Published:Updated:

`கோமல் கிராமத்தில் குளிர்பிரதேசப் பறவைகள்!' -குத்தாலத்துக்கு வருகை தந்த ஆச்சர்ய பின்னணி

மாலை 6 மணியளவில் மீண்டும் கோமல் கிராமத்துக்கு வந்து அங்குள்ள தேக்கு, மூங்கில் போன்ற உயர்ந்த மரங்களில் தங்குகின்றன.

மயிலாடுதுறை அருகே கோமல் கிராமத்தில் முதல்முறையாக இந்த ஆண்டு இரைக்காகவும் இனவிருத்திக்காகவும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளன. பறவைகளைக்கண்டு அக்கிராம மக்கள் பரவசமடைகின்றனர்.

பறவைகள்
பறவைகள்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே குத்தாலம் வட்டத்தில் உள்ளது கோமல் கிராமம். பசுமை நிறைந்த இந்தக் கிராமத்தில் முதல்முறையாக கடந்த 10 நாள்களாக சதுப்பு நில கொக்கு என்றழைக்கப்படும் பூநாரைகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து தங்கியுள்ளன.

இப்பறவைகள் விடியற்காலையில் இரைதேடிப் புறப்பட்டுச் செல்கின்றன. இக்கிராமத்தைச் சுற்றி விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வயல்களில் கிடைக்கும் புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. மாலை 6 மணியளவில் மீண்டும் கோமல் கிராமத்துக்கு வந்து அங்குள்ள தேக்கு, மூங்கில் போன்ற உயர்ந்த மரங்களில் தங்குகின்றன. இன்று வரை இவைகள் கூடுகளைக் கட்டவில்லை.

Vikatan

கோமல் அரசுப் பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் செந்திலிடம் பேசினோம். ``வெண்ணிறத்தில் காணப்படும் இப்பறவைகளின் கழுத்தின் மேல்புறத்திலும், மார்புப் பகுதியிலும் லேசான ஆரஞ்சு நிறத்திட்டுகள் காணப்படுகின்றன. இப்பறவைகள், பொதுவாக குளிர் பிரதேசங்களில் இருந்து இரைக்காகவும் இனவிருத்திக்காகவும் சாதகமான பகுதிகளை நோக்கி, பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து பறந்து வந்திருக்கலாம்.

செந்தில்
செந்தில்

தன்னுடைய இருப்பிட அழிப்புக் காரணமாக இயல்பான இடத்திலிருந்து புது இடமாக கோமல் கிராமத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். இந்த சீசனுக்கு இதுபோன்ற பறவைகள் இரான், இராக், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வருவதுதான் வழக்கம்.

அங்குள்ள உப்பு உற்பத்தி செய்யும் வயல்களில் அவற்றுக்குத் தேவையான உணவுகள் கிடைக்கும். முதன்முறையாக எங்கள் கிராமத்துக்குப் பறவைகள் வெகுவாக வந்திருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் அவற்றைக் கண்டு ரசிக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு