Published:Updated:

ஊழிக்காலம் - 17: காலநிலை மாற்றம் மனநலத்தைப் பாதிக்குமா?

காலநிலை மாற்றமும் மனநிலை பாதிப்பும்
News
காலநிலை மாற்றமும் மனநிலை பாதிப்பும்

Trigger warning: இந்தக் கட்டுரையில் தற்கொலை, தீவிர மனநல பாதிப்பு, போதைப் பழக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

Published:Updated:

ஊழிக்காலம் - 17: காலநிலை மாற்றம் மனநலத்தைப் பாதிக்குமா?

Trigger warning: இந்தக் கட்டுரையில் தற்கொலை, தீவிர மனநல பாதிப்பு, போதைப் பழக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

காலநிலை மாற்றமும் மனநிலை பாதிப்பும்
News
காலநிலை மாற்றமும் மனநிலை பாதிப்பும்
"நல்வாழ்வு என்பது முழுமையான உடல், மன மற்றும் சமூக நலனை உள்ளடக்கியது" என்கிறது உலக சுகாதார நிறுவனம். மனநலம் இன்றி உடல்நலம் மட்டுமே இருப்பது முழுமையான நலன் அல்ல. ஆனாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கிற உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றின்மீதே பெரும்பான்மை வெளிச்சம் இருப்பதால் மனநலம் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.

மனநல மருத்துவர்களோ, "எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கிற மனநல பாதிப்புகள் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக மாறும்" என்று எச்சரிக்கிறார்கள். போரால் அழிந்த மக்களுக்கு மற்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டுவது வழக்கம். உலகின் எல்லா நாடுகளுமே மோசமான போர்ச்சூழலால் சீர்குலைந்திருந்தால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்... எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு அந்த அளவுக்கு மோசமானதாக இருக்கப் போகிறது. எல்லாருமே உருக்குலைந்து போயிருக்கும் நிலையில் பற்றிக்கொள்வதற்கான கரங்களை யாரால் நீட்டமுடியும்?!

புயல், வெள்ளம் ஆகியவை திடீர் நிகழ்வுகள். வறட்சி போன்ற நிகழ்வுகள் திடீரென்று வருவதில்லை என்றாலும் அவை கால அளவில் ஓரளவு குறுகியவை. கடல்மட்டம் உயர்தல், வெப்பநிலை அதிகரிப்பு போன்றவை நீண்டகாலப் பிரச்னைகள். இவை மூன்றுமே வெவ்வேறு வகையில் மனநலத்தை பாதிக்கின்றன.

மன அழுத்தம்
மன அழுத்தம்

அதீத வெப்பநிலை இருக்கும் இடங்களில் மக்களுக்குக் குடிப்பழக்கம் அதிகரிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. அதீத வெப்பம் நிறைந்த இடங்களில் தற்கொலையின் விகிதமும் அதிகம். அதீத வெப்பநிலை இருக்கும் இடங்களில், ஏற்கெனவே மனச்சிதைவுக்கு (Schizophrenia) ஆளாகியிருப்பவர்கள் மோசமான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். எதிர்பாராத பருவகால நிகழ்வுகள் ஓர் இடத்தில் தொடர்ந்து ஏற்படும்போது, அங்கு இருப்பவர்களின் சகிப்புத்தன்மை குறைந்து, மூர்க்கமும், குடும்ப வன்முறையும் அதிகரிக்கிறது. இயற்கைப் பேரிடர்கள், விபத்து, திடீர் இறப்பு, போர், பாலியல் அத்துமீறல் போன்ற மோசமான நிகழ்வுகளுக்குப் பிறகு அந்த நினைவுகள் ஒருவரின் மனநலத்தைத் தொடர்ந்து பாதிக்கும். இதை Post Traumatic Stress Disorder என்பார்கள். காலநிலை மாற்றத்தால் திடீர் பருவகால நிகழ்வுகள் அதிகரிக்கும்போது பலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

தீவிர பருவகால நிகழ்வுகளுக்குப் பின்னர் அந்த இடத்தில் இருக்கும் மக்களுக்கு அதீத பதற்றம், மனத்தொய்வு, துக்கம், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் இறந்துவிட்டார்கள் என்றபோதும் தான் மட்டும் பிழைத்திருக்கிறோம் என்பதால் வரும் குற்ற உணர்வு (Survivor Guilt), மன அசதி, போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது, தற்கொலை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் (Suicidal ideation) ஆகியவை ஏற்படலாம். கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மழையின் சத்தத்தைக் கேட்டாலே பதறி நடுங்கும் அளவுக்கு மன பாதிப்புக்கு உள்ளானார்கள். தீவிர பருவகால நிகழ்வுகளை எதிர்கொண்ட மக்களில் 50% பேருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வுக்கட்டுரை.

குழந்தைகள், வறியவர்கள், பெண்கள், ஏற்கெனவே மனநல பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். தீவிர பேரிடர் நிகழ்வுக்குப் பின்னால் வன்முறைகள் வெடிக்கும்போது அதில் குழந்தைகளும் பெண்களுமே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும். பாதுகாப்பற்ற சூழலில் தினம் வாழவேண்டி இருக்கிற பெண்களின் மனநலம் பாதிக்கப்படும். தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவது, தங்களை கவனித்துக்கொள்கிறபெற்றோர் எப்போது பதற்றத்திலேயே இருப்பது ஆகியவற்றை எதிர்கொள்ளும் குழந்தைகளின் மனநலம் சீர்குலைகிறது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

பனிசூழ் இடங்களில் வசிக்கிற மக்கள் பனிப்பாறைகள் உருகும்போது பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். க்ரீன்லாந்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இப்போதே பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். ஏற்கனவே வறண்ட பூமியில் இருப்பவர்கள் மேலும் வறட்சியை எதிர்கொள்ளும்போதோ, கடலோர மக்கள் கடல்மட்டம் உயர்வதால் பாதிப்புகளை சந்திக்கும்போதோ அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறுபவர்கள், அடையாள இழப்பு, புதிய இடத்தில் ஏற்படும் சமூக சிக்கல்களால் வரும் மனத்தொய்வு (Psychosocial malaise) போன்ற பல மனநல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

என்னதான் நாம் மீம்ஸ் மூலம் ஆசுவாசம் அடைந்தாலும், சென்னையில் பெய்கிற டிசம்பர் மழை ஏதோ ஒரு பீதியை நமக்குள் கிளப்புகிறது, இல்லையா? அடுத்தடுத்து பேரிடர்களை சந்தித்த மக்கள் எவ்வாறு மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். ரெட் அலெர்ட் என்கிற சொல் நமக்குள் சில நிழல் நினைவுகளை இப்போதும் கொண்டுவருகிறது. மின்சாரத்தைத் துண்டித்து மரங்களை வேரறுத்த ஒரு புயல், மீனவர்களைக் நடுக்கடலில் நாம் பறிகொடுத்த ஒரு புயல், டெல்டா மாவட்டங்களை சூறையாடிய ஒரு புயல், மொட்டைமாடியில் நின்றபடி உணவுக்காக நாம் காத்திருந்த ஒரு புயல் என்று குறுகிய காலத்துக்குள் எத்தனை சந்தித்துவிட்டோம்?!

சூழல் பதற்றம் (Eco anxiety)
சூழல் பதற்றம் (Eco anxiety)

"குழந்தை பெற்றுக்கொள்ளபோவதில்லை" என்று பல காலநிலை செயற்பாட்டாளர்களின் அறிவிப்புக்குப் பின்னால் உள்ள உளவியல் இதுதான். எதிர்காலம் நிலையற்றதாக இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். தவிர அவர்களே தீவிரமான சூழல் பதற்றத்தால் (Eco anxiety) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். "உண்மையில் நிலைமை அவ்வளவு மோசம்தான். அவர்களது பதற்றத்தை அதீதம் என்று ஒதுக்கிவிட முடியாது" என்று பல மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.மேலை நாடுகளில் இதற்காகவே சிறப்புப் பயிற்சிபெற்ற சூழல் உளவியல் ஆலோசகர்கள் (Eco therapists) இப்போதுதான் தயாராகிவருகிறார்கள்.

மனநலம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக உள்ள நம் நாட்டில் இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பது தெரியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க போகவேண்டும் என்றால், "சுத்தி இருக்குறவங்க பைத்தியம்னு நினைச்சிடுவாங்க" என்று தயங்குகிறோம். மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாத்திரை எடுத்துக்கொள்வதில் பல தயக்கங்கள் இன்னும் உண்டு.

