Published:Updated:

`தமிழகத்தில் கெடுபிடி; டார்கெட் கர்நாடகா!' -கேரளாவின் மருத்துவக் கழிவுகளால் கொதிக்கும் மைசூரு

 தமிழக, கர்நாடக எல்லை
தமிழக, கர்நாடக எல்லை

தமிழகத்தின் நீலகிரி, கோவை, நெல்லை ஆகிய பகுதிகளில் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டிவந்த கேரளா தற்போது கர்நாடகத்திலும் இதே வேலையைச் செய்து வருகிறது.

நாட்டிலேயே எழுத்தறிவில் தன்னிறைவு பெற்றும் இயற்கை வளம் நிறைந்த கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா, பல்வேறு வகைகளில் அண்டை மாநிலங்களில் அத்துமீறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அதிலும் குறிப்பாக, தங்கள் மாநிலத்தில் கையாள முடியாத ஆபத்தை ஏற்படுத்தும் கழிவுகளை வாகனங்களில் ஏற்றி இரவோடு இரவாகத் தமிழகத்தில் கொட்டிச் செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும் இந்தக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் என எச்சரிக்கின்றனர் ஆர்வலர்கள்.

எரிக்கப்படும் குப்பைகள்
எரிக்கப்படும் குப்பைகள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்திருந்த தேசிய பசுமை தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுவின் தமிழகத் தலைவர் ஜோதிமணியிடம் மக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கொண்டு சென்றனர்.

அவர்கள் முன்வைத்த புகார்களில் மிக முக்கியமானதாக கேரளாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டு கொட்டப்படும் கழிவுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஆய்வு செய்த ஜோதிமணி, ` கூடலூர் வனப்பகுதிகளில் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!- வேடந்தாங்கல் பறவைகளுக்குத் தொற்றுநோய் அபாயம்

இந்தநிலையில், தற்போது கர்நாடக மாநிலம் மைசூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் இரவோடு இரவாகக் கழிவுகளை கொட்டிச் செல்வதாக மைசூர் பகுதி மக்கள் கொதிக்கின்றனர்.

நஞ்சன்கூடு பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
நஞ்சன்கூடு பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

கர்நாடகத்தில் அத்துமீறும் கேரளா குறித்து மைசூரு சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பேசுகையில், "பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதியில் எந்தத் தயக்கமும் இன்றி கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனர். கேரளாவின் மலப்புரத்தில் இருந்தும்கூட கழிவுகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருகிறது. பகலில் சோதனைச்சாவடிகளைக் கடந்து மாநிலத்துக்குள் நுழைந்து இரவோடு இரவாகக் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கழிவுகளைக் கொட்டிவந்த இவர்கள் அங்கு கெடுபிடி அதிகமானதால் பந்திப்பூர் வழியாக கர்நாடகாவுக்கு நுழைகின்றனர்.

மேலும், கர்நாடகாவில் காவல்துறை எண்ணிக்கை குறைவு என்பதாலும் வனத்துறைக்கு பெரிய அதிகாரம் இல்லை என்பதாலும் இதைச் சாதகமாக்கிக்கொண்டு குப்பைத்தொட்டியாக மாற்றிவருகின்றனர்" என ஆதங்கப்படுகின்றனர்.

இது குறித்து பந்திப்பூர் கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில் " மைசூர், நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் ஆகியவற்றையொட்டிய இடங்களிலிலும் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனர். மருத்துவக் கழிவுகளான சிரிஞ்ச், மாத்திரை, சானிட்டரி நாப்கின், ரத்தக்கரை படிந்த உடைகள், பஞ்சுகள் போன்ற எல்லா வகையான மருத்துவக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன.

தமிழக கேரள எல்லை
தமிழக கேரள எல்லை

மேலும் இறைச்சிக்கழிவுகளையும் கொட்டுவதால் வனவிலங்குகள், வளர்ப்புப் பிராணிகள், மனிதர்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த் தொற்றால் பாதிக்கும் அபாயம் உள்ளது‌. யாருக்கோ நோய் தொற்று ஏற்பட்டால் நமக்கென்ன... என்ற மனோபாவத்தில் நடந்துகொள்கிறது கேரளா. இதை உடனே தடுக்காவிட்டால் பெருமளவு பாதிப்பு ஏற்படும்" என்றார்‌ கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு