Published:Updated:

`நல்ல நாள்னா பரிசுதான் தரணுமா... மரமும் நடலாமே?!' - நங்கநல்லூரை பசுமையாக்கும் தன்னார்வலர்கள்

க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ் தன்னார்வலர்கள்
க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ் தன்னார்வலர்கள்

மரக்கன்றுகளை நடுவதாலோ விதைப் பந்துகளை வீசி எறிவதாலோ மட்டும் மரங்கள் தாமாக வளர்ந்து காடுகள் ஆகிவிடுவதில்லை. மரக்கன்றுகளுக்கான தேவையான பராமரிப்பை முறையாக வழங்குவதன் மூலமாகவே அவை உயிர்பெறுகின்றன. இதைத்தான் செய்து வருகிறது `க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ்' தன்னார்வலர்கள் குழு.

`க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ்' மூலம் நங்கநல்லூரை பசுமையாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் நங்கநல்லூரில் உள்ள தன்னார்வலர்கள். இவர்கள் புங்கன், பூவரசு, நாட்டு வாகை போன்ற 400-க்கும் மேற்பட்ட நாட்டு மரங்ளை நட்டு பராமரித்து வருகிறார்கள்.

`நாங்கள் மரங்கள் நட்டோம், ஹெலிகாப்டரில் விதைகளை வீசினோம்' என ஒரு காலத்தில் பெருமையாகக் கூறினார்கள். சொல்லப்போனால், சில காலம் முன்பு வரை அதுவே ட்ரெண்டாக இருந்தது. ஆனால், மரக்கன்றுகளை நடுவதாலோ விதைப் பந்துகளை வீசி எறிவதாலோ மட்டும் மரங்கள் தாமாக வளர்ந்து காடுகள் ஆகிவிடுவதில்லை. மரக்கன்றுகளுக்கான தேவையான பராமரிப்பை முறையாக வழங்குவதன் மூலமாகவே அவை உயிர்பெறுகின்றன.

Planting
Planting

இதைத்தான் செய்து வருகிறது `க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ்' தன்னார்வலர்கள் குழு. 8 வயது முதல் 75 வயது வரை, கிட்டத்தட்ட 200 தன்னார்வலர்கள் பள்ளி, அலுவலக நேரம் போக அவர்களின் ஓய்வு நேரத்தில் மரக்கன்றுகளை நடுவதிலும், பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் பலரைச் சென்றடைந்த `க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவுக்கு' பலர் விரும்பி தங்களால் முடிந்த உதவியை அளித்து வருவதாகவும் இதுவே தங்களின் வெற்றியை நோக்கிய பயணத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள் இந்த தன்னார்வலர்கள்.

தொடர்ந்து பேசிய தன்னார்வலர்கள் சிலர், ``நெருங்கிய நண்பர்களிடமிருந்து தொடங்கிய எங்கள் பயணம் சமூக வலைதளம் மூலமாகப் பல உறவுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நாங்கள் நட்டு வளர்த்த 400 மரங்கள், அது போக பராமரிப்பு கிடைக்காத பழைய மரங்களுடன் சேர்த்து 700-க்கும் மேற்பட்ட மரங்களுக்கு அரவணைப்பு கொடுப்பது என்பது இன்றோ நேற்றோ நடந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பாகத் தொடங்கிய பயணம் இது.

இந்தப் பகுதிகளில் மரங்கள் இருந்தால் வெயில் காலங்களில் நன்றாக இருக்குமே எனத் தோன்ற, ஏன் மரம் வளர்க்கக் கூடாது என நினைத்தோம். உடனேயே ஆரம்பிக்கத் தொடங்கினோம். மரம் நடுவதற்கு எவ்வளவு ஆழம் தோண்ட வேண்டும், எப்படி மண்வெட்டியைப் பிடித்து மண் வெட்ட வேண்டும் என எந்த முன் அனுபவமும் இல்லாமல் செயலில் இறங்கினோம், பலமுறை தோற்றோம். மரங்கள் நடும்போது பல விதமான சிக்கல்கள் எங்களுக்கு வந்துகொண்டே இருந்தன. மரக்கன்றை நட்ட அடுத்த நாள் போய்ப் பார்த்தால் மரம் நட்டதற்கான அடையாளமே இல்லாமல் இருக்கும். ரோட்டில் நட்டால் போதிய பராமரிப்பு கிடைக்குமா என்பது தொடங்கி பல கவலைகள் எங்களுக்கு இருந்தன.

ஒரு மரம் நடுகிறோம் என்றால், நட்டுவிட்டோம் என எண்ணிக்கையை கணக்கு காட்டுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதன் வளர்ச்சி சரியாக இருக்கிறதா, போதிய பராமரிப்பு கிடைத்து வருகிறதா என்பதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தோம். அதனாலயே நங்கநல்லூரில் உள்ள வீடுகளுக்குப் போய் வீட்டு நபர்களையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினோம்.

