Published:Updated:

அதே தவறு, அதே முடிவு... அமேசான் எதிர்கொள்ளும் `வளர்ச்சி' பிரச்னை!

துரை.நாகராஜன்

இது அமேசானில் மட்டும் நடப்பதாகத்தான் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலக நாடுகள் பெரும்பாலும், தனது நாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காக இயற்கையை அழிப்பது மாதிரியான கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகின்றன.

Amazon Fires
Amazon Fires

இதைக் கற்பனை சம்பவமாக வைத்துக்கொள்வோம். நடுராத்திரியில் நீங்கள் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் வீடு திடீரென பற்றி எரிகிறது. தூக்கத்திலிருந்து விழித்த நீங்கள் தீயைக் கட்டுப்படுத்த நினைப்பீர்களா... வீட்டைவிட்டு ஓட நினைப்பீர்களா... என்று கேட்டால், "குடும்பத்தை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்" என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். இது எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தானே. இதுதான் உலக இயல்பும்கூட. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு கண்முன்னே எரிந்துகொண்டிருந்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

`இது அரசியலால் எரியும் தீ!' தப்பிப்பிழைக்குமா அமேசான்?

அப்படித்தான் வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள், அமேசான் பழங்குடியின மக்கள். நமக்காவது தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு எந்திரங்கள், தண்ணீர் எனப் பல வசதிகள் இருக்கின்றன... அவர்களுக்கு? உங்கள் வீட்டில் எரிவதற்குக் காரணம், உங்கள் ஊரை ஆளும் நபர் என்றால், உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றும். தனது வீட்டை (அமேசான் காடு) ஆளும் நபரே காப்பாற்றாமல் நிற்பதைப்பார்த்து, ஆதரவற்று நிற்கும் பழங்குடி மக்களுக்கும் அப்படித்தான் இருக்கிறது.

அமேசான் ஏன் தேவை?

உலகின் மழைக்காடுகளில் மூன்றில் இரு பங்கு, பிரேசிலின் அமேசான் காடுகள்தான். உலகில் ஆக்சிஜன் உற்பத்தியில் மொத்தம் 20 சதவிகிதம் பங்கு வகிப்பது அமேசான் மழைக்காடுகளே. அதனால்தான் அமேசானை ‘உலகின் நுரையீரல்’ என்கிறார்கள் சூழலியலாளர்கள். அதுதான் இப்போது துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் 10 சதவிகித தாவரங்கள், விலங்கினங்கள் அமேசானில் இருக்கின்றன. பத்து லட்சம் பழங்குடிகள் வசிக்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும், பிரேசிலில் சுமார் 7,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அமேசான் காடழிப்பு, இப்போது தொடங்கியது அல்ல... அமேசான் காடழிப்பு பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

சிவப்பு இடங்களில் தீ எரிகிறது
சிவப்பு இடங்களில் தீ எரிகிறது

1995-ம் ஆண்டு அதிகபட்சமாக 29,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டன. உலக நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியவுடன், அது படிப்படியாகக் குறைந்தது. மீண்டும் இப்போது எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாகியிருக்கிறது காடழிப்பு. ஆனால், இன்று நடந்து கொண்டிருக்கும் அழிவின் விகிதமும், அழிக்கும் முறையும் வரலாறு காணாத ஒன்று. கடந்த சில மாதங்களாக எந்திரங்களை வைத்து காட்டை அழித்தவர்களின் வேகம் நிமிடத்துக்கு இரண்டு கால்பந்தாட்ட மைதான அளவில் இருந்தது. இப்போது அந்த வேகம் இருமடங்கு கூடியிருக்கிறது.

இரண்டு வாரங்களாக ஒரு காடு எரிகிறது என்று நாசா சொல்லி, இப்போது 4 வாரங்களாகப் போகிறது. இன்னும் அமேசான் காடு எரிந்துகொண்டிருக்கிறது. அமேசான் காட்டை வேகமாக அழிக்கும் வளர்ச்சித் திட்டங்களை வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தீவிரப்படுத்தியிருக்கிறது போல்சனேரோவின் அரசு. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தபோது, பிரேசில் அதிபர் போல்சனேரோ சொன்ன வார்த்தையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

"ஒவ்வொரு நாட்டுக்கும் காடுகள் இருக்கின்றன. அதை அவர்கள் வளப்படுத்தினாலே போதும். அந்த நாட்டுக்குத் தேவையான சுற்றுச்சூழல் அமைப்பும் சீராகும். அதனால் எங்கள் நாட்டைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்."
போல்சனேரோ

இவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, மற்ற நாடுகளைப் பார்த்துதான் பிரேசில் தனது பாதையை வளர்ச்சி எனும் நோக்கில் தீப்பற்றி எரியும் காட்டை வேடிக்கை பார்க்கிறது.

இது அமேசானில் மட்டும் நடப்பதாகத்தான் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலக நாடுகள் பெரும்பாலும், தனது நாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காக இயற்கையை அழிப்பது மாதிரியான கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகின்றன. இப்போது பிரேசிலில் நடப்பது தவறு என்றால், வளர்ச்சித் திட்டங்களுக்காக உலகில் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் இயற்கையை அழிக்கும் திட்டங்களும் தவறுதான். இப்போது பிரேசிலில் நடப்பது சரியென்றால், உலக நாடுகளில் நடப்பதும் சரிதான். வளர்ச்சியை நோக்கி, தனது பாதையை திருப்பி இயற்கையை சிதைக்கும் செயல் நிச்சயமாக உலகின் நன்மைக்கானதாக இருக்காது என்பது மட்டும் நிதர்சனம்.

`இது மக்கள் பிரச்னை!' - அமேசான் காட்டுத் தீயை அணைக்க நிதி கொடுத்த ஹாலிவுட் பிரபலம்

உலக நாடுகள் இயற்கையுடன் இணைந்த வளர்ச்சியை நோக்கி தனது பாதையைத் திருப்பினால் மட்டுமே மனிதர்கள் வாழ தகுந்ததாக இந்த உலகம் இருக்கும். இது பிரேசிலுக்கான எச்சரிக்கை மணி மட்டுமல்ல, இயற்கையை அழித்து வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொரு நாட்டு அரசுக்குமான எச்சரிக்கை மணியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.