Published:Updated:

`எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கு தடை தொடரும்!' - வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

துரை.நாகராஜன்

சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எட்டுவழிச் சாலை திட்டத்துக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

எட்டு வழிச் சாலை பணிகள்
எட்டு வழிச் சாலை பணிகள்

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைக்குத் தடைவிதித்துக் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. அது தேர்தல் நேரம் என்பதால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அமைதிகாத்து வந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அளவீட்டு கல்லை அகற்றும் பணி
அளவீட்டு கல்லை அகற்றும் பணி

அப்போது மத்திய அரசு, "சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எட்டுவழிச் சாலை திட்டத்துக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம்" என்று பதிலளித்தது. மேலும், எட்டுவழிச் சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் எனவும், நிலம் அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது.

Vikatan

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "இந்த வழக்கைப் பொறுத்தவரை, மத்திய அரசு தாக்கல் செய்த மனு மற்றும் ஆவணங்களில் சில தவறுகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்த பிறகுதான் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். பணி தொடர அனுமதி தர முடியாது. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் விசாரணையை ஆகஸ்ட் 22-க்கு ஒத்திவைக்கிறோம்" என்றனர்.