Plants
Plants

வீடுகளுக்கு அருகில் மரம் வளர்த்தால் வேர்கள் பில்டிங்கை சரித்துவிடும் என்னும் பரவலான பயம் பலரிடம் இருந்தது. எந்தெந்த மரங்கள் எவ்வளவு ஆழமாக அகலமாகப் பரவும் என்பதன் டெக்னிக்கல் நாலட்ஜை நாங்கள் முதலில் வளர்த்துக்கொண்டோம். பின், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு மரக்கன்றின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி காம்ப்ரமைஸ் செய்து மரத்தை வளர்க்கச் செய்வது முதல் எல்லா மரங்களும் ஒரே ரகமாக இருப்பதில்லை என்பது வரை புரிய வைத்து தைரியப்படுத்தி மரங்கள் வளர்க்க ஊக்கப் படுத்தினோம். வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை போன்ற நாட்டு மரங்களை வளர்க்க பழக்கப்படுத்தினோம்.

பிறந்தநாள், திருமண நாள் போன்ற நாள்களில் கிஃப்ட் கொடுப்பது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கான செயல். ஏன் அந்த முக்கிய வாழ்க்கை தினங்களைப் பதிவு செய்வது போல மரம் நடுதலை பார்க்கக் கூடாது எனத் தோன்றியது. முக்கிய தினங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடி பின் அவரே தன் கைப்பட மரம் ஒன்றை நடுவதற்கு ஊக்கப்படுத்தி நடவைக்கிறோம்.

வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மரக்கன்றுகள் நட, நம்மை அறியாமலே அதனுடன் ஒரு எமோஷனல் கனெக்ஷன் உருவாகுவதை நாங்கள் பார்த்தோம். நம்மைப் போலவே மரத்தையும் நாம் பராமரிக்க ஆரம்பித்துவிடுவோம் என்பதே அந்த முயற்சியின் ஆழமான சிந்தனை. அது எங்களுக்கு வெற்றியை அளித்தது.

வெயில் காலங்களில் புதிதாக மரங்கள் நடுவது என்பது சவாலான விஷயம். ஏற்கெனவே நட்ட மரங்களே தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகிக்கொண்டிருக்கும். போதாக்குறைக்கு குப்பைகளை மரங்களில் வீசுவார்கள். இவ்வளவு ஏன், சில பல நேரங்களில் குப்பை வீசாமலிருக்க பாதுகாப்புக்கு வைத்த வலைகளையும் சிலர் திருடிவிடுவார்கள். புதிய மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல், ஏற்கெனவே இருக்கும் வளர்ந்த மரங்களுக்குத் தேவையான உதவிகயும் அளித்து வந்தோம். மடிந்துபோகக்கூடிய நிலையிலிருந்த பல மரங்களைக் காப்பாற்றினோம். அப்படி மட்டுமே இதுவரை பராமரிக்கப்படாத 300 மரங்களுக்கும் மேல் பாதுகாத்திருக்கிறோம்.

க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ் தன்னார்வலர்கள்
க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ் தன்னார்வலர்கள்

இந்தப் பணிகளில் பல சவால்களையும் சந்தித்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்த எங்களுக்கு இவ்வளவு சப்போர்ட்டுடன் கூடிய டீம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மரக்கன்றுகள் நட்ட இடத்தை க்ளீன் செய்வது, மீண்டும் குப்பைகளை மக்கள் வீசாதபடி வலைகள் இடுவது எனப் பராமரிப்புப் பணிகளில் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டேதான் இருப்போம். மரம் நட்டுவிட்டோம், கடமை முடிந்தது என்பது இதில் கிடையாது!' என்கின்றனர் இவர்கள்.

`க்ரீன் நங்கநல்லூர் இனிஷியேட்டிவ்' போல சென்னையில் மற்ற இடங்களிலும் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடர வாழ்த்துகள் என்றோம்...

உடனேயே, ``எதற்காக நாங்கள் தொடர வேண்டும், மரம் என்பது எல்லாருக்கும் பொதுவான நன்மையை அளிக்கிறது அல்லவா! எங்களிடம் யாராவது `மரம் நடுறீங்களே... ரொம்ப நல்ல விஷயம், நன்றி' என்று சொன்னால் பிடிக்காது. `நன்றி' என்று கூறுவது பொறுப்பை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சிரித்த முகத்தோடு மறைமுகமாக சொல்வதாகவே எங்களுக்கு தோன்றுகிறது. இன்று நாங்கள் மரங்கள் நடுகிறோம், பாதுகாக்கிறோம்தான். அதற்காக இது எங்கள் கடமை மட்டும் கிடையாது, உயிருடன் வாழும் ஒவ்வொருவரின் கடமை" என்கின்றனர் இந்த தன்னார்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு