Election bannerElection banner
Published:Updated:

ஐந்து நாட்களில் 6000 வீடுகள் சுத்தம்... மாணவர்கள் மூலம் அசத்தும் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி மாணவ விழிப்புணர்வு தூதர்கள்
சென்னை மாநகராட்சி மாணவ விழிப்புணர்வு தூதர்கள்

`இந்தப் பிரசார வீடியோ வெளிவந்த ஐந்தாவது நாளில், சுமார் 6,000 அரசுப் பள்ளி மாணவர்களின் வீடுகள் சுத்தமாகியுள்ளன. இந்த வரவேற்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை'

மழைக்கால நோய்களை விரட்டிட, வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், எதிர்பார்க்காத ரிசல்ட் வந்திருப்பதாக பூரிக்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

மாணவ விழிப்புணர்வு தூதர்கள்
மாணவ விழிப்புணர்வு தூதர்கள்

மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் சென்னையைப் பாதிப்பது வழக்கமாகிவிட்டது. துரைப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தொடங்கி, அடையாறு போட் க்ளப் ஏரியா பங்களாக்கள் வரை, கொசுக்கள் ராஜ்ஜியம் செய்யும். மாநகராட்சி அதிகாரிகள் எத்தனை முறை கொசுமருந்து அடித்தாலும், குப்பைகளை அள்ளினாலும் சரி, கொசுக்களின் உற்பத்தியை மட்டும் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இம்முறை அந்த வழக்கத்தை தகர்த்தெறிய அரசுப் பள்ளியில் பயிலும் 20,000 மாணவர்களை விழிப்புணர்வு பிரசார தூதர்களாக களமிறக்கி புதுமை படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை அளித்து, திட்டத்தை தொடங்கிவைத்தார, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள 281 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1.25 லட்சம் மாணவர்களில் இருந்து, 20,000 பேர் விழிப்புணர்வு தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர், கழிவுகளால் ஏற்படும் வியாதிகள் குறித்து இந்த மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், வியாதிகள் உருவாவதை எப்படித் தடுக்கலாம்? கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது எப்படி என்பது குறித்தும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ்கள், அவர்களது வீடு, சுற்றுப்புற ஏரியாக்களுக்கு அனுப்பப்படுகிறது. பள்ளி மாணவர்களை வைத்து வீதிப் பிரசாரம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்கள் பேசும் 30 நொடி விழிப்புணர்வு வீடியோவும் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக பிரசாரம் செய்யப்படும் இந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சியின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர், ``கடந்த ஆகஸ்ட் 2017-ம் ஆண்டு, சென்னையில் 1104 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆகஸ்ட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 196. குப்பைகள் எங்கும் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்துகிறோம். கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. தீபாவளி முடிந்த ஒரே நாளில் 85 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சரிசெய்ய முடியாது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Photo: P.Saravanakumar

இதனால்தான், பள்ளி மாணவர்களை விழிப்புணர்வுத் தூதர்களாக நியமித்து, மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பிரசாரம் செய்கிறோம். முதலில், டிஜிட்டல் முறையில் செய்யப்படும் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #CleanChennaiHealthyChennai என்கிற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. தங்கள் பிள்ளைகளை விளம்பரத்தில் பார்க்கும் பெற்றோர்கள், தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களையும் சுத்தமாக இருக்க அறிவுறுத்துகின்றனர்.

பிரசார வீடியோ வெளிவந்த ஐந்தாவது நாளில், சுமார் 6,000 அரசுப் பள்ளி மாணவர்களின் வீடுகள் சுத்தமானது எங்கள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. சில பெற்றோர்கள், மாநகராட்சியின் உதவி எண் 1913-ஐ தொடர்புகொண்டு புகாரளித்ததன் பெயரில், அவர்கள் பகுதியில் தேங்கியிருந்த பழைய பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த வரவேற்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒவ்வொருவரும் சுத்தம் சுகாதாரத்துடன் இருந்தால், எந்த மழைக்கால நோயும் நம்மை அண்டாது” என்றார்.

மாணவ விழிப்புணர்வு தூதர்கள்
மாணவ விழிப்புணர்வு தூதர்கள்

வழக்கமாக விளம்பர தூதர்களாக ஸ்டார் நடிகர்கள், நடிகைகள் தான் நியமிக்கப்படுவார்கள். முதல்முறையாக பள்ளி மாணவர்களை விளம்பர தூதர்களாக களமிறக்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னை சுத்தமானால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

`காலாவதி பைகளால் கொசு உற்பத்தி'- ஜொமொட்டோவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு