Published:Updated:

நத்தைகளை நீரில் கழுவி சாப்பிடும் நாரை! என்ன காரணம் தெரியுமா? பறவை சூழ் உலகு - 6

நத்தைக் குத்தி நாரை ( jai )

அலகு அகலமாகத் திறந்திருப்பதால் இதை அகலவாயன் என்றும் நத்தைகளை முதன்மையான உணவாக உட்கொள்வதால் இதற்கு நத்தைக் குத்தி நாரை என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

நத்தைகளை நீரில் கழுவி சாப்பிடும் நாரை! என்ன காரணம் தெரியுமா? பறவை சூழ் உலகு - 6

அலகு அகலமாகத் திறந்திருப்பதால் இதை அகலவாயன் என்றும் நத்தைகளை முதன்மையான உணவாக உட்கொள்வதால் இதற்கு நத்தைக் குத்தி நாரை என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

Published:Updated:
நத்தைக் குத்தி நாரை ( jai )

கடந்த வாரம் `சங்குவளை நாரை' குறித்து பார்த்தோம், இந்த வாரம் `நத்தைக் குத்தி நாரை' குறித்து பார்க்கலாம். இதற்கு `அகல வாயன்' என்று மற்றொரு பெயரும் உண்டு. சிகோனிடே குடும்பத்தைச் சார்ந்த இப்பறவையின் அறிவியல் பெயர் `அனாஸ்டோமஸ் ஆசிட்டன்ஸ்' என்பதாகும்.

இந்தியாவின் பல பாகங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை இனம். இதனுடைய அலகின் மையத்தில் திறந்த இடைவெளி காணப்படும். எனவே, இதை ஆங்கிலத்தில் `ஓப்பன் பில்' என்றழைக்கின்றனர். அலகு அகலமாக திறந்திருப்பதால் இதை அகலவாயன் என்றும் நத்தைகளை முதன்மையான உணவாக உட்கொள்வதால் இதற்கு நத்தைக் குத்தி நாரை என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

நத்தைக் குத்தி நாரை
நத்தைக் குத்தி நாரை
Sankar Subramanian

நத்தைகள் தவிர்த்து மீன், தவளை, நண்டு, பல்லிகள் போன்றவற்றையும் உண்ணும். குளங்களிலும் குட்டைகளிலும் இரண்டு மூன்று பறவைகள் சேர்ந்து உணவு தேடிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள வயல்களில் களப்பணிக்காக சென்றிருந்தேன், அப்போது அங்குள்ள ஓடைகளில் நத்தைகள் செழிப்பாகக் காணப்பட்டன. அந்த ஓடையில் சில நத்தைக்குத்தி நாரைகள் சுறுசுறுப்பாக நத்தைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அப்போது அவற்றை உற்று நோக்கும்போது அவை நத்தையைப் பிடித்து அப்படியே விழுங்கி விடுவதில்லை. பிடித்த நத்தையை நீரில் சுத்தமாகக் கழுவி பின்னர் ஓட்டை உடைத்து சதைப்பற்றை மட்டும் விழுங்குவதைப் பார்க்க முடிந்தது. ஒரு பறவை தன்னுடைய இரையை சுத்தமாகக் கழுவி உண்ணுவதைப் பார்க்க மிக வியப்பாக இருந்தது.

வழங்கு பெயர்: நத்தைக் குத்தி நாரை, அகலவாயன்

பண்புகள்: ஆழம் குறைந்த சதுப்பு நிலப் பகுதிகளில் மற்ற இனப் பறவைகளுடன் சேர்ந்து உணவு தேடும். நத்தையின் மேலோட்டை அலகில் உள்ள இடைவெளியில் பிடித்து உடைக்கும்.

வரையறை: சாம்பல் கலந்த வெண்ணிறப் பறவை, தடித்த அலகு செங்கறுப்பு நிறமாகவும், இறக்கைகள் மற்றும் வால் கருநிறமாகவும் கால்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபடாத பறவைகள் மங்கலான நிறத்தில் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனப்பெருக்கம்: ஜனவரி - மே, கொக்கினப் பறவைகளுடன் சேர்ந்து மரங்களில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம் மிகவும் பிரசித்திபெற்றது. அங்குள்ள நாறும்பூநாதர் கோயிலில் உள்ள மருதம், இலுப்பை, நெட்டிலிங்கம் போன்ற மரங்களில் சங்குவளை நாரை மற்றும் கூளக்கிடா நூற்றுக் கணக்கில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும்.

நத்தைக் குத்தி நாரை
நத்தைக் குத்தி நாரை
Sankar Subramanian

திருப்புடைமருதூருக்கு அருகில் உள்ள நந்தன்தட்டை கிராமத்தில் சாரல்குளம் என்ற குளம் உள்ளது. அந்தக் குளக்கரையில் 50-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்தன. அந்தப் பனைமரங்களில் நூற்றுக்கணக்கான நத்தைக்குத்தி நாரைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ததைப் பத்து வருடங்களுக்குமுன் நான் பார்த்துள்ளேன். தற்போது அந்தக் குளத்துக்குச் சென்று பார்த்தபோது பனை மரங்களைக் காணவில்லை.

என்னவென்று விசாரித்தபோது குளத்தை தூர்வாரும்போது பனைமரத்தை வெட்டிவிட்டார்கள் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, குளத்தை தூர்வாருவதற்காகக் குளக்கரையில் உள்ள மரங்களை வெட்ட என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. குளங்களில் உள்ள மரங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள பசுமைக் குழுக்கள் இதற்கான முன்னெடுப்புகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

சாரல்குளத்துக்குப் பின் தற்போது திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் குளத்திலும் தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குளத்திலும் கடந்த சில வருடங்களாகக் குளங்களில் உள்ள நாட்டுக்கருவேலம் மற்றும் சீமைக் கருவேல மரங்களில் நூற்றுக்கணக்கான நத்தைக்குத்தி நாரைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்வதைப் பார்க்க முடிந்தது. இந்தக் குளங்களில் உள்ள மரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.

நத்தைக் குத்தி நாரை
நத்தைக் குத்தி நாரை
Jai

என்னுடன் பணிபுரியும் பீகாரைச் சார்ந்த நண்பர் அபிசேக் சாமராட்டிடம் நத்தைக்குத்தி நாரைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. பீகாரில் கங்கை நதிக் கரைகளில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் நத்தைகளில் விஷத்தை தடவி விடுவார்களாம். அதைச் சாப்பிடும் நத்தைக் குத்தி நாரை மயக்கமடைந்துவிடுமாம். அதை அந்த மக்கள் எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள் என்று சொன்னார், இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நத்தைகளில் உள்ள அழுக்கு மண்னை கழுவித் திண்ணத் தெரிந்த நத்தைக் குத்தி நாரைகளுக்கு மனிதர்களின் அழுக்கு மனதை கழுவத் தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism