Published:Updated:

பாம்பிலிருந்து அரணை வந்ததா... அரணையிலிருந்து பாம்பு வந்ததா? பகுதி - 2

பாம்பு
பாம்பு ( Pixabay )

பாம்புகளுக்கு ஆன்மிக அடையாளம் கொடுத்துப் பல பயங்களை விதைத்துள்ளோம். இதையெல்லாம் தகர்த்தெறிய வேண்டும். மக்களை அணுகி அவை செய்யும் சூழலியல் சேவைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். இவற்றிடம் பயப்பட வேண்டியதில்லை, கொல்ல வேண்டியதில்லை என்பதைப் புரியவைக்க வேண்டும்.

பூமியில் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுமே ஆச்சர்யங்கள் நிரம்பியவைதான். ஆனால் புலி, யானை, மான், பறவை போன்றவற்றின்மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பும் ஆர்வமும் ஏனோ ஊர்வனங்களின்மீது ஏற்படுவதே இல்லை. பல்லிகளும் பாம்புகளும் தவளைகளும் நம் நிலத்தின் சூழலியல் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அந்தப் பங்கு குறித்து ஆய்வு செய்துகொண்டிருப்பவர்தான் உயிரியலாளர் முனைவர்.சஞ்சய் மோலுர். Journal of Threatened taxa என்ற சர்வதேச ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகவும் Zoo Outreach என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவரைக் கோயம்புத்தூரில் சந்தித்தோம்.

ஊர்வனங்களுடைய பரிணாம வளர்ச்சி, மக்களுடனான பாம்புகளின் உறவு என அவருடன் பல்வேறு விஷயங்கள் உரையாடினோம்.

உயிரியலாளர், முனைவர்.சஞ்சய் மோலுருடைய பேட்டியின் முந்தைய பகுதியைப் படிக்க...

``அந்தமான் போன்ற தீவுகள், இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்புகள் என்று பூமியில் பல்வேறு வகை நிலப்பகுதிகள் உள்ளன. இவற்றில் வாழும் பாம்புகளின் உடலியல் அமைப்புகளில் அந்தந்த நிலத்துக்கேற்ப ஏதேனும் வித்தியாசங்கள் இருக்குமா! ஒரே பாம்பு வகையில் நான் கேட்கிறேன். உதாரணத்துக்கு, அந்தமானில் வாழும் நாகமும் இங்கு வாழும் நாகமும் உருவத்தில் மாறுபட்டிருக்கின்றன. இரண்டுமே நாகப்பாம்பு வகைதான். ஆனால், அந்தமான் நாகத்தின் நீளம் இங்குள்ள பாம்பின் நீளத்தைவிடக் குறைவு. இதற்குக் காரணம் என்ன? நிலப்பகுதிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறதா? இதற்கும் பாம்புகளின் பரிணாம வளர்ச்சிக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?"

பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி
Sanjay Molur

``இதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது. இது ஒருவகையான தகவமைப்புதான். தீவுகளில் வாழும் உயிரினங்கள், குறிப்பிட்ட எல்லைக்குள் சுருங்கி வாழவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன. அவைதம் கடலுக்கு நடுவே இருக்கும் அந்தச் சிறிய நிலப்பரப்பைத் தாண்டிப் போக முடியாது. அதனால், அதற்கு ஏற்றாற்போல் அவற்றின் உடலை எங்கிருந்து வந்தனவோ அங்கிருக்கும் வழக்கத்தைவிடப் பெரிதாகவோ அல்லது வழக்கத்தைவிடச் சிறிதாகவோ அமைத்துக் கொள்கின்றன. அதன்மூலம் தங்கள் இருப்பை அந்த நிலப்பகுதியில் தக்கவைத்துக்கொள்கின்றன.

ஆம், நிலப்பகுதிக்குத் தக்கவாறு உடலியல் அமைப்பிலும் சில மாற்றங்கள் இருக்கும். சிலநேரங்களில் இந்த வித்தியாசங்களோடு இருக்கும் உயிரினங்கள் இரண்டும் வெவ்வேறு வகையான துணை இனங்களாகவும் இருக்கின்றன. அவை ஒரே உயிரினம்தானா அல்லது வெவ்வேறு துணை இனங்களா என்பது ஆய்வுகளில்தான் தெரியவரும்."

``அரணைகளைப் பார்ப்பதற்குப் பாம்புகள் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன. அவை நகரும் விதம், தோல், தலை போன்றவை பாம்புகளோடு ஒத்துப் போகின்றன. அது பாம்புகளிலிருந்து பிரிந்து வந்த உயிரினம்தானா அல்லது பாம்புகளும் அரணைகளும் ஒரே மூதாதையிடமிருந்து பிரிந்து வந்தனவா?"

