Published:Updated:

` வாழவே முடியாத இடத்தையும் மாசுபடுத்திவிட்டனர்!’ - `ஆர்ட்டிக் பகுதி' ஆய்வால் மிரண்ட ஆய்வாளர்கள்

சத்யா கோபாலன்

ஆர்ட்டிக் பகுதியில் நாங்கள் ஒரு வாரம் இருந்தோம். அங்கு அழகிய வெள்ளை நிறத்தில் பனிக்கட்டிகளைப் பார்த்தோம். ஆனால், உரிய கருவிகளைக்கொண்டு பனியை உற்று நோக்கியபோது, மிரண்டு போனோம்.

arctic plastic pollution
arctic plastic pollution ( AWI )

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகில், `எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்' என்ற நிலையே நீடித்து வருகிறது. `பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்' என அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எவ்வளவோ கோரிக்கைவிடுத்தும் பலனளிக்கவில்லை. பல நாட்டு அரசுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பாதியளவுக்குக்கூட தடுக்க முடியவில்லை.

arctic plastic pollution
arctic plastic pollution
AWI

மனிதர்களால் பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள் ஆகியற்றின் வயிற்றில் தங்கியிருப்பதைப் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறோம். மிகவும் உயரமான மலைப் பகுதிகள், ஆழமான கடல், அடர்ந்த காடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள், நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிகிறது.

ஆனால், தற்போது மனிதர்களே வாழமுடியாத இடத்திலும் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதை அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் சிலர், சமீபத்தில் பிளாஸ்டிக் இல்லாத இடத்தைத் தேடி பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது, அவர்களுக்கு முதலில் தோன்றிய விஷயம், ஆர்ட்டிக் பனிப் பிரதேசம்தான். அதிகக் குளிர் நிறைந்த பிரதேசமான இங்கு, மனிதர்கள் வாழமுடியாது. ` மனிதர்கள் இல்லாத பகுதியில் பிளாஸ்டிக் இருக்க வாய்ப்பே இல்லை' என்ற மகிழ்ச்சியில் ஹெலிகாப்டரில் பயணம்செய்து, ஆர்ட்டிக் பகுதிக்குச்சென்றுள்ளனர்.

arctic plastic pollution
arctic plastic pollution
AWI

ஆனால், அவர்களின் நம்பிக்கை முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், யாரும் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவுக்கு, அங்கு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் படிந்திருந்தன. பனிக்கட்டிகளின் மேல் படிந்திருக்கும் பிளாஸ்டிக்குகளைப் பார்த்த பிறகு, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பல கிலோமீட்டர் தூரம், பிளாஸ்டிக் நிறைந்த பகுதிகளில் நடந்துசென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

`வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்'- மான்களின் இறப்புக்குக் காரணமான பார்வையாளர்கள்

`` ஆர்ட்டிக் பகுதியில் நாங்கள் ஒரு வாரம் இருந்தோம். அங்கு அழகிய வெள்ளை நிறத்தில் பனிக்கட்டிகளைப் பார்த்தோம். ஆனால், உரிய கருவிகளைக்கொண்டு பனியை உற்று நோக்கியபோது, மிரண்டுபோனோம். மிகவும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் பனிக்குள் சிக்கியிருந்தன” என ஜகோப் ஸ்ட்ரோக் என்ற ஆராய்ச்சி மாணவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Micro plastic
Micro plastic
AWI

அமெரிக்க ஆராய்ச்சிக் குழு, பனியின் மேற்பகுதியில் மட்டும் பிளாஸ்டிக்குகளைப் பார்க்கவில்லை. பனிக்குள் 6 அடி வரை தோண்டியும் தொடர்ந்து பிளாஸ்டிக் துகள்கள் வந்துகொண்டே இருந்துள்ளன. கடலில் மட்டும் சுமார் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ஆழ்கடலில் உள்ளன. `அந்த பிளாஸ்டிக் துகள்கள்தான் நீரோட்டங்கள்மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டும்' என்றும், `சில பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் பறந்து பிற இடங்களுக்குச் சென்றிருக்கலாம்' என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.