Published:Updated:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; அதிர்ச்சியில் காவிரி டெல்டா!

ஒ.என்.ஜி.சி கிணறு
ஒ.என்.ஜி.சி கிணறு

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் - எரிவாயு கிணறுகளால் இப்பகுதி மக்கள் பலவிதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில், மிகவும் அபாயகரமான நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள்
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் - எரிவாயு கிணறுகளால் இப்பகுதி மக்கள் பலவிதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் விதமாக, மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என அடுத்தடுத்து பல ஆபத்தான திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். இதன் பலனாக, கடந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்ந்லையில்தான் தற்போது இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் சேதுராமன், ``மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த 10-ம் தேதி சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய்க் கிணறுகளுக்கான சர்வதேச அழைப்பாணையை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 75 இடங்களுக்கான இந்த சுற்றில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியியும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளும் உள்ளன.

சேதுராமன்
சேதுராமன்

கடந்த மார்ச் 2016-ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுக்க கையகப்படுத்திய பகுதிகளில், ஆய்வின்போது வணிக ரீதியாக சாத்தியமில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சிறு மற்றும் நடுத்தர எண்ணெய் வயல்களை, சர்வதேச அளவில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே இரண்டு சுற்று ஏலம் முடிவடைந்துள்ளது.

இதன் முதல் சுற்றில், தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியும் இருந்தது. ஏற்கனவே கச்சா எண்ணெய்க்காக கையகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பகுதியில் HELP கொள்கை மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் கேஸ், டைட் கேஸ் உள்ளிட்ட பல வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாக நெடுவாசல் பகுதியில் மக்கள் பெரும் தொடர் போராட்டங்களை நடத்தினர், அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை ஏலம் எடுத்த, எண்ணெய் எடுக்கும் பணியில் முன் அனுபவம் இல்லாத ஜெம் லேபரட்டரி நிறுவனம் வேலைகளைத் தொடங்க மாநில அரசு தடை விதித்தது. அதேபோல் பாண்டிச்சேரி அரசும் தடை விதித்தது.

ஹைட்ரோகார்பன் திட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டம்
`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?
`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; தனிச்சட்டம்!' - சேலத்தில் அறிவித்த முதல்வர் பழனிசாமி

மேலும், காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வட்டத்தில், நெடுவாசலுக்கு அருகே உள்ள `வடத்தெரு’ பகுதியிலும், பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னார் வளைகுடா பகுதியிலும் (நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில்), ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி பெற்று சாத்தியமில்லா சூழலில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கைவிடப்பட்ட பகுதிகளில், நிலம் மற்றும் நீர் வளத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நீரியல் விரிசல் உள்ளிட்ட முறைகளை கையாள அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை நாங்கல் கவலையோடு பார்க்கிறோம். உடனடியாக மேற்கண்ட பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு