Published:Updated:

ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது! வழிகாட்டும் விவசாயி #CloseTheDeadWells

தினேஷ்
தினேஷ்

`ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்போல, இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் குழியாக மாற்ற வேண்டும்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் தினேஷ்.

திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி தினேஷ். இவர் தன்னுடைய வயலில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ஆறு மாதத்துக்கு முன்னரே மழை நீரைச் சேகரிக்கும் வகையில் மாற்றியமைத்து அசத்தியிருக்கிறார்.

ஆழ்துளைக் கிணறுகள்
ஆழ்துளைக் கிணறுகள்

இதுகுறித்து `வீணான 110 அடி போர்வெல், ஆனால்..! - தஞ்சை இளைஞரின் ஆச்சர்யப்பட வைத்த மழைநீர் சேமிப்பு பிளான்' என்ற தலைப்பில் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தற்போது, இதன் மூலம் குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பதைத் தடுக்கலாம். நிலத்தடி நீர் மட்டமும் உயரும் எனத் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தினேஷிடம் பேசினோம்.

''நான் கேட்டரிங் தொடர்பான படிப்பு படித்துவிட்டு 7 ஆண்டுகள் வெளிநாட்டில் பணி புரிந்தேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு, விவசாயம் செய்யத் தொடங்கினேன்.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு
மழைநீர் சேகரிப்பு அமைப்பு

காவிரியில் பல ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆறு மட்டுமல்ல வயலும் வறண்டு கிடந்தது. இதையடுத்து என்னுடைய வயலில் 110 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். என்னுடைய போதாத நேரம் அதில் தண்ணீர் வரவில்லை. அத்துடன் அதற்குச் செய்த செலவும் வீணாகிப்போனது. பின்னர், மீண்டும் வேற இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். அதில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து நெல் சாகுபடியும் செய்து வருகிறேன்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு
மழைநீர் சேமிப்பு அமைப்பு

இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவது என்னை யோசிக்க வைத்தது. உடனே மழை நீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அத்துடன் மழைக் காலங்களில் வயலில் வீணாகத் தேங்கி நிற்கும் மழை நீரையும் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

பாதுகாப்பாக மூடி வைத்திருந்தாலும் பலரும் தண்ணீர் வராத ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடச் சொன்னார்கள். அதை மூடுவதற்கும் பெரும் தொகை செலவாகும் என்பதும் என்னை யோசிக்க வைத்தது. அப்போதுதான் செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றும் எண்ணம் வந்தது. இதையடுத்து போர்வெல் குழாயைச் சுற்றி வயலுக்கு மேல் குழாய் தெரியும் அளவில் 10 அடி அகலத்திலும் ஆழத்திலும் குழி எடுத்தேன். பின்னர், 10 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் குழாயையொட்டிக் கான்கிரீட் உறைகள் இறக்கினேன். பின்னர், உறைக்குள் 5 அடி ஆழத்திற்குக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றைக் கொண்டு நிரப்பினேன். மேலும், நிலத்திலிருந்து ஆழ்துளைக் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் குழாயில் ஓட்டைகள் அமைத்தேன்.

அத்துடன் வேறு எதுவும் உள்ளே செல்லாத வகையில் நைலான் வலையைக் கொண்டு குழாயைச் சுற்றிக் கட்டிவிட்டேன். இதன் மூலம் தண்ணீர் குழாய் வழியாக நிலத்துக்குள் செல்லும்போது வடிகட்டப்பட்டு சுத்தமான நீராகவும் செல்லும். அத்துடன் அந்த இடத்தைச் சுற்றி மழை பெய்யும்போது மழை நீர் வயலுக்குச் செல்லும் வகையிலும், நிலத்தடியிலிருந்து மழை நீர் ஆழ்துளைக் குழாய் பகுதிக்கு வரும் தண்ணீர் உள்ளே செல்லும் வகையிலும் இடைவெளி விட்டுச் சிமென்ட் சுவர் அமைத்துவிட்டேன். இதற்கு மொத்த செலவே ரூபாய் 50,000 தான் ஆனது. ஆரம்பத்தில் என்னைத் தேவையில்லாத வேலை செய்கிறானெனப் பேசியவர்கள் கூடப் பணி முடிந்து மழை நீர் உள்ளே செல்வதைப் பார்த்துப் பாராட்டத் தொடங்கினர்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு
மழைநீர் சேமிப்பு அமைப்பு

இன்றைக்கு மழை பெய்யும்போது ஆழ்துளைக் குழாய் வழியாக மழை நீர் உள்ளே செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் இதுபோல் ரீச்சார்ஜ் முறையைப் பயன்படுத்தி மழை நீரைச் சேமிக்கலாம். தண்ணீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்ததால் நான் இதைச் செய்தேன். இதை அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துவிட்டுப் பாராட்டிவிட்டுச் சென்றனர். கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நீர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசினேன். கலெக்டர் எழுந்து வந்து என்னை விவசாய விஞ்ஞானி எனப் பாராட்டினர்.

தினேஷ்
தினேஷ்

சாதாரண விவசாயி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர்த் தொட்டியாக மாற்ற ரூ 50,000 செலவு செய்ய முடியாத நிலையில் அவர்களின் பொருளாதாரம் உள்ளது. எங்க பகுதியில் இதுபோல் பயன்பாட்டில் இல்லாமல் பல ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அரசு மானியம் வழங்கினால் இவற்றை மழை நீர் சேகரிப்புக் குழாயாக மாற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைச் செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

மழைநீர் சேமிப்பு அமைப்பு
மழைநீர் சேமிப்பு அமைப்பு

மண்ணை நாம் காத்தால் மண் மனிதனைக் காக்கும் என நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்த வகையில், செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இது போன்று மாற்றியமைத்தால் மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும். குழந்தை அதற்குள் விழுந்து உயிரிழக்கும் நெஞ்சை ரணமாக்கும் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இப்போது அரசு செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை, மழை நீரைச் சேமிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கத்து. பலர் ஆழ்துளைக் கிணற்றை மூட வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் எதற்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மண்ணையும் மழலையின் உயிரையும் காக்கின்ற வகையில் இது போன்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

ஆழ்துளைக் கிணறுகள்
ஆழ்துளைக் கிணறுகள்
சுஜித் மரணத்தின் தாக்கம்! - மூடப்படும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்
அடுத்த கட்டுரைக்கு