தண்ணீர் தேடி வந்த ஐந்து மாத குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து , பின்பு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. நேற்று ஆனைக்கட்டி பகுதியில் இன்னொரு யானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிக்கிக்கொள்ள.. தொட்டியை உடைத்து அந்த யானையை மீட்டிருக்கிறார்கள் வனத்துறையினர். இந்நிலையில்தான் இரவுநேரங்களில் வெளியில் வரவேண்டாம் என்று சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வீடுவீடாக சென்று எச்சரிக்கை கொடுத்துவருகிறார்கள் சிறுமுகை வனச்சரகத்தினர்.

ஒவ்வொரு வீட்டிலும் துண்டுபிரசுரங்கள் ஒட்டிவருகிறார்கள். அதில், “சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட வனத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகம் இருக்கிறது. இரவு நேரங்களில் பயணம் செய்வோர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவும். முடிந்த அளவு பயணங்களை தவிர்க்கவும். யானைகள் உலாவும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வெளியில் இரவு நேரங்களில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். விவசாய நிலங்களில் பயிர்பாதுகாப்புக்காக திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து மின்வேலியில் பாய்ச்சி வன உயிரினங்கள் இறக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வனச்சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் யானை விரும்பி உண்ணும் பயிர்களை தவிர்த்து மாற்றுப் பயிர் செய்ய முயற்சிக்கவும்.

யானை குடியிருப்பு பகுதி அல்லது தோட்டத்தில் நுழைந்தால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கவும். பொதுமக்கள் யானைகளை விரட்டுதல் கூடாது. வனத்துறையினர்  யானைகளைக்  காட்டுக்குள் திரும்ப விரட்டும்போது பொதுமக்கள் யானைகளின்மீது கல்வீசுவதோ, கூட்டாக சேர்ந்து கூச்சலிடுவதோ கூடாது. தோட்டக்காவல் பணிக்கு செல்லும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே உறங்குவதை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனத்துறையினரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.