அரணை
அரணை
Pixabay

``அரணைகள், பாம்புகள் இரண்டுமே மிக மிகப் பழைமை வாய்ந்த பரிணாம வரலாற்றைக் கொண்டவை. தொடக்கத்தில் அனைத்து ஊர்வனங்களுக்குமே பொதுவான ஒரு மூதாதை இருந்திருக்கும். அந்தப் பொதுவான மூதாதை பெரும்பாலும் அரணைப் போலவே இருந்திருக்கலாம் என்றும் காலப்போக்கில் கால்களை இழந்து பாம்புகளாக ஓர் இனம் பிரிந்து வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரணைகளிலிருந்து பாம்புகளோ அல்லது பாம்புகளிடமிருந்து அரணைகளோ தோன்றவில்லை. அரணை போலவே தோற்றம் கொண்டிருந்த ஒரு பொதுவான மூதாதையிடமிருந்து தனித்தனி இனங்களாகப் பிரிந்து இரண்டும் வந்தன."

``சில உயிரினங்களின் பெயர்களில் சாதிப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, பிராமிணி பிளைண்டு பாம்பு (Brahmini Blind snake), பிராமிணி பருந்து (Brahmini kite), பறப்பருந்து அல்லது கரும்பருந்து (Paraiah Kite or Black Kite) போன்றவை. இந்தப் பெயர்களை மாற்றவேண்டும் எனச் சில சூழலியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், அதற்கான முயற்சிகளைப் பெரியளவில் யாரும் முன்னெடுக்காதது ஏன்? இத்தகைய பெயர்களை வைத்திருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?"

Sanjay Molur
Sanjay Molur
Payal Molur

``ஏனென்றால், ஓர் ஆராய்ச்சியாளர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார். அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதால் அந்தச் சாதியை அவர்கள் நினைக்கப்போவதில்லை. யாராவது ஏதாவதொரு காரணத்துக்காகப் பெயரிட்டிருக்கலாம். அதன் சொல்லிலக்கணத்தை ஆராய்ந்து பார்த்தால் அதற்கான காரணம் தெரிய வரலாம். ஆனால், ஆய்வாளர்களாக நாங்கள் பெயர்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அறிவியல் பெயர்களில்கூட இவைபோல் இருக்கின்றன. சில குறிப்பிட்ட நடத்தைகளை மையப்படுத்தி ஆரம்பத்தில் வைக்கப்பட்ட அறிவியல் பெயர்களில் சில இப்போது பாசிசப் பெயராகப் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக, நைஜர் என்ற பெயருக்கு லத்தீன் மொழியில் கறுப்பு என்று அர்த்தம். நைஜர் என்ற வகைப் பாம்புக்கு அந்தப் பெயரை அதன் நிறம் காரணமாக அப்படி வைத்துவிட்டதால், அது குறிப்பிட்ட இனத்தை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டது என்று சொல்லமுடியாது.

இருப்பினும் அது இப்போது பிரச்னைக்குரிய வகையில் இருக்கிறதென்றால், பொதுவான பெயர்களை மாற்றலாம். அவை ஏற்கெனவே மாற்றப்பட்டும் இருக்கின்றன. ஆனால், அறிவியல் பெயரை யாரும் மாற்ற முடியாது."

பாம்பு நடை, தவளை நடை... ஊர்வனப் பாதுகாப்பில் மக்களின் பங்கு! பகுதி-1

``ஊர்வனங்களோடு, குறிப்பாகப் பாம்புகளோடு மனிதர்கள் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு என்ன செய்ய வேண்டும்? உதாரணத்துக்கு, ஒரு பாம்பைப் பார்த்தாலே அதை அடித்துக் கொல்லவேண்டும் என்பதுதான் மனிதனின் முதல் எண்ணமாக இருக்கின்றது. இது மரபணு ரீதியாகவே உள்ளுணர்வாகக் (Instinct) கடத்தப்பட்டு வருகின்றது. இதைச் சரிசெய்ய, பாம்புகளிடம் மனிதர்களின் அணுகுமுறையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?"

பொறுப்பற்ற பல மூடநம்பிக்கைகள் நம்முள் மண்டிக் கிடக்கின்றன. பல்லி விழுந்தால் என்ன பலன் என்று சொல்லி பெரிய பட்டியலே வைத்துள்ளோம். அதற்குப் பயந்து பல்லிகளை அப்புறப்படுத்துகிறோம். அதேபோல், பாம்புகள்மீது ஒருவகை உயிர்ப் பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளோம்.
முனைவர்.சஞ்சய் மோலுர், உயிரியலாளர்

``பாம்புகளுக்கும் ஆன்மிக அடையாளம் கொடுத்துப் பல பயங்களை விதைத்துள்ளோம். இதையெல்லாம் தகர்த்தெறிய வேண்டும். மக்களை அணுகி அவை செய்யும் சூழலியல் சேவைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். இவற்றிடம் பயப்பட வேண்டியதில்லை, இவற்றைத் துரத்தவோ கொல்லவோ வேண்டியதில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. அதை நம்பிக்கையோடு செய்துகொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

இது நடக்கச் சில தலைமுறைகள் எடுக்கும். மிக நீண்ட தொடர் செயற்பாடுகளின் மூலமே இதைச் சாதிக்க முடியும்."

அடுத்த கட்டுரைக்கு