Published:Updated:

`இங்கிலாந்து டு அமெரிக்கா!' - பூமியைக் காப்பாற்ற 16 வயதுப் பெண்ணின் 2 வாரப் படகுப் பயணம்

ஆ.சாந்தி கணேஷ்

துளியும் புகை வராத, சோலாரில் இயங்கும் படகில் கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தின் பிளைமோத்திலிருந்து நியூயார்க் வரை சென்றிருக்கிறார்.

Greta thunberg
Greta thunberg ( cdn.vox-cdn.com )

கிரேட்டா தன்பெர்க், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயதே ஆன இவர் இந்த வயதில் உள்ள எல்லாப் பிள்ளைகளையும்போல மாணவி மட்டுமல்ல, காலநிலை ஆர்வலரும்கூட. அதிலும் 2019-ம் வருடத்துக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரையில் கிரேட்டாவின் பெயரும் இருக்கிற அளவுக்கு, உலகின் காலநிலையின் பாதுகாப்புக்காக, புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக அமைதி வழியில் போராடி வருகிறார் இந்தச் சிறுமி. இது தொடர்பான விழிப்புணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்துவதற்காக, பள்ளியைப் புறக்கணித்துவிட்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்னால் தனியொரு சிறுமியாகத் தன் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார். பிறகு, இவருடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்துகொள்ள, அது இயக்கமாகவே மாறியது.

உலகின் பருவநிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்கு, சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து 'நார்மல் குழந்தைகளாக இருங்கள்' என்று சொல்லாதீர்கள்.''
கிரேட்டா தன்பெர்க்

பருவநிலைத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா எனப் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிற கிரேட்டா தன்பெர்க், பிரதமர் மோடிக்குக்கூட 'நமக்கு இருப்பது ஒரு உலகம்தான். அதைக் காப்பாற்றுங்கள்' என்று வேண்டுகோள் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். போராட்டங்களை அமைதி வழியில் நடத்தினாலும், 'உலகின் பருவநிலையில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டதற்கு சென்ற தலைமுறையினரே காரணம். நீங்கள் செய்தவற்றை நாங்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பார்த்து 'நார்மல் குழந்தைகளாக இருங்கள்' என்று சொல்லாதீர்கள் என்று தன் வார்த்தைகளில் ரெளத்ரம் காட்டுகிறார் கிரேட்டா.

கிரேட்டா தன்னுடைய 8 வயதில் இருந்து காலநிலை மாற்றங்கள் குறித்துப் பேசத் தொடங்கியுள்ளார். விமானங்கள் பறக்கும்போது வெளிப்படுகிற அளவுக்கு அதிகமான சூடு, சத்தம், வாயு போன்றவை சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் என்று கிரேட்டா சொன்னதால், பாடகியான அவருடைய அம்மாவும் நடிகரான அவருடைய அப்பாவும் தங்கள் வெளிநாட்டு புரோகிராம்களையே தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Greta thunberg
Greta thunberg
global.unitednations.entermediadb.net

இந்த அளவுக்கு சுற்றுப்புற சூழல் மீதும் காலநிலை மீதும் காதலுடன் இருக்கிற கிரேட்டா தன்பெர்க், 'நியூயார்க்கில் நடக்கவிருக்கிற காலநிலைத் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கடந்த இரண்டு வாரங்களாகத் துளியும் புகை வராத, சோலாரில் இயங்கும் படகில் இங்கிலாந்தின் பிளைமோத்திலிருந்து நியூயார்க் வரை சென்றிருக்கிறார். உடன் அவருடைய அப்பா மற்றும் உதவிக்கு இரண்டு பேர் சென்றிருக்கிறார்கள். அட்லாண்டிக் கடலில் இது சூறாவளி சீஸன். இவற்றையெல்லாம் தாண்டிதான் அமெரிக்கா, தென் அமெரிக்கா, பிரேசில் என்று பயணம் செய்யவிருக்கிறார் கிரேட்டா. தவிர, டிசம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாடு ஒன்றிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். ''இந்தப் பயணம் சற்றுக்கடினமாகத்தான் இருந்தது. நல்லவேளை எனக்குக் கடலில் பயணம் செய்யும்போது வருகிற உடல்பிரச்னைகள் எதுவும் வரவில்லை. நான் லக்கி'' என்கிற இந்தச் சிறுமியைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல், அவர் வழியில் செல்வதுதான் பூமிக்கும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நல்லது.