Election bannerElection banner
Published:Updated:

`சிறந்த தண்ணீர் போராளி...' நீர் மேலாண்மைக்கான மத்திய அரசு விருது வென்ற கோவை இளைஞர்!

மணிகண்டன்
மணிகண்டன்

கோவை சமூக ஆர்வலர் மணிகண்டனுக்கு, நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் தென்னிந்தியாவின் சிறந்த தண்ணீர் போராளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் குளம் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. அந்தக் குளத்துக்கு 6.5 கி.மீ ராஜவாய்க்கால் வழியாக நொய்யல் பயணம் செய்யும். இதன் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. குளத்தில் நீர் நிரம்பும்போது எல்லாம், அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் எளிதாகக் கிடைத்து வந்தது. ஆனால், வரலாறு மாறியது. ஆக்கிரமிப்பு வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றால் வெள்ளலூர் குளம் அடைக்கப்பட்டது.

களப்பணி
களப்பணி
``கால்வாய்கள் வேண்டாம்; கான்கிரீட் குழாய்களே சரி!" - மூத்த பொறியாளரின் நீர் மேலாண்மை ஐடியா

அந்தக் குளத்தின் மதகுகளையும் குப்பைகள் அடைத்துவிட்டன. அதன் பிறகு, ஒரு சொட்டு தண்ணீர்கூட குளத்துக்கு வரவில்லை. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. குளத்துக்கு தண்ணீர் வர சில நல்உள்ளங்கள் செய்த முயற்சியும் பெரியளவு கைகொடுக்கவில்லை. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தவுடன், சில இளைஞர்கள் இணைந்து கோவை நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

வாரத்தின் 6 நாள்கள் சொந்தப்பணி, ஞாயிற்றுக்கிழமை குள களப்பணி. ஐ.டி, வங்கி ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் என்று ஏராளமானோர் இணைய அது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பானது. வெள்ளலூர் குளத்தில் அவர்கள் களமிறங்கினர். இவர்களின் களப்பணியைப் பார்த்து, அரசும் அவர்களுக்குத் துணை நின்றது. ஆக்கிரமிப்புகளும் குப்பைகளும் அகற்றப்பட்டன. குளமும் ராஜவாய்க்காலும் தூர்வாரப்பட்டன. வரலாறு திரும்பியது.

நீர் மேலாண்மைக்கான விருது
நீர் மேலாண்மைக்கான விருது

குளத்துக்குத் தண்ணீர் வந்தது. அவர்களின் தொடர் முயற்சியால், அது நிலைக்கவும் செய்தது. இப்படி கோவையின் பல நீர்நிலைகளில் களப்பணி செய்துவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 2019-ம் ஆண்டில் (தென்னிந்தியா) `பெஸ்ட் வாட்டர் வாரியர்’ விருதுக்கான முதல் பரிசை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ``பள்ளிப் பருவத்தில் இருந்தே சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகம். நண்பர்களுடன் இணைந்து மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு, ரத்த தானம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தேன். குறிச்சி குளம் வறண்டிருந்தபோது, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் களப்பணியில் ஈடுபட்டோம். பின்பு, 2017-ம் ஆண்டு கடும் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. ஜல்லிக்கட்டு முடிந்த அந்தக் காலகட்டத்தில், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று இளைஞர்களிடம் அதிக ஆர்வம் இருந்தது.

களப்பணி
களப்பணி

அப்படிப்பட்ட இளைஞர்களை ஒன்றிணைத்தோம். கடந்த 4 ஆண்டுகளாக நொய்யல் ஆறு, அதைச் சுற்றியுள்ள குளங்கள், குட்டைகள், கிணறுகள், தடுப்பணைகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை 176 வாரங்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளோம். 113 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நீர்நிலைகளில் இருந்து அகற்றியுள்ளோம்.

7,500 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க, மியா வாக்கி முறையில் 6,000 மரங்கள் நடப்பட்டு அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. 10,000 மரக்கன்றுகள், மூலிகைச் செடிகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். 1,36,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. எந்திரங்களின் உதவியுடன் 400 ஏக்கர் சீமைக் கருவேலமுள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. 19.5 கி.மீட்டர் நீர்வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

வெள்ளலூர் குளம்
வெள்ளலூர் குளம்

அடுத்தகட்டமாக, நொய்யலை ஓர் உயிரோட்டம் உள்ள நதியாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். நமது தொன்மை வாய்ந்த நீர்நிலைகளின் வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகள் மற்றும் பல்லுயிர்ச் சூழலைக் காத்திடும் வகையில் நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், ஓடைகள் அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

நொய்யல் நதியில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வேண்டும். நொய்யல் மற்றும் அதன் கிளை நதிகளில் நடக்கும் கனிம வளக்கொள்ளையைத் தடுக்க வேண்டும். நதிக்கரை நாகரிகம்தான் நம் கலாசாரம். ஆனால், அந்த நதிக்கரை இப்போது சாக்கடையாகி நாறிக்கொண்டிருக்கிறது. கல்வியில் தொடங்கி உணவு, உடை, வேலை வரை எல்லாமே சமூகத்தில் இருந்துதான் நமக்குக் கிடைக்கிறது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

ஆனால், அதில் கிடைக்கும் பலனை தனிமனித வாழ்வுக்குதான் பயன்படுத்துகிறோம். கற்ற கல்வியையும், செல்வத்தையும் சிறிதளவாவது சமூகத்துக்கு பயன்படுத்த வேண்டும். அதில் கிடைக்கும் மாற்றத்தால் பயனடையப் போவதும் நாம்தான்” என்றார் உறுதியான குரலில்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு