Published:Updated:

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!
பிரீமியம் ஸ்டோரி
மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

தூரன் நம்பி

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

தூரன் நம்பி

Published:Updated:
மறுசுழற்சி என்னும் மகத்துவம்!
பிரீமியம் ஸ்டோரி
மறுசுழற்சி என்னும் மகத்துவம்!
வரலாற்றில் ஆலைக்கழிவுகளால் அழிந்துபோன ஆறுகள் ஏராளம். கோவை, திருப்பூர் மாவட்டங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதனாலேயே ஆலைக்கழிவுகளை மறுசுழற்சி செய்யத் தொடர்ந்து வற்புறுத்துகிறது அரசு.

இருப்பினும் ஆலைக்கழிவுகள் மேலாண்மையில் 100 சதவிகித சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி என்பது இப்போதும் சாத்தியமற்றதாகவே இருந்துவருகிறது. அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த விசுவநாதன்.

கோவை மண்டலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இரும்பு மற்றும் எஃகு உருக்கு வார்ப்படத் தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு விதமான ரசாயனங்கள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த ரசாயனக் கழிவுகள், மணல் மற்றும் கொதி கலன்களிலிருந்து வெளியேறும் கோலன் கட்டிகள். இந்த இரண்டும் நீர்நிலைகளை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல தொழிற்சாலைகளில் இந்தக் கழிவுகளை மனசாட்சியே இல்லாமல் நீர்நிலைகளில், பாதை ஓரங்களில், விளைநிலங்களில் அப்படியே கொட்டிவிடுகின்றனர். வெயில் மழை என மாறி மாறி இந்த ரசாயனக் கழிவுகள் தாக்கப்படும்போது நீர்நிலைகள் விஷமாகின்றன. நிலத்தடி நீரும் விஷமாகிறது. இந்த நீரைக் குடித்த கால்நடைகள் இறந்துபோகின்றன. நிலம் மலடாகிறது. இந்தச் சீரழிவிலிருந்து இயற்கையைக் காக்க உருவாக்கப்பட்டதுதான் விசுவநாதனின் பூஜியநிலை சுத்திகரிப்பு நிலையம். கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர்-சிறுமுகை சாலையில் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!
மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

‘`சில வருடங்களுக்கு முன்பு ஆலைக் கழிவு நீரைக் குடித்த ஆடுமாடுகள் இறந்துபோன செய்தி ஒன்றைப் படித்தேன். அது என்னை வெகுவாக பாதித்தது. நான் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்த பாதிப்பின் வலியை என்னால் உணர முடியும். இப்படிப்பட்ட கழிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்போதே முடிவெடுத்து ஆராய்ச்சியில் இறங்கினேன். கழிவுகளைச் சுத்திகரிக்கும் நுட்பங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினேன். சில முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆரம்பக் கட்டங்களில், பல்வேறு தோல்விகள், பொருளாதார விரயமும் ஏற்பட்டது. ஆனாலும் முயற்சியைத் தொடர்ந்தேன். அதன் விளைவால் இன்று, 25 கோடி முதலீட்டில் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வார்ப்படங்களிலிருந்து வெளிவரும் (Co2) கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த மணலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் ரசாயனக் கலவைகளைப் பிரித்துச் சுத்தப்படுத்திவிட்டால் அந்த மணலை மீண்டும் பயன்படுத்தலாம். எங்களுடைய மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தால் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் மணல் திரும்பக் கிடைத்துவிடும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் புதிய மணல் அள்ளப்படுவது தடுக்கப்படுகிறது. கழிவு மணலை பூமியில் கொட்டி, நீரை மாசுபடுத்துவதும் தடுக்கப்படுகிறது.

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

கூடுர் மணல் ஒரு டன் 3,600 ரூபாய் விலை. கொச்சி மணல் டன் 6,000 ரூபாய். எங்கள் கழிவு நீக்கும் தொழிற்கூடத்தில் சுத்திகரிப்பு செய்யும் போது, ஒரு டன் மணலுக்கு ரூ.500 மீதமாகிறது. நிறைய வார்ப்படத் தொழிற்சாலை அதிபர்கள் தங்களுடைய கழிவு மணலை இங்கே கொண்டு வந்து கொட்டிவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட மணலை மகிழ்ச்சியுடன் பெற்றுச்செல்கிறார்கள். இந்த முறையில் எங்களுக்குச் சில லட்சங்கள் செலவு குறைகிறது என மனம் திறந்து பாராட்டுகிறார்கள்’’ என்றார் மகிழ்ச்சியோடு.

`மணல் சுத்தமாகிவிட்டது. கழிவு நீரை என்ன செய்கிறார்கள்’ என்பதையும் விசாரித்தோம்.

‘`சாதாரணமாகக் கழிவு நீரில் 18,000 டி.டி.எஸ். அளவுக்கு அழுக்கு கடின நீராக இருக்கும். இந்தக் கழிவு நீரைச் சேகரித்து, ஆர்.ஓ. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும்போது 50% நீர் 1000 டி.டி.எஸ்ஸுக்குக் குறைவாக மாறும். மீதி 50 சதவிகித நீர் 30,000 டி.டி.எஸ் அளவுக்குக் கடினமாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் ஆர்.ஓ. இயந்திரம் மூலம் சுத்திகரித்தால் 80 சதவிகிதம் நீர் மறுபயன்பாட்டிற்குக் கிடைத்துவிடும். இறுதியில் மீதமுள்ள 20% கடின நீரைச் சுத்திகரிப்பது மிகவும் கடினமான வேலை. இந்த 20 சதவிகிதக் கடின நீரை (இதில் 2 லட்சம் அளவுக்கு டி.டி.எஸ் இருக்கும்) நேரடியாக பாய்லருக்கு எடுத்துச் சென்று, அதில் நீராவியைச் செலுத்தும்போது பெரும்பகுதி நீர் ஆவியாக மாறும். அந்த ஆவி குளிர வைக்கப்படும்போது, மீண்டும் சுத்தமான நீர் கிடைத்துவிடுகிறது. மேலும், சவ்வூடு பரவல் முறையில் மீதமுள்ள கடின நீரும் ஆவியாக்கப்படும்போது, கடினமான உப்பு அடியில் தங்கிவிடும். ஆக 100 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படுவதால், தேவையில்லாமல் தண்ணீர் சுரண்டப்படுவது குறைகிறது.

கடின உப்பு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக எடுத்துச்செல்லப்படுகிறது.இப்படிக் கழிவு நீரும், கழிவு மணலும் இங்கு 100% சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் தொழிற்கூடத்திலிருந்து பூஜிய நிலை கழிவு மட்டுமே வெளியேற்றப்படுகிறது’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

மறுசுழற்சி என்னும் மகத்துவம்!
மறுசுழற்சி என்னும் மகத்துவம்!

``இது மட்டுமல்ல, வார்ப்படத் தொழிற்கூடங்களில் பல நிலைகளில் கழிவு உருவாகும். அந்தக் கழிவுகள் காற்று உறிஞ்சான் மூலம் சேகரித்து, பெரிய பெரிய பைகளில் அடைத்துவைக்கப்படும். சேகரிக்கப்பட்ட நுண்ணிய மணல் துகளுடன் சிமென்ட் கலந்து தளம் அமைக்கப் பயன்படுத்துகிறோம். (Slag) சாதா உலைக்கலன்களில், கரி மற்றும் மண் இரும்பு கலந்து எரிக்கப்படும்போது வெளியேறும் கோலான் கழிவுக்கட்டிகளைப் பாதையமைக்க ஜல்லிக்கற்களாகவும், துகள்கள் மற்றும் சுத்திகரிக்கப்படும்போது சிதறிவிழும் கறுப்பு மணலையும், கறுப்புத் தூசியையும் செங்கல் சூளைக்குக் கொடுத்துவிடுகிறோம். 75 சதவிகிதம் செம்மண், 25 சதவிகிதம் கறுப்பு மணல் மற்றும் கறுப்புத் தூசி கலந்து செங்கல் தயாரிக்கலாம். இந்தச் செங்கல்லின் எடைதாங்கும் சக்தி, வழக்கமான செங்கல்லைவிட உறுதித்தன்மை கூடுதலாக இருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,67,000 டன் கழிவுமணலை பல்வேறு பவுண்டரிகளிலிருந்து பெற்று சுத்திகரிப்பு செய்து மறுபடியும் பவுண்டரிகளுக்கே வழங்கியிருக்கிறோம். இந்த மணலை மறுபடியும் 50 முறை சுத்திகரிப்பு செய்து பவுண்டரிகளில் பயன்படுத்தலாம். 25 முறை பயன்படுத்தினால் கூட 41,75,000 டன் புதிய மணல் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தொழிற்சாலை உற்பத்தி என்பது அவசியமாகிவிட்ட காலத்தில் மறுசுழற்சி ஒன்றே தீர்வு என உலகமே ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி நம் நீர்நிலைகளைக் காக்கும் விசுவநாதன் நிச்சயம் போற்றதலுக்குரியவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism