Published:Updated:

`மத்திய, மாநில அரசுகளின் பிடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்!’ - உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

துரை.நாகராஜன்

கடந்த 1965-ம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலம், 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக குறுகிவிட்டன.

pallikaranai
pallikaranai

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 100 ஏக்கருக்கும் மேல், மத்திய அரசு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதுப்பு நிலம்
சதுப்பு நிலம்

சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களும் முன்வந்து தாமாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமனை நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தாக்கல் செய்தார். அதில் `கடந்த 1965-ம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலம், 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக குறுகிவிட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி மாநகராட்சியின் இரண்டு குப்பைக் கிடங்குகளால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை 1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன.

பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர், தேசிய கடல் சார் கல்வி நிறுவனத்தால் 20.25 ஏக்கர், மத்திய காற்றாலைகள் நிறுவனம், மற்றும் பல தனியார் நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரங்களால் அரிய வகை பறவைகள் இனங்கள் தற்போது வருவதில்லை.

சதுப்பு நிலக் காடுகள் இல்லாமல் போனால் என்னவாகும்? #WorldMangroveDay

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரக் குப்பைக் கிடங்குகளை முழுமையாக அகற்ற வேண்டும். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம் 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவுக்குக் குறுகிவிட்டது. அங்கிருந்து சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளையும் அகற்ற வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆகஸ்ட் 21-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டது.