Published:Updated:

`மெட்ரோ ரயில்களால் பலியாகும் பட்டாம்பூச்சிகள்!' -சென்னைக் கல்லூரி ஆசிரியரின் கலங்கவைக்கும் போராட்டம்

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சதீஷ், ரயில் நிலையத்தின் முகப்பில் தினமும் பட்டாம்பூச்சிகள் இறந்து கிடப்பதைக் கவனித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

இந்திய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருவெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க மெட்ரோ ரயில் சேவையும் வந்துவிட்டது. இந்த வளர்ச்சி, வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவை அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சரி.. விஷயத்துக்கு வருவோம்.

Representational Image
Representational Image

அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் வேலைக்குச் சென்று வந்த பலருக்கு மெட்ரோ ரயில் திட்டம் மிகப் பெரிய வரபிரசாதம். மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் தற்போது எந்தப் பிரச்னையுமின்றி சுமுகமாக இயங்கி வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களால் சின்னச் சின்ன உயிரினங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக வேதனைப்படுகிறார் சென்னையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர்.

பிராட்வே பகுதியைச் சேர்ந்த சதீஷ் மார்க் க்ரிகோரியஸ், கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசியராகப் பணியாற்றி வருகிறார். தினமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சதீஷ், ரயில் நிலையத்தின் முகப்பில் அன்றாடம் பட்டாம்பூச்சிகள் இறந்து கிடப்பதைக் கவனித்துள்ளார். இயற்கை ஆர்வலரான இவர் , தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வுக்காக மனு ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

சதீஷ்
சதீஷ்

சதீஷிடம் பேசினோம். ``நான் மெட்ரோ ரயிலில்தான் வேலைக்குச் சென்று வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் ரயில் நிலையத்தின் முகப்பில் நான்கு பட்டாம்பூச்சிகள் இறந்து கிடப்பதைக் கவனித்தேன். அதன்பின்னர் தினமும் ரயில் நிலையத்தைச் சுற்றி கவனிக்கத் தொடங்கினேன். சின்னச் சின்ன பூச்சிகள், தும்பிகள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவை சில இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

தினமும் நான்கு ஐந்து பட்டாம்பூச்சிகள் இறந்துகிடந்தன. அதைப் பார்க்கவே மனம் பதைபதைத்தது. நான் இயற்கை மீது தீராக் காதல் கொண்டவன். சின்ன உயிரினங்கள் என்றாலும் வலி ஒன்றுதானே. மெட்ரோ ரயில் நிலையங்களின் முகப்பில் கண்ணாடிக் கதவுகள் இருப்பதால் ஏதோ வழி என நினைத்து பட்டாம்பூச்சிகள் உள்ளே நுழைகின்றன. பின்னர் எப்படி வெளியே போவது எனத் தெரியாமல் முட்டி மோதி இறந்துவிடுகின்றன.

கோரிக்கை
கோரிக்கை

இதுபற்றி முதல்வரின் தனிச் செல்லுக்கு மனு கொடுத்தேன். என் முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். இதற்கு கண்டிப்பா ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பினேன். என் முகநூல் பதிவைப் பார்த்து நண்பர்கள் சிலர், `நீ என்ன பைத்தியமா’ எனக் கேட்டு புண்படுத்தினார்கள். `இது பைத்தியக்காரத்தனம். இதற்கெல்லாமா மனு கொடுப்பாய்’ என நெருங்கிய நண்பரே திட்டினார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் அலுவலகம்

அன்று மனம் உடைந்து போய் வீட்டுக்கு வந்தேன். மேசை மீது முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் இருந்தது. நான் கொடுத்த மனுவின் அடிப்படையில், `சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதில் வந்திருந்தது. அந்தக் கடிதத்தை நண்பரிடம் காட்டினேன். `தெரியாமல் அப்படிப் பேசிவிட்டேன்' என மன்னிப்பு கேட்டார்.

பதில் கடிதம்
பதில் கடிதம்

நான் மனு கொடுத்த பிறகு திருமங்கலம் மெட்ரோ நிலையத்துக்கு முதல்வர் செல்லிலிருந்து ஆய்வுக்கு வந்துள்ளனர். மறுநாளிலிருந்து நான் பட்டாம்பூச்சிகளைப் பார்க்கவில்லை. அவை இறந்து விழுந்தாலும், உடனே சுத்தம் செய்துவிடுகின்றனர்.

`நிலாவில் தண்ணீரைக் கண்டுபிடித்தால்..!’ - இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ கோரிக்கை!

ஆனால், நான் சொன்ன பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. `ரயில் நிலையங்களில் தானியங்கிக் கதவுகளை வைத்தால் பறவைகள் பாதிக்கப்படும்' எனத் தமிழக அரசு அனுப்பியிருந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், `இதற்கான தீர்வை ஆலோசிக்கிறோம்' எனப் பதில் அளித்திருந்தனர். இந்தக் கடிதம் கைக்கு வந்து சில மாதங்கள் கடந்துவிட்டன.

ரயில் நிலையத்தில் பட்டாம்பூச்சிகள்
ரயில் நிலையத்தில் பட்டாம்பூச்சிகள்

தினமும் இரண்டு, மூன்று பட்டாம்பூச்சிகள் கதவுகளில் முட்டி மோதுவதை நான் பார்க்கிறேன். அவை திசையறியாமல் தவிப்பதை என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னால எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறேன். கண்ணாடிக் கதவுகளில் எதாவது டிசைன் போட்டு வைத்தால்கூட அவை கிட்ட வருவதற்கு வாய்ப்பில்லை.

இதுகுறித்து திரும்பவும் ஒரு மனு கொடுக்கலாம் என இருக்கிறேன்’’ என ஆதங்கத்துடன் பேசி முடித்தார்.

ரயில் நிலையத்தில் பட்டாம்பூச்சி
ரயில் நிலையத்தில் பட்டாம்பூச்சி

ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தாலும் சாலை மேம்பாடு என்ற பெயராலும் அழிக்கப்படும் மரங்களால் வாழ்வைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல... இப்பூவுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஊன்றுகோலாக இருக்கக் கூடிய சின்னச் சின்ன உயிரினங்களும்தான்.

பேராசிரியர் சதீஷின் வார்த்தைகளால் சொல்வதானால், ` சின்ன உயிரினம் என்றாலும் வலி ஒன்றுதானே...?!'