Published:Updated:

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்... சூழலியல் அகதிகளான லட்சக்கணக்கான மக்கள்!

அஸ்ஸாம் வெள்ளம்
அஸ்ஸாம் வெள்ளம் ( PTI )

கடந்த ஒரே வாரத்திலேயே அஸ்ஸாம் முழுவதும் சுமார் 14 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 13-ம் தேதியிலிருந்து நிற்காமல் பெய்துகொண்டிருக்கும் மழையால், மீட்புப் பணிகள்கூட ஆங்காங்கே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது ஓர் ஒளிப்படம். இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. அந்த ஒளிப்படத்தைப் பார்த்தால் உங்கள் இதயம் ரணமாகும். அதைப் பார்ப்பதற்குமுன் இப்படிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் வாழ்ந்த இடம் முழுக்க நீரில் மூழ்கிவிட்டது. ஓடி விளையாடிய, காதலியைக் கவரச் சாகசங்கள் புரிந்த, உணவு கிடைத்த, ஓய்வெடுத்த நிலம் அத்தனையும் நீரில் மூழ்கிவிட்டது. அப்படியொரு வெள்ளம். அங்கிருந்து தப்பித்தால் போதுமென்று நீந்தத் தொடங்குகிறீர்கள். ஆனால், எங்கு திரும்பினும் நீர் நீர் நீர். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. கண்ணுக்குச் சிறிய திட்டு நிலமாவது தெரிந்திராதா என்ற ஏக்கத்தோடு தேடி நீந்திக் கொண்டேயிருக்கிறீர்கள்.

உங்கள் தேடல் வீண்போகவில்லை. நீர் மட்டுமே சூழ்ந்திருந்த சூழலில் நிலம் தெரிகிறது. மிகச் சிறிய மணல் திட்டு. அதுவே போதும். அடித்துப் பிடித்து நீந்திச் சென்று அங்கு கரையேறுகிறீர்கள். ஏறியவுடன் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

அதுவரை உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடியதில் உண்டான சோர்வு மொத்தமும் உங்களை அழுத்தும். ஒருவழியாகப் பிழைத்துவிட்டோம் என்ற நிம்மதியைத் தொப்பென்று அந்த மணல் திட்டில் விழுந்து மண் வாசத்தை நுகர்ந்தவாறு அதை முத்தமிட்டுக்கொண்டே ஆழமான பெருமூச்சாய் வெளிப்படுத்துவீர்கள். அப்படித்தான் அந்தக் காண்டாமிருகங்களும் செய்துகொண்டிருந்தன. படம் பார்த்துக் கதை சொல் என்பார்கள். இது கதையல்ல. அது வெறும் படமும் அல்ல. ஓர் உயிர் பிழைத்திருக்கச் செய்யும் போராட்டங்களின் ஆவணம்.

அந்த ஒளிப்படத்தில் 8 காண்டாமிருகங்கள், அந்தச் சிறிய திட்டில் ஏறியவுடன் தாங்கள் உயிர் பிழைத்த நிம்மதியை மேலே சொன்னவாறுதான் வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. ஏறிய வேகத்தில் நிலத்தில் விழுந்துவிட்ட அந்த பிரமாண்ட உடல்கள் தன்னுள் உயிரைப் பிடித்து வைக்கச் செய்த போராட்டங்களால் அவை எவ்வளவு சோர்வடைந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது அந்த ஒளிப்படம்.

கரையேறிய காண்டாமிருகங்கள்
கரையேறிய காண்டாமிருகங்கள்
Reuters

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகக் காசிரங்கா தேசியப் பூங்காவின் ஓவ்வோர் உயிரினமும் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றன. இல்லை, நீந்திக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால், காண்டாமிருகங்கள், மான்கள், யானைகள் என்று அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. தேசியப் பூங்காவுக்குள் சிக்கியிருக்கும் காட்டுயிர்களைக் காப்பாற்ற மீட்புக்குழுக்கள் 24 மணிநேரமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்த ஓர் காணொளி அனைவரையும் கண்கலங்க வைத்தது. காண்டாமிருகக் குட்டியொன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததையும் அதை மீட்புக்குழுவினர் காப்பாற்றப் போராடியதையும் அந்தக் காணொளி பேசியது.

அதேபோல், கூட்டமாக வெள்ளத்தில் தத்தளித்து தப்பி ஊருக்குள் வந்துவிட்ட சிறிய மான் கூட்டமொன்று குடியிருப்புக்குள் அடைக்கலம் தேடியது. காட்டைவிட்டு வெளியே வந்த புலி அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து மெத்தையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படம் இணையத்தில் வைரலானது.

கடந்த ஒரே வாரத்தில் அஸ்ஸாம் முழுவதும் சுமார் 14 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகள், அதீதமாகச் சூழ்ந்த வெள்ளநீரால் தொடர்பு அறுந்து தவிக்கின்றன. பர்பேட்டாவில் 52,000 பேர், தேமாஜியில் 1,38,000 பேர் தனித்துவிடப்பட்ட தீவுகளில் சிக்கியுள்ளனர். 2,168 கிராமங்களும் 51,752 ஹெக்டேர் விவசாய நிலங்களும் இதுவரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதுவும் ஒரே வாரத்துக்குள்.
அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு
வெள்ளத்தில் தவிக்கும் காட்டுயிர்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காட்டுயிர்கள்
PTI

13-ம் தேதியிலிருந்து நிற்காமல் பெய்துகொண்டிருக்கும் மழையால், மீட்புப் பணிகள்கூட ஆங்காங்கே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு வாரங்களுக்குமுன் கதையே வேறுவிதமாக இருந்தது. பூட்டானின் மலைகளிலிருந்து உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதியின் வடக்குப் பகுதியில்தான் அதிக மழை இருந்தது. அப்போது, அஸ்ஸாம் மாநிலத்தில் வழக்கத்தைவிட 14 சதவிகிதம் குறைவாக இருந்தது.

அருணாசலப் பிரதேசத்தில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில்கூட அஸ்ஸாமின் ஒருசில இடங்களில்தான் அதிக மழை இருந்தது. அப்போது பாக்ஸாவில் தொடங்கிய இந்த மழை விரைவிலேயே வெள்ளமாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. சுதாரிப்பதற்குள் அந்த மழையும் வெள்ளமும் லாகிம்பூர், தேமாஜி என்று தொடர்ந்தது.

பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் டவுன் டூ எர்த் என்ற ஆங்கில இதழுக்குக் கொடுத்த பேட்டியில் யாஸ்லி என்ற பகுதியிலிருந்த ரங்கனகுடி நீர்மின் நிலையத்திலிருந்து பெரிய அளவில் நீர் கடந்த 8-ம் தேதி திறந்துவிடப்பட்டதாகக் கூறியுள்ளார்கள். லாகிம்பூர் மாவட்டத்தில் 20 கிராமங்களை இது பெரியளவில் அழித்துள்ளது. அதோடு, 334 ஹெக்டேர் விவசாய நிலங்களையும் சீரழித்து, 10,164 பேரை இடம் மாற்ற இந்தச் செயல் காரணமாகியுள்ளது. அது நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஜூலை 9-ம் தேதி மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது. நிற்காமல் பெய்துகொண்டேயிருந்த மழை நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்தக் காரணங்களால், மாஜுலி மாவட்டமும் காசிரங்கா தேசியப் பூங்காவும் நீரில் மூழ்கியுள்ளன. உலகிலேயே நதிகளிலுள்ள தீவுகளில் மிகப் பெரியதாகக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற, இந்தியாவிலேயே முதல்முறையாக நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த நிலப்பகுதி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பெருமையைக் கொண்ட மாஜுலி (Majuli) மாவட்டம் இப்போது நீருக்குள். ஏற்கெனவே, மனிதத் தலையீடுகளால் நில அரிப்புக்கு உள்ளாகி 20-ம் நூற்றாண்டில் 880 சதுர கிலோமீட்டராக இருந்த தீவு இப்போது 352 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. அதுவும் இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்காவில் சூழ்ந்த வெள்ளம் - விலங்குகள் தப்பிக்க உதவிய செயற்கைச் சமவெளி!
இந்தியாவின் பெருமைமிகு உயிரினமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வாழும் காசிரங்கா தேசியப் பூங்காவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அஸ்ஸாம் காடு மற்றும் காட்டுயிர் துறை வெளியிட்ட அறிக்கைப்படி, இப்போது அதன் 70 சதவிகித நிலப்பகுதி நீரில் மூழ்கிவிட்டது.

வெள்ளச் சேதங்களிலிருந்து மக்களை மீட்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 234 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு 20,047 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில முதலமைச்சர் சர்பானந்தா சொனோவல் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து துணை ஆணையர்களை அழைத்து ஆலோசனை செய்துள்ளார். நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, வெள்ளப் பாதிப்புகளும் நிலவரமும் மிக அதிகமான சேதங்களை அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றன.

காசிரங்கா தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப் பூங்கா
PTI

மனிதர்கள், காட்டுயிர்கள் என்ற பாரபட்சமின்றிப் பாதித்துக் கொண்டிருக்கிறது அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம். மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன. இந்திய நிலப்பகுதிகள் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கைப் பேரிடரை எதிர்கொள்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அவற்றின் வீரியமும் சேதங்களும் அதிகரித்த வண்ணமே இருப்பது வேதனையளிக்கிறது. இனியும் மத்திய மாநில அரசுகள் சூழலியல் பிரச்னைகளை இரண்டாம் பட்சமாகப் பார்த்துக்கொண்டிருந்தால், இந்த நிலை வரும் காலங்களில் இன்னமும் மோசமாவதை யாராலும் தடுக்க முடியாது.

அடுத்த கட்டுரைக்கு