Published:Updated:

பொம்மி மழைக்காடு பசுமையை உருவாக்கும் பகிர்வு!

 கண்மாய் கரையில் பகிர்வு குழுவினர்...
பிரீமியம் ஸ்டோரி
கண்மாய் கரையில் பகிர்வு குழுவினர்...

முயற்சி

பொம்மி மழைக்காடு பசுமையை உருவாக்கும் பகிர்வு!

முயற்சி

Published:Updated:
 கண்மாய் கரையில் பகிர்வு குழுவினர்...
பிரீமியம் ஸ்டோரி
கண்மாய் கரையில் பகிர்வு குழுவினர்...

டந்த சில ஆண்டுகளில் நம்மிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, வாட்ஸ்அப். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால்கூடக் கவலைப்படாத மனிதர்கள், வாட்ஸ்அப் இல்லாவிட்டால் போர் தொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில், பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தீர்வு கிடைப்பதையும் மறுக்க முடியாது.

வாட்ஸ்அப் மூலமாக இணைந்த 40 நண்பர்கள், மியோவாக்கி காடுகள், மழைநீர்ச் சேகரிப்பு அமைப்புகள், இயற்கை விவசாய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள், நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகள் என அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது, சமீபத்திய சாதனை, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த செக்காரப்பட்டி கிராமத்தில் தூர்ந்துபோன கசிவுநீர்க் குட்டையைச் சீரமைத்துக் கொடுத்திருப்பது. இந்தக் குழுவின் பெயர் ‘பகிர்வு’. ‘ஊர்கூடித் தேர் இழுத்தால் வந்து சேரும்’ என்பார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, பகிர்வு வாட்ஸ்அப் குழு.

மலர்விழி
மலர்விழி

இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் இந்தக் குழுவின் நிர்வாகியாக இருப்பவர், மலர்விழி. ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே இவர் அறிமுகமானவர்தான். சென்னையில் வசிக்கும் அரசுப் பணியாளர். 2013-ம் ஆண்டு முதல் நடப்புத் தேதி வரை வெளிவந்த பசுமை விகடன் இதழ்கள் அத்தனையையும் பத்திரமாக வைத்துள்ளார். அதில் உள்ள தகவல்களை விவசாயிகளுக்குப் பரப்பும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பகிர்வுக் குழு குறித்து மலர்விழியிடம் பேசினோம். “நானும் ஒரு விவசாயியா மாறியிருக்கிறதுக்குப் பசுமை விகடன்தான் காரணம். அதுல வர்ற கட்டுரைகள் மூலமா நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு விவசாயி, இத்தனை லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்ங்கிற மாதிரியான கட்டுரைகள் அந்த விவசாயியின் உழைப்பைப் பொறுத்தது. ஆனால், சூழலியல், இயற்கை தொடர்பா வர்ற கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும். இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புப் பயிற்சி மாதிரியான எந்தப் பயிற்சியிலும் நான் கலந்துக்கல. ஆனால், என்னால் எல்லா இடுபொருள்களையும் தயாரிக்க முடியும். அவற்றைப் பயன்படுத்துகிற விதமும் தெரியும். ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை வழி விவசாயத்தைச் செய்து, நல்ல விளைச்சல் எடுத்திருக்கேன். சென்னையைச் சேர்ந்த என்னால, விவசாயத்துல நல்லது செய்ற பூச்சிகள், தீமை செய்ற பூச்சிகள் எல்லாத்தையும் அடையாளம் காண முடியும். இதுக்கெல்லாம் காரணம் பசுமை விகடன்தான்’’ என்ற மலர்விழி, பகிர்வு உருவான விதம்குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

 தடுப்பணை சீரமப்புக்குப் பின் ஊர் மக்களுடன் பகிர்வு குழுவினர்...
தடுப்பணை சீரமப்புக்குப் பின் ஊர் மக்களுடன் பகிர்வு குழுவினர்...

“ பல வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தேன். விவசாயம், சுற்றுச்சூழல் பற்றி அந்தக் குழுக்களில் பேசுவாங்க. ஒரு கட்டத்துல தேவையில்லாத விஷயங்கள், ஃபார்வர்டு செய்திகள்னு பதிவு பண்ண ஆரம்பிச்சாங்க. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பற்றி மட்டுமே கருத்து பரிமாறும் குழுவா இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அப்படியொரு குழுவை நாமளே உருவாக்கலாம்னு இந்தக் குழுவை ஆரம்பித்தேன். என்னை மாதிரியே ஒத்த கருத்துள்ள நபர்களை அதுல இணைச்சேன். ஆரம்பத்தில் 10 நபர்களோடு தொடங்கிய குழுவில், இப்போ 40 உறுப்பினர்கள் இருக்காங்க. பல மாவட்டத்தைச் சேர்ந்தவங்க, வெளிநாட்டுல வசிக்கிறவங்கெல்லாம் உறுப்பினரா இருக்காங்க. குழு உறுப்பினர்கள் இயற்கை விவசாயம் செய்றாங்க. அவங்களோட விளை பொருள்களை எங்க குழு உறுப்பினர்களே வாங்கிக்கிறோம்.

நாங்க சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு குழுவில் பேசினோம். அதுவரைக்கும் வெறும் வாட்ஸ்அப் குழுவா இருந்த பகிர்வு, அதுக்கப்புறம் இயற்கையைப் பாதுகாக்கும் இயக்கமா மாறிடுச்சு. முதல் பணியா, மியோவாக்கி முறையில காடுகளை உருவாக்கலாம்னு பேசினோம். தஞ்சாவூர்ல ஆனந்தராஜ்ங்கிற தம்பி, மேட்டுவயல் என்கிற கிராமத்துல உள்ள தன்னோட நிலத்தில் 18 சென்ட் இடத்தை இதுக்காக ஒதுக்கித் தர்றேன்னு சொன்னார். உடனே அந்த வேலையை ஆரம்பித்தோம். குழுவில் இருக்கிற நண்பர்களெல்லாம் சேர்ந்து முடிந்தளவு பணத்தைப் போட்டோம். மீதியை ஆனந்தராஜ் போட்டுக்கிட்டார். 2017-ம் வருஷம் அங்கே போய், குழு உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டோம். மொத்தம் 2,000 மரக்கன்றுகளை நடவு செய்தோம். தொடர்ந்து அந்த இடத்தை ஆனந்தராஜ் பராமரிக்கிறார்.

 கண்மாய் கரையில் 
மரக்கன்றுகள் நடுதல்..
கண்மாய் கரையில் மரக்கன்றுகள் நடுதல்..

இன்னிக்கு அந்த இடம் பசுமையான காடா மாறியிருக்கு. நிறைய பறவைகள் அதுல வந்து உக்காருது. அந்த ஊரோட பாரம்பர்ய நெல்லின் பெயர் பொம்மி. இப்ப அந்த ரகம் இல்லை. அதனால, நாங்க உருவாக்கின காட்டுக்குப் ‘பொம்மி மழைக்காடு’னு பேர் வெச்சிருக்கோம். முதல் முயற்சி வெற்றி அடைஞ்சதால எங்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்பட்டுச்சு. அடுத்து, எங்க குழு உறுப்பினர் கந்தனோட மனைவி வேலை செய்ற காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்குளத்தூர் அரசு பள்ளியில மியோவாக்கி முறையில மரக்கன்றுகளை நடலாம்னு முடிவு செய்தோம். அதுக்கான அனுமதியை வாங்கிட்டு, அந்தப் பள்ளி மாணவர்கள் மூலமாவே மரங்களை நட வெச்சோம். மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துச் சொன்னோம். அந்தப் பள்ளி மாணவர்கள்தான் மரங்களைப் பராமரிச்சிட்டு இருக்காங்க.

