Published:Updated:

`30 வருஷமா நாத்து விக்கிறேன்; மனசு நிறைவா இருக்கு' - குன்னூரை பசுமையாக்கும் `மர பாட்டி' சரஸ்வதி!

சரஸ்வதி பாட்டி
சரஸ்வதி பாட்டி ( கே.அருண் )

தள்ளாத முதுமையிலும் மனம் தளராமல் கூடை நிறைய மரக்கன்றுகளை சுமந்து தெருத்தெருவாக விற்று சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்து குடும்ப பாரத்தையும் சுமக்கும் மர பாட்டி எனும் சரஸ்வதி பாட்டி.

தலையில் மூங்கில் கூடை நிறைய மரக்கன்றுகளை சுமந்தபடி நடந்துகொண்டிருந்த ஒருவர் திடீரென பெய்யத் தொடங்கிய சாரல் மழைக்கு ஒதுங்க நடைபாதை ஓரத்தில் கூடையை இறக்கி வைத்து சற்றே இளைப்பாறியபடி மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு தனது கூடை அருகில் உடகார்ந்துகொண்டார். அந்த வழியில் நடந்துசெல்லும் சிலர் நாற்றுகளின் விலையை விசாரிக்கின்றனர், சிலர் பார்த்தும் பாராமல் கடந்து சென்ற வண்ணம் உள்ளனர். முதியவர் ஒருவர் இரண்டு எலுமிச்சை நாற்றுகளை வாங்கி கவனத்துடன் கையில் பிடித்தபடி நகர்ந்தார். ஒல்லியான தேகம் சுருக்கங்கள் அதிகம் என்றாலும் சிரித்த முகத்துடன் ஊட்டி குளிருக்கு அடர் சிவப்பு நிற ஸ்வெட்டரில் வெள்ளந்தியாய் அமர்ந்திருந்த அவரிடம் பேசினோம்.

சரஸ்வதி பாட்டி
சரஸ்வதி பாட்டி
கே.அருண்

எந்த நாத்து வேணும் என்று துவங்கிய அவர் ``30 வருஷமா ஊர் ஊரா போயி நாத்துகள விக்கிறேன். எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, கறிவேப்பிலை, கொய்யானு நானும் எங்க வீட்டுக்காரரும் ஒன்னா சேந்து நாத்துகள வாங்கி கூடையில வச்சி நடந்தே எல்லா பக்கமும் போயி விப்போம். இதுல வர காச வச்சித்தான் கஞ்சி குடிப்போம். ரெண்டு பசங்களயும் இத வச்சிதான் வளர்த்தோம்.

திடீர்னு ஒரு நாள் வீட்டுக்காரர் இறந்துட்டார். அதுக்கு அப்புறம் எப்படி வாழப்போறோம், பசங்கள எப்படி கறை சேர்க்க போறேன்னு தெரியல என தவிச்சேன். சரி நமக்கு தெரிஞ்ச தொழில் இதான்னு திரும்பவும் மரக்கன்றுகள வாங்கி தலையில வச்சிக்கிட்டு எம்பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னைக்கி முப்பது வருஷம் ஆச்சி. இன்னைக்கும் பசங்கள பேரன்களை பாத்துக்குறேன் அவங்களுக்கு நானே காசு குடுக்குறேன்.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாற்றுகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாற்றுகள்
கே.அருண்

தினமும் சிறுமுகையில் இருந்து ஊட்டிக்கு பஸ்ல வருவேன் எனக்கு 50 ரூபாய், கூடைக்கு லக்கேஜ் 25 ரூபாய் டிக்கெட் செலவு ஆகும். நாத்து வித்தா கெடக்கிற காசுல கொஞ்சம் சாப்பிடுவேன். சில நாள் அதுவும் இருக்காது. சில நாள் மொத்தமும் வித்து தீரும் சில நாள் ஒன்னுக்கூட விக்காது இருந்தாலும் வேற எந்த வேலை செய்யிறதவிட எனக்கு இந்த நாற்றுகளை தூக்கி சுமந்து விக்கிற வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. மனசுக்கும் சந்தோஷமா இருக்கு. பல வருஷமா குன்னூர் தூதூர் மட்டம் பகுதியில் இருந்தோம். இப்போ குடும்பத்தோட சிறுமுகை போயிட்டோம்.

இந்த நாத்து, இங்க இருக்க ஜனங்க மட்டும்தான் எனக்குப் பழக்கம். சிறுமுகை போனாலும் நாத்துகள தூக்கிட்டு பஸ்ல இங்க வரேன்” என்றார். மீண்டும் நம்மிடம் பேசிய சரஸ்வதி பாட்டி ``இந்த கையால பல ஆயிரம் மர நாற்றுகளை வித்துருக்கேன். சில வருஷம் கழிச்சி பாக்குறப்போ மரமா வளர்ந்து பூத்தும் காய்த்தும் நிக்கும். அத பாக்கவே மனசு சந்தோஷமா இருக்கும்" என்று கூற தூறலும் நிற்க கூடையை தலையில் சுமந்தபடி மீண்டும் நடக்கத் தொடங்கினார் `மர பாட்டி' சரஸ்வதி.

சரஸ்வதி பாட்டி
சரஸ்வதி பாட்டி
கே.அருண்

பெரிய வருமானம் ஏதும் இல்லாவிட்டாலும் மரங்களோடும் மனிதர்களோடும் அன்பை மட்டுமே காட்டும் சரஸ்வதி பாட்டி மனதில் பசுமையான நாற்றுகளும் மரங்களுமே நிழலாடுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு