Published:Updated:

வைரலாகும் வாழை இலை பேக்கிங்... தாய்லாந்தில் அசத்தல் முயற்சி!

பிளாஸ்டிக் பேக்கிங்களுக்குப் பதிலாக தாய்லாந்தில் ஓர் இடத்தில் தற்போது வாழை இலையைப் பயன்படுத்தி பேக்கிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் அங்கு ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

Banana Leaves Packaging
Banana Leaves Packaging

வாழை இலை தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. உணவகங்களில் வாழை இலையில் பேக்கிங் செய்யும் பழக்கம் நம்மிடம் பன்னெடுங்காலமாக இருக்கிறது. இலைகளில் உணவை உண்ணும் பழக்கம் ஆதிமனிதன் காலத்திலிருந்து இருக்கிறது. வீட்டு விசேஷங்களில் வாழை இலையில் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். ஆனால், தற்போது வாழை இலைக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் இலைகளைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மாறிவிட்டோம். நல்லவேளை, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. இல்லையென்றால் இன்னும் சில ஆண்டுகளில் வாழை இலை வழக்கொழிந்து போயிருக்கும். இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் உணவுப் பொருள்கள் மற்றும் மளிகை பொருள்களைப் பேக்கிங் செய்ய வாழை இலைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வாழை இலை பேக்கிங்
வாழை இலை பேக்கிங்

தாய்லாந்து நாட்டில் சியாங்மாய் நகரில் உள்ள ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்தான் வாழை இலை பேக்கிங் முறையைப் பயன்படுத்தி வருகிறது. இதை அங்குள்ள பர்ஃபெக்ட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தது. அந்தப் படங்கள் உலகளவில் வைரலானது. இன்றைக்குத் தமிழ்நாட்டிலும் வாட்ஸ்அப்களில் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2050-ம் ஆண்டில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் பெருங்கடல்களில் 12 பில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கும். அதில் பெரும்பாலும் சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், உணவு ரேப்பர்கள், பிளாஸ்டிக் மளிகைப் பொருள்கள் அதிகம் இருக்கும்.
ஐ.நா அறிக்கை

பிளாஸ்டிக் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக்கொண்டு இருக்கிறது. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "2050-ம் ஆண்டில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் பெருங்கடல்களில் 12 பில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கும். அதில் பெரும்பாலும் சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், உணவு ரேப்பர்கள், பிளாஸ்டிக் மளிகைப் பொருள்கள் அதிகம் இருக்கும். அதிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகள் அதிகளவில் இருக்கும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழை இலை பேக்கிங்
வாழை இலை பேக்கிங்

தற்போது 9 பில்லியன் டன்னுக்கும் மேலாகப் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதில் 10 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் சூழலுக்குக் கேடு விளைவித்துக்கொண்டுள்ளன. இதற்கு மாற்று தேடி உலகமே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேரி பேக் மற்றும் மளிகைப் பொருள்களுக்கான பிளாஸ்டிக் பேக்கிங் பொருள்களுக்குப் பதிலாக வாழை இலை பேக்கிங் முறையைக் கையிலெடுத்துள்ளது ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்.

தாய்லாந்து நாட்டில், 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிம்பிங், 'பச்சை மளிகை' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆறு பல்பொருள் அங்காடிகள் உள்ளன. காய்கறிகள், மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்களை வாழை இலையில்தான் பேக்கிங் செய்கிறார்கள். இந்த அங்காடியில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 50 தாய்பட் (அதாவது ~1.64 அமெரிக்க டாலர்கள்) சன்மானமாகக் கொடுக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் வாழை, ஆண்டு முழுவதும் விளைகிறது. அங்குள்ள வாழை சார்ந்த தொழில்களில் மெழுகு இலைகள் தயாரிப்பு மிக முக்கிய தொழில். இதற்காக மரத்தின் பல பாகங்கள் பயன்படுகின்றன. வாழை இலைகள் அதிகம் ஒதுக்கப்படும். இதனால் பெரும்பாலும் இலைகள் வீணாகும். இப்படி வீணாகும் வாழை இலைகளைச் சேகரித்து பேக்கிங் செய்கிறது அந்த நிறுவனம். சேகரிக்கும் செலவு மட்டும்தான். வாழை இலைகளை மடித்து, மூங்கில் தப்பைகள் மூலமாகக் கட்டிக்கொடுக்கிறார்கள். இதனால் பிளாஸ்டிக் பேக்கிங்க்கான செலவு குறைவதாகச் சொல்கிறது அந்த நிறுவனம்.

வாழை இலை பேக்கிங்
வாழை இலை பேக்கிங்

இதற்குள்ள வரவேற்பு பல நிறுவனங்களை வாழை இலை பேக்கிங் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது. வியட்நாமிலும் வாழை இலை பேக்கிங் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் சன்னி பீ என்ற நிறுவனம் காய்கறிகளை வாழை இலையில் பேக்கிங் செய்து கொடுத்து வருகிறது.

வாழை இலை பொருள்கள்
வாழை இலை பொருள்கள்

இயற்கை விவசாயிகள் அதிகரித்து வரும் சூழலில், இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், நம் நாட்டிலும் வாழை இலையில் பேக்கிங் செய்ய வணிகர்கள் முன்வர வேண்டும். இயற்கை விவசாய அங்காடிகள் இதை முன்னெடுக்க வேண்டும். இந்த முறை வழக்கத்துக்கு வந்தால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு குறையும். விவசாயிகளும் பயனடைவார்கள்.