"எங்க பாட்டி தாத்தாவெல்லாம் சைக்யாட்ரிஸ்ட் கிட்டயா போனாங்க, பாட்டு கேளு, வாக்கிங் போ, ப்ரேயர் பண்ணு எல்லாம் சரியாகிடும். நீ பிரச்சனைன்னு நினைச்சாதான் அது நோயா மாறும், கவனிக்காம விட்டு ரிலாக்ஸா இரு" என்று வெற்று அறிவுரைகளை வீசுகிறோம். மன நோய் காரணமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்ட பின்பு மட்டும், "முன்னாலேயே தெரிஞ்சிருந்தா...." என்று குற்ற உணர்வோடு பேசுகிறோம். மனநலம் சார்ந்த நம் பொதுத் தயக்கங்களால் நாம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. காலநிலை மாற்றம் சார்ந்த மனநலப் பிரச்னைகளை நாம் கவனிப்போமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

மனநல பாதிப்பு
மனநல பாதிப்பு

இதில் இன்னொரு பெருந்துயர் என்னவென்றால், காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பு அடைபவர்களும், பொதுவாக மனநலம் சார்ந்த சேவைகள் உடனடியாகக் கிடைக்காதவர்களும் ஒரே புள்ளியில் இருப்பதுதான். விளிம்புநிலை மக்கள், வறியவர்கள், பெண்கள் என்று இவர்கள் எல்லாருமே ஒரு சின்ன சமூக இடுக்குக்குள் விழுந்து காணாமலேயே போய்விடுகிறார்கள். சேவைகள் உடனடியாகக் கிடைக்காமல் போவதற்கு விழிப்புணர்வின்மை உள்ளிட்ட பல சமூகக் காரணிகள் உண்டு என்கின்றன சமூக மருத்துவ ஆய்வுகள்.

காலநிலை சார்ந்து மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்காக செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கும் காலநிலை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கும், இரக்க அசதி (Compassion fatigue) வந்துவிடும். இதை நாம் லேசாக எடுத்துக்கொள்ளமுடியாது. தொடர்ந்து பிறருக்காக உழைப்பவர்கள் காலப்போக்கில் அயர்ச்சியுறுவது இயல்பு. அவர்களின் மனநலனும் பேணிக்காக்கப்படவேண்டியதே. காலநிலை செயற்பாட்டாளர்கள் இரக்க அசதியாலும் பெருநிறுவனங்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களாலும் செயல்படுவதையே நிரந்தரமாகக் கைவிட்ட கதைகள் உலகெங்கிலும் உண்டு.

காலநிலை பற்றிய செயல்பாடுகள் மட்டுமல்ல, காலநிலை அச்சுறுத்தல் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வதுகூட பதற்றத்தை ஏற்படுத்தலாம். நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரிய பிரச்சனை, உலக நாடுகள் எல்லாம் நினைத்தால் மட்டுமே தீர்வு என்பதெல்லாம் மனித மூளைக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கும். இதைக் கையாள முடியாத மூளை உடனே "இதெல்லாம் நம்மால் முடியாது" என்று அந்த எண்ன ஓட்டத்தையே அறுத்துவிட்டு வேறு வேலை பார்க்க நம்மைத் தூண்டும். ஆனாலும் நாம் படித்த செய்திகள் நமக்குள் ஊறி, பதற்றத்தைத் துவக்கிவக்கின்றன். "காலநிலை மாற்றத்தைப் பற்றி நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால், பிறகு அதை மறக்கவே முடியாது, அந்த அளவுக்கு மோசமான பிரச்சனை அது" என்கிறார் டேவிட் வாலஸ் வெல்ஸ்.

மனநலம்
மனநலம்

காலநிலைப் பதற்றத்துக்கு என்னதான் தீர்வு? "காலநிலை மாற்றத்துக்கெதிரான செயல்பாடுகள்தான் பதற்றத்துக்குத் தீர்வு" என்கிறார்கள் செயல்பாட்டாளர்கள். அவர்கள் இதை வெறுமனே சொல்லவில்லை. தங்கள் பதற்றத்துக்கு செயல்பாடே தீர்வாக இருந்தது என்று அனுபவபூர்வமாக விளக்குகிறார்கள். "காலநிலை மாற்றத்துக்கெதிரான தீர்வுகளில் எதையாவது நான் செய்வதற்காகக் களத்தில் இறங்கினால் அது எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது" என்கிறார்கள்.

நமக்கான எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் நிச்சயம் தீர்வுகளை நோக்கி நகரவேண்டும் தீர்வுகளை விவாதிக்கவேண்டிய கட்டத்துக்கு வந்துவிட்டோம். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகள் என்ன? அவற்றை அமல்படுத்துவது யார் பொறுப்பு? தனி மனிதர்களான நமது பணி என்ன?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...