Published:Updated:

கிராமத்தைப் பசுமையாக்க ஆசிரியர் வேலையை உதறிய அய்யனார்..!

Ayyanar
Ayyanar

ஊரைப் பசுமையாக மாற்றுவதற்காக, பணியை விட்டுவிட்டு, குளம், கண்மாய் கரைகள் மற்றும் காலியிடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார் அய்யனார்.

`மரங்கள்தான் மழைக்கு ஆதாரம்', `மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்', `உலக வெப்பமயமாதலைத் தடுக்க மரங்கள் நட வேண்டும்'.

இப்படிப்பட்ட வாசகங்களைப் பல இடங்களில் பார்க்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். அவசர உலகில், வேலை, குடும்பம், சம்பாத்தியம் எனப் பறந்துகொண்டே இருக்கிறோம். மனிதர்களின் அத்துமீறல்களால் இயற்கை அழிந்துகொண்டிருக்கிறது. உலகம் வெப்பமாகிக் கொண்டிருக்கிறது. பருவமழை சரியான பருவத்தில் பெய்வதில்லை. இயற்கைப் பேரிடர்களை அதிகளவில் சந்திக்க வேண்டியுள்ளது. குடிக்கும் தண்ணீர் வணிகமயமாகி விட்டது. எதிர்காலத்தில் தண்ணீர் தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க சுயநலம் பாராத சிலர் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அய்யனார்.

மரக்கன்று
மரக்கன்று

சிவகங்கையை அடுத்துள்ள எம்.வேலாங்குளத்தைச் சேர்ந்த அய்யனார், எம்.எஸ்.சி, எம்.பில், பி.எட். பட்டதாரி. தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரில் மரங்களை நடவுசெய்யும் பணியைச் செய்து வருகிறார். ஊரைப் பசுமைவனமாக மாற்றும் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் அய்யனாரைச் சந்தித்தோம்.

என்னைப் பொறுத்தவரை பூமிக்கு மேல இருக்க தண்ணி மட்டும்தான் நம்ம பயன்பாட்டுக்கானது. நிலத்தடி நீர் நமக்கானது இல்லை.
அய்யனார்

``நான் பள்ளி, கல்லூரி படித்ததெல்லாம் வெளியூர்லதான். படித்து முடித்ததும் வேலை கிடைச்சிருச்சி. வெளியூர்லயே இருந்துட்டேன். ஒரு தடவை ஊருக்கு வந்தப்போ, நான் சின்ன வயசுல பாத்த கண்மாய், குளம்லாம் தண்ணி இல்லாம வத்திப்போயிருந்துச்சு. ஊர் மக்கள் போர் போட்டுத் தண்ணி எடுத்துப் புழங்க ஆரம்பிச்சிட்டாங்க. ``இப்போ தண்ணி இருக்கு பயன்படுத்துறோம். அதுவும் வத்திருச்சுன்னா என்ன பண்ணுறது?"னு ஊர்ல இருந்த பசங்ககிட்ட கேட்டேன். `அப்போ யோசிச்சுக்குவோம்'னு சொன்னாங்க. தண்ணி இல்லைனு ஆனதுக்கப்புறம் யோசிச்சு என்ன பலன்னு தோணுச்சு.

குளத்தில் மரக்கன்று நடவு
குளத்தில் மரக்கன்று நடவு

என்னைப் பொறுத்தவரை பூமிக்கு மேல இருக்க தண்ணி மட்டும்தான் நம்ம பயன்பாட்டுக்கானது. நிலத்தடி நீர் நமக்கானது இல்லை. சிவகங்கை மாவட்டத்துலயே எங்க கிராமம் பரப்பளவுல பெரிய கிராமம். ரெண்டு போகம் வெள்ளாமை வந்த ஊருனு எங்க அப்பத்தா சொல்லுவாங்க. ஆனா இப்போ இப்படி இருக்கேனு வருத்தமா இருந்துச்சு. அதுபோக ஊருல இருக்கவங்களுக்கு, எது பருவமழை, எது வெப்பச் சலனத்துல ஏற்படுற மழைனு தெரியல. அப்பறம் ஒரு நாள் ஊரு குளத்துல, கம்மாயில மரம் நடலாம்னு தோணுச்சு. அப்பிடியே வேலைய விட்டுட்டு ஊருக்கே வந்துட்டேன்.

மரங்களோட விதைய சேமிச்சு வச்சி, பத்தடி மரமா வளர்ற வரைக்கும் வளர்த்து, அப்பறமாதான் பொதுவெளியில அல்லது நீர்நிலைகள்ள போய் நடுவோம். அப்பதான் ஆடு, மாடு சாப்பிடாது. மரமும் தண்ணி இல்லாம பட்டுப்போகாது. இது மாதிரி எத்தனையோ மரம் நட்டிருக்கேன். நான் நாட்டு விதைகள மட்டும்தான் சேமிப்பேன். ஏன்னா அதனால மட்டும்தான் நம்ம வெப்பத்தைத் தாங்கமுடியும். அதுமட்டுமல்ல, பழம் கொடுக்குற மரங்கள்தான் நடுவேன். அப்போதான் ஏதாச்சும் ஒரு பறவை பசியாற முடியும். இந்த மர விதைகள் எல்லாம் சில நேரம் சும்மாவே கிடைக்கும். இல்லனா என்ன மாதிரியே இயற்கை ஆர்வம் உள்ளவங்க சேமிச்சு வெச்சிருப்பாங்க.

நடவு செய்த மரம்
நடவு செய்த மரம்
வீட்டிலும் வளர்க்கலாம் சந்தன மரம்... எப்படி?

அவங்ககிட்ட இருந்து ஒரு கிலோ விதை இவ்வளவுன்னு வாங்கிக்குவேன். பொருளாதாரம் அவ்வளவு பெருசா இல்ல. அதனால ஊரு மக்கள்கிட்ட உதவி கேப்பேன். விதை, செடிக்குக் கவர், இதெல்லாம் வாங்க முடிஞ்சவங்க உதவி பண்ணுவாங்க. அதுல என்ன முடியுதோ அதை வாங்கி வளர்ப்போம். என்னோட பெரிய ஆசையே ஊருல ஒரு பசுமை வனம் உருவாக்கணும் என்பதுதான். அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். முன்னாடி நான் தனியாதான் இத பண்ணிட்டு வந்தேன். இப்போ எல்லாரும் இதுல ஆர்வம் காட்டுறாங்க. சந்தோசமா இருக்கு" என்றபடியே மரக்கன்றுகளுடன் புறப்பட்டார் அய்யனார்.

பின் செல்ல