Published:Updated:

``PM2.5 அளவு காற்று மாசை மாஸ்க்காலும் வடிகட்ட முடியாது!"- சென்னைக்கு ஹை அலர்ட் கொடுக்கும் மருத்துவர்

மாசை கட்டுப்படுத்துமா மாஸ்க்?
மாசை கட்டுப்படுத்துமா மாஸ்க்?

''கண் எரிச்சல், குறைப்பிரசவம், மனச்சோர்வு, ஆஸ்துமா, ஸ்ட்ரோக், மாரடைப்பு, புற்றுநோய்... சென்னை காற்று மாசு - கட்டுப்படுத்த முடியுமா?

கடந்த சில நாள்களாக சென்னை நகரத்தில் வீசும் காற்றில் இருக்கக்கூடிய பார்ட்டிகுலேட் மேட்டர் (Particulate matter), அதாவது தூசின் அளவு 2.5 விட்டமாக  இருக்கிறது. காற்றில் கலந்துள்ள மாசின் பாதிப்பால் விழிபிதுங்கி நிற்கும்  டெல்லியின் நிலை விரைவில் சென்னைக்கும் வரவிருக்கிறது எனச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5 (PM 2.5) ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரல் சிறப்பு மருத்துவர். திருப்பதி
நுரையீரல் சிறப்பு மருத்துவர். திருப்பதி

"நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், அந்தக் காற்றில் கலந்துள்ள தூசுகளையும்தான் சுவாசிக்க நேரிடும். இது தவிர்க்க முடியாதது.  ஆனால், அது குறித்துப் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், நம் உடலின் இயங்குமுறையில் அந்த தூசுகள் மூக்கு மற்றும் நுரையீரலால் வடிகட்டப்பட்டுத் தும்மல், இருமல் என இயற்கையாகவே வெளியேற்றப்படும்.

காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்
காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்

ஆனால், தற்போதைய நிலையில் இந்த மாசு, சுவாசம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நம் மூக்கு மற்றும் நுரையீரலால் வடிகட்ட இயலாத அளவுக்கு மிகமிக நுண்ணிய தூசுகள் இப்போது காற்றில் படர்ந்துள்ளன. தூசுகளுடன் நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற  நச்சு வாயுக்களின் அளவும் காற்றில் அதிகமாகியிருப்பதால், கண்களுக்குத் தென்படும் அளவுக்கு அவையெல்லாம் சேர்ந்து படலம் போன்று காட்சியளிக்கிறது. 

சென்னை காற்று மாசு
சென்னை காற்று மாசு

இதன் அளவை 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' மூலமாக அளவிடலாம். இந்த ஏர் குவாலிட்டி இண்டெக்ஸில் காற்றின் மாசு பொதுவாக 0 - 500 அளவுவரை அளவிடப்படும். இது 100க்கும் குறைவாக இருந்தால் பாதிப்பில்லை. ஆனால், அளவு அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தும் அதிகம்.  டெல்லி ஏர் குவாலிட்டி இண்டெக்ஸின் அளவு, கிட்டத்தட்ட 500-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. சென்னை, இந்த அளவில் பாதியைத் தாண்டிவிட்டது என்பது அதிர்ச்சியான தகவல். 

மக்கள்தொகைப் பெருக்கம், அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை போன்ற பல காரணங்களால், இந்தியாவிலேயே அதிக மாசுபட்ட காற்று வீசும் நகரமாக டெல்லி இருக்கிறது. இந்த மாசுக்காற்றை வெளியேற விடாமல் தடுக்கும் இமயமலைதான் டெல்லியின் பெரிய சிக்கல். 

காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்
காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்

ஆனால், சென்னையைப் பொறுத்தவரை கடல் நமக்குப் பெரிய பக்கபலம். ஏனெனில் மாசுக்காற்றை இங்கேயே தங்கவிடாமல் அடித்து வெளியேற்ற அது உதவுகிறது. என்றாலும், இயற்கைதான் நமக்கு பக்கபலமாக இருக்கிறதே என மெத்தனமாகவும், மேலும் மேலும் இயற்கையை பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டும் இருந்தால், இறுதியில் தீர்வில்லாத சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்."

''அந்தளவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?''

"நாம் தொடர்ந்து பொறுப்பற்று நடந்தால், அச்சப்படக்கூடிய நிலை வெகுவிரைவில் ஏற்படுவது உறுதி. மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்படிப் பேசவில்லை. உலகளவில் காற்று மாசடைவதற்கு இயற்கைக் காரணிகளும் இருக்கின்றன, செயற்கைக் காரணிகளும் இருக்கின்றன. எரிமலை, காட்டுத்தீ போன்ற இயற்கை சார்ந்த விஷயங்களை நம்மால் தவிர்க்க இயலாது.

காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்
காற்று மாசினால் ஏற்படும் பாதிப்புகள்

ஆனால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, வாகனப் புகை, பிளாஸ்டிக் மற்றும் ரப்பரை எரிப்பது, சிகரெட் புகை, குப்பைகளை எரிப்பது எனப் பல வகையில் நாம்தான் காற்றை மாசடையச் செய்கிறோம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நமக்கு நாமே செய்யும் நன்மையாக இவற்றை எல்லாம் குறைப்பதும், செய்யாமல் தவிர்ப்பதும் நம் கடமை. இது தவிர்த்து அரசாங்கம் சில ஒழுங்கு நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் வலியுறுத்த வேண்டும். கடந்த ஆண்டு சுமார் 100 புள்ளிகளில் இருந்த 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' ஒரே வருடத்தில் இவ்வளவு வேகமாக அதிகரித்துள்ளதை நமக்கான எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். "

''இந்தக் காற்று மாசுபாடு ஏற்படுத்தக்கூடிய உடல்நலக் கோளாறுகள் என்னென்ன?"

''குறைந்தபட்சமாகக் கண் எரிச்சலில் ஆரம்பித்து, தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் இயங்குமுறையில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக மனச்சோர்வு, குறைப்பிரசவம், அபார்ஷன், இளவயதிலேயே முதிர்ச்சியடையும் சருமம் என பிரச்னைகளின் எண்ணிக்கை கூடும்.

நுரையீரல் பாதிப்பு
நுரையீரல் பாதிப்பு

இவை மட்டுமல்லாமல் நுரையீரலில் மாசு தங்குவதால் சளி,  மூச்சிரைப்பு,  ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நுரையீரலிலேயே தங்கும் நாள்பட்ட மாசினால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். நுரையீரல் புற்றுநோய்க்கான காரணிகள் வலுவாகும். இவை தவிர்த்து சுவாசக் கோளாறுகளால் ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்ற நோய்க்கான வாய்ப்புகளும் உண்டாகும் என்பதுடன், இந்நோய்கள் தீவிரமடையும் அபாயமும் அதிகமாகும்.''

''இந்த பாதிப்புகளிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?"

''தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்கவிட்டது, ஒழுங்கான முறையில் நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறியது என முதலில் தண்ணீரை மாசடையச் செய்தோம். அந்தத் தவற்றை உணர்ந்து அதைச் சரிப்படுத்திக்கொள்வதில் முயற்சியை முடுக்காமல், அதற்கு மாற்று வழியாக வாட்டர் ப்யூரிஃபையர், நீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடிப்பது, சுத்திகரிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்கிக் குடிப்பது என்றெல்லாம் சமாளித்துக்கொண்டிருக்கிறோம்.

N95 மாஸ்க்
N95 மாஸ்க்

அதுபோல, மாசுபட்ட காற்றை வடிகட்ட உதவும் மாஸ்க் எனப்படும் முகமூடிகளைப் பயன்படுத்தி சுவாசப் பாதைகளை தற்காத்துக்கொள்ளலாம் என  நினைக்க வேண்டாம். ஏனெனில் மாஸ்க் எதுவும் PM 2.5 அளவில் உள்ள தூசுகளை வடிகட்ட உதவாது. சிறிதளவுகூட இடைவெளி இல்லாமல் முகத்தில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய N95 எனப்படும் மாஸ்க் மட்டுமே இதற்கான தீர்வு. ஆனால், இந்த மாஸ்க்கை தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத அளவுக்கு மூச்சு முட்டும். 

தினசரி 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' மூலமாக காற்றில் கலந்துள்ள மாசின் அளவைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம். குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், மாசு அதிகம் உள்ள நாள்களில் பொதுவெளியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, வெளி வேலைகளுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது.

ஆஸ்துமா பாதிப்பு
ஆஸ்துமா பாதிப்பு

இது தவிர ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், மூச்சிரைப்பு ஏற்படும்போது மட்டும் இன்ஹேலர் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை தவிர்த்து, மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிற வழிமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும். பரிந்துரைப்படி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

சுவாசப் பிரச்னை இல்லாதவர்கள், மூச்சுப்பயிற்சி, பிரணாயாமம் என ஆரோக்கியமான வாழ்வியலைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றபடி இன்றைய சூழலிலிருந்து தப்பிக்க நினைத்தால் நகரத்தை விட்டு வெளியேறுவதுதான் வழி. 

பிரணாயாமம்
பிரணாயாமம்

எனவே, சுவாசத்தின் அவசியத்தை உணர்ந்து, இயற்கையை மாசடையவிடாமல் பாதுகாப்பது மட்டும்தான் இதற்கான நிரந்தரத் தீர்வு என்பதை நினைவில் கொண்டு மக்களும், அரசாங்கமும் விரைந்து செயல்பட வேண்டும்.'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு