Published:Updated:

குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல், மக்களுக்கு உடல்நல பாதிப்புகள்; ஆபத்தில் எண்ணூர் மக்கள்!

எண்ணூர் பகுதியைச் சுற்றியுள்ள மக்களிடையே, அங்குக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எண்ணூர் என்றாலே, அனல்மின் நிலையம், துறைமுகம் என்று தொழில் நிறுவனங்களின் கூடாரமாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் எண்ணூரில் சதுப்பு நிலம், கொற்றலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய், என்று பல்வேறு சூழலியல் அமைப்புகள் இருப்பதையும் அவற்றைச் சார்ந்து மக்கள் வாழ்வதையும் அரசு பல நேரங்களில் மறந்தும் விடுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 3 கிராமங்களில் வாழும் மக்களிடையே தர அடிப்படையிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களிடையே நேர்காணல் மூலம் கள நிலைமையை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் மையமான எண்ணூரில் அச்சம் ஊட்டக்கூடிய இக்கட்டான சுற்றுச்சூழல் - மானுட ஆரோக்கியப் பிரச்னை நிலவுவதை வெளிக்கொண்டு வந்துள்ளதை, இன்று வெளியாகியுள்ள இதுதொடர்பான அறிக்கை கூறுகிறது.

எண்ணூர்
எண்ணூர்

சென்னையின் அருகே உள்ள எண்ணூர், மிக அதிக உயிர்ச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை உள்ளதாக இருந்ததையும் பின்னர் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி கொண்டுவந்த ஆலைகளின் காரணமாக அப்பகுதி சென்னையின் நச்சுக் குவியல் பகுதியாக மாற்றப்பட்டிருப்பதையும் உள்ளூர் மக்கள் அளித்த சாட்சியங்கள் காட்டுகின்றன.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட ஹெல்த்தி எனர்​ஜி இனிஷியேட்டிவ் (Healthy Energy Initiative – India) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ``எண்ணூர் பகுதியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடந்துவரும் தொழில்துறை நடவடிக்கைகளின் காரணமாக, அவற்றுக்கு மிக அருகே வாழ்ந்துவரும் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வாழ்க்கையின் தரன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மக்களின் ஆரோக்கியம், பிராந்திய சுற்றுச்சூழலின் நிலை, மக்களுக்கு கிடைக்கக் கூடிய சுகாதார சேவைகள் மீது இந்த ஆய்வின் கவனம் குவிந்தது" என்று கூறியுள்ளனர்.

மேலும், ``வங்கக் கடலுக்குள் கொற்றலை ஆறு - ஆரணி ஆறு கலக்கும் இயற்கை எழில் மிகுந்த கழிவெளியில் அமைந்த கிராமங்களாக காட்டுக்குப்பம், காட்டுப்பள்ளி குப்பம், ஊர்ணம்பேடு என்ற மூன்று கிராமங்களும் இருந்தன. இந்த கழிவெளியிலிருந்துதான் ஆற்று நீர் வங்கக் கடலுக்குள் நுழையும். இப்போது இந்தப் பகுதி முழுவதும் ஆலைகளின் `கட்டடக் காடாக' மாற்றப்பட்டுவிட்டது. ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளால் காற்றும் நீரும் நிலமும் மக்களின் நல்வாழ்வும் சிதைந்துக்கொண்டிருக்கின்றன" என்று கூறினர்.

``கம்பெனியிலிருந்து வரும் தூசு துகள்கள் எங்கள் வீட்டில் நுழைந்துவிடும். மாடியில் துணியைக் காயப்போட்டால், கம்பெனி தூசு அவற்றில் ஒட்டிக்கொள்ளும். தீபாவளி வெடியில் பளபளவென்று இருக்கும் துகள்கள் போலத் துணியில் ஒட்டிக்கொண்ட துகள்கள் இருக்கும்" என்று இந்த ஆய்வின்போது பேட்டியளித்துள்ள காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 46 வயது பெண்மணி ஒருவர் கூறியுள்ளார் (அறிக்கையில், பேட்டியளித்தவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன).

பழைய எண்ணூர்
பழைய எண்ணூர்

மேலும், மக்களிடையே நடத்திய நேர்காணலின் மூலம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, அதன் மருத்துவக் கழிவுகளை பக்கிங்ஹாம் கால்வாயில் சமீபத்தில் கொட்டியிருப்பது தெரியவருகிறது. அதோடு, அந்தக் கழிவுகளில் இருந்த ஊசி ஒன்று, மீன்பிடித்துக் கொண்டிருந்த குடியிருப்பாளர் ஒருவரின் காலில் குத்தி, மிகக் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக அவருடைய காலையே வெட்டியெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகம் அமைக்கப்படுவதற்கு முன்னர், சுறா, வஞ்சிரம், மாவலசி போன்ற மீன் வகைகள் கிடைத்துள்ளன. ஆனால், இப்போது இந்த மீன்களை அடையாளத்திற்குக் கூடப் பார்க்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து கிராமங்களும் கொற்றலை ஆறு கடலில் கலக்கும் பகுதிக்கு அருகிலேயே இருக்கின்றன. குறிப்பாக, காட்டுக்குப்பம் கிராமத்தின் தென்கிழக்கிலுள்ள மணலி தொழிற்சாலை பகுதியில் கொட்டப்படும் கழிவுகளையும் ஆற்றுநீர் கிராமத்திற்குக் கொண்டுவருகிறது. கல்ஃப் எண்ணெய் நிறுவனம், அதன் கழிவுகளைத் திறந்துவிடும்போது ஆற்றின் நீர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுவதாகவும் கழிவு நீர்த் தொட்டியைத் திறந்த வாடை அடிப்பதாகவும் ஆற்றின் மேற்பரப்பு முழுக்க எண்ணெய் மிதப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இவற்றோடு, சிமென்ட் ஆலையின் கழிவுகள், நிலக்கரி சாம்பல் கழிவுகள் ஆகியவையும் நதியை மாசுபடுத்தி, மீன்கள், நண்டுகள், இறால்களின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

மீனவர்களின் படகுகள்
மீனவர்களின் படகுகள்

சிரஞ்சுகள், கழிவுப் பைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் நதியில் வீசப்படுகின்றன. காலப்போக்கில், அந்த பைகள் கிழிந்து, அவற்றிலுள்ள ஊசி போன்ற மருத்துவக் கழிவுகள் வலைகளில் சிக்குவது, கால்களில் குத்துவது என்ற சிக்கலை உண்டாக்குகின்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள், சமீபத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் வீசப்பட்டுள்ளன.

எண்ணூர் பகுதியின் மோசமான நிலையைப் பற்றி, ``சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும் மனித ஆரோக்கியமும் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டவை என்பதை கோவிட் 19 பெருந்தொற்று காட்டியுள்ளது. நமது சமூகத்தில் உள்ள சமத்துவமற்ற நிலையையும் மிகவும் எளிய மக்களை மிகவும் வலிமையான வகையில், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாக்குவதை, நம் கண் முன்பு இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுபாடு, மோசமான காற்று மற்றும் நீரின் தரம், அவற்றுடன் அபாயகரமான சூழலில் வாழும் எண்ணூர் பகுதி குடியிருப்பாளர்கள் போன்றவர்கள் வாழ்க்கையின் பாதிப்புக்கு ஆளாகும் நிலையை பெருந்தொற்று மேலும் அதிகப்படுத்தியுள்ளது" என்று குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வில் பங்கெடுத்த பொது சுகாதார ஆராய்ச்சியாளர், Dr. விஷ்வஜா சம்பத், ``எண்ணூர் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள், காற்று, நீர், நில மாசுபாட்டால் அவதியுற்று வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. கூடுதலாக, அங்குக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மிகப்பெரிய பாதிப்புகளை, கால் எடுக்கப்பட வேண்டிய அளவுக்கு அவர்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது. அதோடு, அந்த மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் மருத்துவ வசதிகள் இல்லையென்பது வேதனைக்குரிய விஷயம். இங்கு வாழும் பெண்களும் குழந்தைகளும் இதனால் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு
Pixabay

நாம் கொரோனா வந்தபிறகுதான் முகக்கவசம் அணியவே தொடங்கினோம். ஆனால், இங்கு வாழும் மக்கள் அதற்கு முன்பிருந்தே முகக்கவசம் அணிந்தவாறுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நேர்காணலின்போது எங்களிடம் தெரிவித்தார்கள். அந்தளவுக்கு அவர்கள் காற்று மாசுபாடு பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்கள். ஊர்ணம்பேடு பகுதியில்தான் வட சென்னை அனல்மின் நிலைய சாம்பல் குளத்தின் வடக்கு எல்லை அமைந்துள்ளது.

அந்த சாம்பல் குளத்திலிருந்து சாம்பல் கழிவுகள் வேளாண் நிலங்களில் ஊடுருவுவது, காற்று அடிக்கையில் சாம்பல் படிமங்கள் விவசாய நிலங்களின்மீது படிவது என்று பல்வேறு பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள். அங்கு வாழும் மக்களில் நிறைய பேருக்கு சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் அச்சப்படவேண்டியது என்னவெனில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட சிறுநீரகக் கல் ஏற்படுகிறது. அவ்வளவு தூரம், மக்கள் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்" என்று கூறினார்.

வட சென்னை
வட சென்னை

அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கவும் இந்த ஆய்வறிக்கை சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

  • எண்ணூர் கழிவெளியை முழுமையாக மீட்டெடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நீரின் காரணமாகப் பரவும் நோய்களைக் குறைக்கவேண்டும்.

  • தொழிற்சாலை பேரழிவுகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றைக் கையாளும் அளவுக்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் தாக்கங்களைக் கையாளும் அளவுக்கும் எண்ணூரில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.

  • ஆலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, ஆலைகளின் காற்று- திரவ மாசுபாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அவற்றை நடைமுறை செய்யவேண்டும்.

  • பள்ளிக்குச் செல்வது, மருத்துவமனை செல்வது போன்ற அடிப்படை தேவைகளுக்கு ஏற்ற வகையில் பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பை முன்னேற்றவேண்டும்.

  • எண்ணூர் பகுதியைச் சுற்றியுள்ள ஆலைகளில் உள்ளூர் மக்களுக்கு நிரந்தரமான வேலையளிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பாரம்பர்ய வாழ்வாதார இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.

அனல்மின் நிலையம் முன்பு நீர்நிலையில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகள்
அனல்மின் நிலையம் முன்பு நீர்நிலையில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகள்
`இதுவும் நடந்துவிட்டால் எங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும்!' - எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதார போராட்டம்
  • எண்ணூர் ஆற்றுக்குள்ளும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகேயும் திடக்கழிவுகளைக் கொட்டுவதும் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை வெளியேற்றுவதையும் நிறுத்த வேண்டும்.

எண்ணூர் மக்கள் அனுபவிக்கும் சமூக, சூழலியல் சிக்கல்கள், அங்கிருக்கும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கண்டுகொள்ளப்படாமலே இருப்பதாக, சமூக, சூழலியல் ஆர்வலர்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை, இதனால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது. இனியாவது, தமிழ்நாடு அரசு அங்கு வாழும் மக்களின் நலனுக்காக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு