Published:Updated:

குளத்துக்கு அருகே குறுங்காடு; பட்டாம்பூச்சிகளின் `ஹாட் ஸ்பாட்' ஆன கோவை வெள்ளலூர் குளம்!

கோவை வெள்ளலூர் குளம் ( TRAVELER B )

வெள்ளலூர் குளத்திற்கு 150 வகையான பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 326 வகையான பட்டாம்பூச்சிகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது.

குளத்துக்கு அருகே குறுங்காடு; பட்டாம்பூச்சிகளின் `ஹாட் ஸ்பாட்' ஆன கோவை வெள்ளலூர் குளம்!

வெள்ளலூர் குளத்திற்கு 150 வகையான பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 326 வகையான பட்டாம்பூச்சிகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது.

Published:Updated:
கோவை வெள்ளலூர் குளம் ( TRAVELER B )

கோவை மாநகராட்சி சேகரிக்கும் மொத்த குப்பைகளையும் கொட்டும் இடம் தான் கோவை வெள்ளலூர் பகுதி. குப்பை கிடங்கு தீ பற்றி எரிவது, அதனை இடமாற்ற கோரி மக்கள் போராடுவது என்று சர்ச்சைக்குரிய பகுதியாகவே வெள்ளலூர் பகுதி இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வெள்ளலூர் பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் குளம் ஒன்று உள்ளது. அக்குளத்தை தேடி பல வகையான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் அதிக அளவு படையெடுப்பதை அறிந்து, அங்குச் சென்றோம்.

கோவை வெள்ளலூர் குளம்
கோவை வெள்ளலூர் குளம்
@mr_sh_r__f___

கோவையின்‌ புறநகர் பகுதியான வெள்ளலூர் பகுதிக்கு செல்லும் வழியெல்லாம் குண்டும் குழியுமான சாலைகள், ஆங்காங்கே புழுதியை கிளப்பிய படியாக செல்லும் குப்பை லாரிகள் என்று கோவை நகருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத படி இருந்தது கோவை வெள்ளலூர் பகுதி. அவற்றைக் கடந்து வெள்ளலூர் குளத்திற்கு சென்றடைந்தோம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தண்ணீர் மட்டுமே தெரிந்தது. அவ்வளவு பரந்து விரிந்த பரப்பளவை கொண்டது வெள்ளலூர் குளம். குளத்தின் கரைகள் அனைத்தும் மரங்களால் சூழப்பட்டிருந்தன. பறவைகளின் சத்தம் குளத்திற்கு சென்ற நம்மை, வரவேற்கும் விதமாக இருந்தது.

வெள்ளலூர் குளம்

ஏரிகளை, குளங்கள் என்று அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள் கோவை மக்கள். அதன்படி பார்த்தால், 90 ஏக்கர் பரப்பளவு கொண்டதுதான் கோவை வெள்ளலூர் குளம். நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைக்கப்பட்டதால், 12 வருடங்களாக வெள்ளலூர் குளம் தண்ணீர் இன்றி வறண்டு, சீமைக் கருவேல மரங்கள் நிரம்பி காட்சியளித்தது. 2017-ம் ஆண்டு, தனியார் அமைப்பான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அரசு சார்பாக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக 12 வருடங்களுக்குப் பிறகு வெள்ளலூர் குளத்திற்கு மீண்டும் தண்ணீர் வந்தது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன்
@mr_sh_r__f___

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டனிடம் பேசினோம். "2017-ம் ஆண்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. தன்னார்வலர்களின் உதவியுடன் தண்ணீர் வரும் வாய்க்கால்களில் அடைத்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினோம். வாய்க்கால் கரையோரமாக குடியிருக்கும் மக்களுக்கு தகுந்த இடம் வழங்க அரசிடம் மனு கொடுத்தோம். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் குளத்தை தூர்வாரினோம். ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குளத்தில் இருந்த சீமை கருவேலம் மரங்களை அகற்றினோம். 2018-ம் ஆண்டு மீண்டும் தண்ணீர் வரச் செய்தோம். அப்படியே விட்டுவிடாமல் வாரம், வாரம் ஞாயிற்றுக்கிழமை தன்னார்வலர்களை கொண்டு குளத்தை பராமரித்தும் வருகிறோம்.

மியாவாக்கி காடுகள்

' கோவையில் பசுமை பரப்பு குறைந்து வருகிறது. அதனை அதிகரிக்கும் வண்ணம் குளங்களை சுற்றி உள்ள புறம்போக்கு நிலங்களில் மியாவாக்கி காடுகளை உருவாக்கினோம். மியாவாக்கி முறை என்பது அகிரோ மியாவாக்கி என்கிற ஜப்பானிய தாவரவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை உலகமெங்கும் குறுங்காடுகளை சீக்கிரம் வளர்க்க பயன்படுகிறது. நெருக்க நெருக்கமாக மரக்கன்றுகளை வைப்பதன் மூலம் அவற்றுக்கிடையே ஒரு போட்டி உருவாகி, சீக்கிரம் வளரும் என்பதே அந்த முறை ஆகும்.

மரங்கள்
மரங்கள்

ஒரே வகையான மரங்களை அருகே வைக்கக் கூடாது. நிலத்தை நன்கு பதப்படுத்தி தாவரங்களுக்கு தேவையான உரங்களை மண்ணிற்குள் செலுத்திய பிறகே மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது 3 - 4 வருடத்திற்குள் குறுங்காடுகளை உருவாக்கிட முடியும். மியாவாக்கி முறையைப் பயன்படுத்தி இங்கு நாங்கள் செயற்கை காடுகளை அமைத்தோம். இங்கு 270 வகையான மர வகைகள், 500 -க்கும் மேலான தாவர வகைகள் தற்போது உள்ளன. குளக்கரையில் காடுகளை அமைத்ததால் நிலத்தடி நீர் உயர உதவியாக உள்ளது" என்றார் மணிகண்டன்.

பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ்பாட்

குளத்திற்கு அருகே குறுங்காடுகளை அமைத்ததால் இப்பகுதி, பல்லுயிர் வாழும் ஒரு இடமாக மாறிவிட்டது. வெள்ளலூர் குளத்திற்கு 150 வகையான பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 326 வகையான பட்டாம்பூச்சிகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 31 சதவிகிதம், அதாவது 101 வகையான பட்டாம்பூச்சிகள் வெள்ளலூர் குளத்திற்கு வருவதை கோயமுத்தூர் பட்டர்பிளை சொசைட்டி பதிவு செய்துள்ளது.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
@mr_sh_r__f___

வெள்ளலூர் குளம், அப்பகுதியில் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக மாறி உள்ளது. குளத்தை சுற்றி உள்ளப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. அதனால் இப்பகுதியில் விவசாயமும் கால்நடைகளின் வளர்ப்பும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்' என்றார் அந்த அமைப்பை சேர்ந்த கமலக்கண்ணன். தனியார் அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளைப் போல தமிழக அரசும் ஏரி, குளங்களை போன்ற நீர் நிலைகளை தூர்வாரி, பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.