தடுப்பணை சீரமைப்புக்கு முன்...
தடுப்பணை சீரமைப்புக்கு முன்...

அடுத்ததா, சிவகாசியில தெற்கு ஆணைக்குட்டம் கிராமத்துல 350 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கண்மாய்ச் சிதிலமாகி கிடக்கிறதா உறுப்பினர் கருப்பசாமி சொன்னார். அதைத் தூர்வாருவதற்கான முயற்சிகளை எடுத்தப்போ நிறைய பணம் தேவைப்பட்டது. எங்க உறுப்பினர்களால் அவ்வளவு பணம் திரட்ட முடியலை. அதனால, கண்மாய்க் கரையில 450 மரக்கன்றுகளை நடவு செஞ்சதோடு, கரையில் 12,000 பனை விதைகளை நடவு செய்திருக்கிறோம். அந்தப் பணியில உள்ளூர் இளைஞர்களையும் இணைச்சிக்கிட்டோம். அந்த மரங்கள்லாம் நல்லா வளர்ந்திருக்கு. அந்தப் பணிக்கு, அமெரிக்காவுல இருக்கிற எங்க உறுப்பினர் பிரவீனா தம்பதி உதவி செஞ்சாங்க. எங்க பணிகளைப் பார்த்துட்டு, ‘சே ட்ரீ’ங்கிற அமைப்பு, நீர்நிலைகளைத் தூர்வார உதவி செய்ய முன்வந்துச்சு.

அதைப் பயன்படுத்தி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகேயுள்ள செக்காரப்பட்டி கிராமத்தில் ஒரு கசிவுநீர்க் குட்டையைச் சரிசெய்தோம். மலையில விலங்குகள் தண்ணி குடிக்கிற குட்டை அது. மேடாகிக் கிடந்தது. அதைத் தூர்வாரி, கரையைப் பலமாக்கினதோடு அங்க இருந்த தடுப்பணையையும் சீரமைத்துக் கொடுத்தோம். இதுல எங்க உறுப்பினர்கள்கூட ஊர் மக்களையும் இணைஞ்சு வேலை செஞ்சாங்க. வனத்துறையும் தேவையான உதவிகளைச் செஞ்சது. இப்போ அந்தக்குட்டை, மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கு. அந்த ஊர்ல எங்க உறுப்பினர்கள் வடிவழகன், சங்கர் ரெண்டு பேரும் இருக்காங்க” என்ற மலர்விழி நிறைவாக,

“வெறும் வாட்ஸ்அப் குழுவா மட்டும் இல்லாம, எங்களால முடிஞ்ச சமுதாயப் பணிகளைச் செய்துட்டு இருக்கோம். நாங்க எல்லோரும் இயற்கையை நேசிக்கிறவங்க. இந்த முயற்சிக்கு என் குடும்பம் உள்பட அனைவரது குடும்பங்களும் முழு ஆதரவு தர்றாங்க. மழைநீர்ச் சேகரிப்பு, மரங்கள் வளர்ப்பு விழிப்பு உணர்வை மாணவர்கள்கிட்ட கொண்டு போகப்போறோம்.

எங்களோட அடுத்த பணியைத் தஞ்சாவூர்ல செய்யலாம்னு திட்டமிட்டி ருக்கோம். இப்ப குழு உறுப்பினர்கள் எல்லோரும் மாசம் 200 ரூபாய் சேமிக்கிறோம். அந்தப்பணத்துலதான் இது மாதிரியான பணிகளைச் செய்றோம். எங்க குழு உறுப்பினர்கள் மாதிரி, அதிகமான குழுக்கள் உருவாகணும். எல்லோரும் சேர்ந்து இயற்கையைப் பாதுகாக்கணும். இதுதான் எங்க எதிர்பார்ப்பு” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு

மலர்விழி,

செல்போன்: 98400 81136.