Published:Updated:

கடத்தப்பட்ட அல்டாப்ரா ஆமை, மதிப்பு ₹15 லட்சம்... மெட்ராஸ் முதலைப் பண்ணையில் நடந்தது என்ன?

ஆமை வளர்ப்பாளர்
ஆமை வளர்ப்பாளர்

மிகுந்த பாதுகாப்புகளை மீறி அல்டாப்ரா வகை ஆமை மட்டும் திட்டமிட்டு திருடப்பட என்ன காரணம்?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள வடநெம்மேலியில் அமைந்துள்ளது மெட்ராஸ் முதலைப் பண்ணை. இந்தியாவிலேயே பெரிய முதலைப் பண்ணை என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்தப் பண்ணையில் ஆயிரக்கணக்கான முதலைகளுடன், ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஆமை, இக்வானா, கொமோடோ டிராகன், மலைப் பாம்பு உள்ளிட்ட பல்வேறு பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், முதலைப் பண்ணையில் வளர்க்கப்படும் அரிய வகை `அல்டாப்ரா' இன ஆமைகளில் ஒன்று மாயமானதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது.
முதலைப் பண்ணையில் வளரும் ஆமை
முதலைப் பண்ணையில் வளரும் ஆமை

15 லட்சம் ரூபாய் மதிப்பிருக்கும் எனக்கூறப்படும் அந்த ஆமை, திட்டமிட்டுக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பேச்சு கிளம்பியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மிகுந்த பாதுகாப்புகளை மீறி அல்டாப்ரா வகை ஆமை மட்டும் திட்டமிட்டு திருடப்பட என்ன காரணம்?

மாயமான `அல்டாப்ரா' இன ஆமையானது வெளிநாடுகளில் பலராலும் வளர்ப்புப் பிராணி போலவே வளர்க்கப்படுகிறது. ஆனால், இவை இந்தியாவில் மிக அரிதாகவே வளர்க்கப்படுகிறது. காரணம், மற்ற வகை ஆமைகளைவிட இந்த வகை ஆமையைக் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இது பல அடி உயரத்துக்கும், சுமார் 250 கிலோ எடை வரையும் வளரும். சுமார் 20 வயதுக்குப் பிறகுதான் பருவத்துக்கு வந்து முட்டையிடத் தொடங்கும். நீரில் நீந்த விரும்பாது. தரையில்தான் உலாவும். காய்கறிகள், கீரை வகை உணவுகளையே விரும்பி உண்ணும்.

முதலைப் பண்ணையில் வளரும் ஆமை
முதலைப் பண்ணையில் வளரும் ஆமை

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வீடுகளிலும், கமர்ஷியலாகவும் இந்த வகை ஆமையை வளர்க்கலாம். மெட்ராஸ் முதலைப் பண்ணையில் `அல்டாப்ரா' வகையில் ஆண் மற்றும் பெண் இனத்தில் தலா இரண்டு ஆமைகள் வளர்க்கப்பட்டன. 80 கிலோ எடையில், மூன்றடி நீளத்தில் பருவத்துக்கு வந்த பெண் ஆமைதான் இப்போது கடத்தப்பட்டிருக்கிறது. ஆமை காணாமல்போன சம்பவம் குறித்து, முதலைப் பண்ணையின் இயக்குநர் ஆல்வின் ஜேசுதாஸனிடம் பேசினோம்.

``கொரோனா சூழலால் இந்தப் பண்ணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கினோம். வழக்கம்போலவே இங்கு வளரும் எல்லாப் பிராணிகளையும் கவனித்து வந்தோம். சில வாரத்துக்கு முன்பு `அல்டாப்ரா' வகையில் ஓர் ஆமை மட்டும் மாயமானது. விலங்குகளின் குணாதிசயங்கள் மாறுபட்டவை. எனவே, அவை கூண்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பண்ணை முழுக்கத் தேடினோம். கிடைக்கவில்லை!

முதலைப் பண்ணையில் வளரும் ஆமை
முதலைப் பண்ணையில் வளரும் ஆமை

ஆமைகள் வளரும் கூண்டு முறையாக மூடப்பட்ட நிலையில், அவை வெளியேற வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்தோம். பின்னர் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பார்வையிட்டோம். ஆமை வசித்த கூண்டுக்கு அருகேயுள்ள சுற்றுச்சுவருக்குப் பின்புறம் ஆமையின் எச்சமும், இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டதற்கான சுவடுகளும் இருந்தன. சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனமும் கார் ஒன்றும் பண்ணைக்கு அருகே நின்றிருந்ததை ஒரு சிசிடிவி கேமரா பதிவில் பார்த்தோம். உடனே காவல்துறையினருக்குப் புகார் கொடுத்தோம். ஆமை வளரும் கூண்டு இருக்கும் பகுதியில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை. கடத்தப்பட்ட ஆமை 20 வயதைத் தாண்டி முட்டையிடும் பருவத்தில் இருந்தது.

ஒரு மிருகக்காட்சி சாலையில் இருந்து மற்றொன்று மிருகக்காட்சி சாலைக்கு விலங்குகளை நட்பு ரீதியாக பரிமாற்றம் செய்துகொள்வது இயல்பானதுதான். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பண்ணையில் இருந்து ஐரோப்பாவில் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு கரியால் வகை முதலைகளைக் கொடுத்து, அல்டாப்ரா வகையில் சில ஆமைகள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. எனக்குத் தெரிந்து இந்தப் பண்ணை தவிர, தெலங்கானா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தலா ஒரு மிருகக்காட்சி சாலையில் மட்டும்தான் அல்டாப்ரா வகை ஆமைகள் வளர்க்கப்படுகின்றன.

முதலைப் பண்ணையில் வளரும் ஆமை
முதலைப் பண்ணையில் வளரும் ஆமை

இந்தியாவில் வேறு எங்கும் அதிக எடையளவில் இந்த வகை ஆமைகள் வளர்க்கப்படவில்லை. எனவேதான், வளர்க்கும் நோக்கத்தில் அல்லது இனப்பெருக்கம் செய்து புதிய ஆமைகளை உருவாக்கும் நோக்கத்தில் இங்கிருந்து ஒரு பெண் ஆமை கடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த வகை ஆமைகள் மனிதர்களைவிட அதிக காலம் உயிர் வாழும் தன்மைக் கொண்டவை. இவற்றை முறையாக வளர்த்து, அதிக அதிக விலைக்கு விற்பனை செய்வோரும் உண்டு. அதனால், இந்தியாவில் அல்டாப்ரா வகை ஆமைக்கு நல்ல மதிப்பு இருக்கிறது.

நான் மூன்றரை ஆண்டுகளாக இந்தப் பண்ணையில் பணியாற்றுகிறேன். எனக்குத் தெரிந்து, இதற்கு முன்பு இந்தப் பண்ணையில் எந்தப் பிராணிகளும் கடத்தப்பட்டதில்லை. தனக்கு ஆபத்து வந்தால், இந்த ஆமைகள் எதிராளியைக் கடிக்க முற்படும். இதையும், சிசிடிவி கேமரா இல்லாத இடம், பருவத்துக்கு வந்த பெண் ஆமை போன்ற விஷயங்களை அறிந்தவர்கள்தான் ஆமையைத் திட்டமிட்டுக் கடத்தியிருக்கக்கூடும். சிலர் ஒரே நேரத்தில் பண்ணைக்குள் நுழைந்து ஆமையைத் திருடியிருக்கக்கூடும்.

crocodile park
crocodile park

இங்கு வளரும் எல்லாப் பிராணிகளையும் மிகுந்த அன்போடும் அக்கறையோடும்தான் வளர்க்கிறோம். அதனால், ஆமை காணாமல்போனதால் மிகுந்த வருத்தமடைந்தோம். சந்தேகப் பார்வையில் ஊழியர்களையும் இந்தப் பண்ணையின் வளர்ச்சியில் நட்பில் உள்ளவர்களையும் காயப்படுத்த விரும்பவில்லை. விசாரணை விஷயங்களைக் காவல்துறையினர் பொறுப்பில் விட்டுவிட்டோம். காணாமல்போன ஆமை விரைவில் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம். ஆமை வளரும் இடம் உட்பட எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்தும் பணிகளுடன், பாதுகாப்பு விஷயங்களிலும் கூடுதல் கவனம் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்" என்று கூறினார் ஆல்வின்.

அடுத்த கட்டுரைக்கு