Published:Updated:

`வெள்ளத்தில் வந்துவிட்டது விஷப்பாம்புகள்; மருந்து ஸ்டாக் இல்லை!'- அரசின் அறிவிப்பால் அச்சத்தில் ரஷ்ய மக்கள்

துரை.நாகராஜன்

மாஸ்கோவிற்கு அருகிலிருக்கும் பகுதிகளிலும்கூட எப்போதாவது வெளிப்படும் இந்தப் பாம்புகள், இப்போது அதிக அளவில் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.

ரஷ்ய வெள்ளம்
ரஷ்ய வெள்ளம்

ரஷ்யா நாட்டின் சைபீரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக இந்த மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. சைபீரியாவின் தென்கிழக்குப் பகுதி பல நாள்களாக நீடித்த பயங்கர வெள்ளத்திலிருந்து மீண்டு வருகிறது. 180 ஆண்டுகளில் இதுதான் மிகப் பெரிய வெள்ளம் என்று அறிவித்திருக்கின்றனர்.

பாம்பு
பாம்பு
Pixabay

கடந்த ஜூன் மாத இறுதியில் பெய்த மழையால் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 7 பேரின் நிலை பற்றி தகவல் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நிலையில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அதிகமான கட்டு விரியன் விஷப் பாம்புகள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் ஒன்று, இரண்டு என வெளிப்பட ஆரம்பித்த பாம்புகள் பின்னர் அதிகமான அளவில் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. இவை அனைத்தும் விஷம் அதிகம் கொண்ட பாம்புகள்.

"இந்தப் பாம்புகள் கடித்தால் ஆபத்து ஏற்படும். எங்களிடம் குறைவான மருந்து மட்டுமே ஸ்டாக் இருக்கிறது. அதனால் மக்கள் பாதுகாப்பாக இருங்கள்" என சைபீரியாவின் சன்ஸ்கி மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய ரஷ்ய பகுதியான செல்லியாபின்ஸ்கில் (Chelyabinsk) மருந்து கொண்டுவர தாமதமானதால், ஒரு நபர் விஷப் பாம்புக் கடியால் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பாம்புகள் கடித்தால் ஆபத்து ஏற்படும். எங்களிடம் குறைவான மருந்து மட்டுமே ஸ்டாக் இருக்கிறது. அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம்
சைபீரியாவின் சன்ஸ்கி மாவட்ட நிர்வாகம்

ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு அருகிலிருக்கும் பகுதிகளிலும்கூட எப்போதாவது வெளிப்படும் இந்தப் பாம்புகள், இப்போது அதிக அளவில் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. ரஷ்யாவில் சுற்றித் திரியும் 50-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்களில் 11 இன பாம்புகள் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளாக கருதப்படுகின்றன.