Published:Updated:

நிறம் மாறிய கடல்.. கரை ஒதுங்கிய மீன்கள்..! - பதறிய பாம்பன் மீனவர்கள்

இரா.மோகன்
உ.பாண்டி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். கண்ணுக்குத் தெரியாத அளவில் வளரும் இந்தக் கடல் பாசியை 'பூங்கோரை' என மீனவர்கள் அழைப்பது வழக்கம்.

குந்துகால் பகுதியில் கரை ஒதுங்கிய மீன்கள்
குந்துகால் பகுதியில் கரை ஒதுங்கிய மீன்கள் ( உ.பாண்டி )

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. மேலும், அப்பகுதியில் ஏராளமான சிறு வகையிலான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

கலர் மாறிய கடல்
கலர் மாறிய கடல்
உ.பாண்டி

ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல ஏதுவாக பாம்பன் குந்துகால் பகுதியில் தமிழக அரசு மீன் பிடித் துறைமுகம் ஒன்றை அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் இப்பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. துறைமுக கட்டுமான பணிகளுக்காகக் குந்துகால் கடற்கரை ஓரம் கற்கள் மற்றும் மணல்கள் கொட்டப்பட்டு கடல் நீரை (பிரேக் வாட்டர்) தேக்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று குந்துகால் துறைமுகப் பணிகள் நடைபெறும் கடற்கரைப் பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. மேலும், கடலின் அடியில் உள்ள பாறைகள் இடையே உயிர் வாழும் ஓரா, சிலிமீன் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிளிஞ்சான் மீன்கள் போன்றவை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதேபோல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை உள்ளிட்ட தீவுப் பகுதிகளின் கரையிலும் இதேபோல் மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இது குறித்து மீன்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

கரை ஒதுங்கிய மீன்கள்
கரை ஒதுங்கிய மீன்கள்
உ.பாண்டி

இதையடுத்து குந்துகால் கடலோரப் பகுதிக்குச் சென்ற விஞ்ஞானிகள் பச்சை நிறத்தில் காணப்பட்ட கடல் நீர் மற்றும் உயிரிழந்து நிலையில் மிதந்த மீன்கள் சிலவற்றையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தரப்பில் கூறுகையில், ''மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். கண்ணுக்குத் தெரியாத அளவில் வளரும் இந்தக் கடல் பாசியை 'பூங்கோரை' என மீனவர்கள் அழைப்பது வழக்கம். முழுமையான வளர்ச்சியடைந்த இந்தப் பாசிகள் கடலோரத்தில் ஒதுங்கியதால் கடல் நீரின் நிறம் மாறியிருக்கலாம். மேலும், இந்தப் பாசிகள் படரும் பகுதிகளில் வாழும் சிறு மீன்கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது'' என்றனர்.